பொருளாதாரம் போற போக்கு குறித்த ஒரு சர்வே ரிப்போர்ட்- அருண் ஜெட்லி தாக்கல்
2016-17ஆம் நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஒரு ஆய்வறிகையை தாக்கல் செய்தார்.இந்த பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தலைமையிலான குழு தயார் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.தாக்கலான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். நோட்டு விநியோகம் சீரடைந்தால் 2017-18 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 மற்றும் 7.5 சதவீதத்துக்கு இடைப்பட்டதாக இருக்கும். நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக சரிவடையும். அமெரிக்க அதிபர் தேர்தலும், சந்தையின் இறுக்கமான சூழலும் வளர்ச்சிக்கு ஆபத்தானதாக உள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியான சூழல் பொருளாதார வளர்ச்சியில் 0.25 சதவீதம் முதல் 0.5 சதவீதம் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நீண்ட கால அடிப்படையில் இந்த நடவடிக்கை நன்மை பயப்பதாக இருக்கும்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் இதர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவீதமாக உயரும்.
கடந்த ஆண்டில் 7.4 சதவீதமாக காணப்பட்ட தொழில்துறை வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 5.2 சதவீதமாக குறையும். சேவை துறையின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 8.9 சதவீதமாக இருக்கும்.
தனிநபர் வருமான வரி, வீட்டு வசதிக்கான முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். அதேபோன்று நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறை வளர்ச்சி 1.2 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.1 சதவீதமாக இருக்கும்.
ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் உடனடி பலன்களை எதிர்பார்க்க முடியாது.
உயர் மதிப்பு ரூபாய் வாபஸ் நடவடிக்கை சர்க்கரை, பால், உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.