September 23, 2021

எனக்கு மினிஸ்டர் போஸ்டிங் வேணாம் – அருண் ஜெட்லி கடிதாசு!

நாடு முழுவதும் பார்லிமெண்ட் தேர்தல்  7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 352 இடங்களை பிடித்து மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. நரேந்திர மோடி, நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் இறுதி செய்து வருகிறார்.

இந்நிலையில், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என தற்போது மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”உடல்நலம் மற்றும் சிகிச்சையை கருத்தில்கொண்டு புதிதாக அமைய இருக்கும் பாஜக தலைமையிலான அரசில் பங்கு கொள்ள நான் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

”ஏற்கனவே இது குறித்து வாய்மொழியாக பிரதமர் மோடியிடம் நான் தெரிவித்துவிட்டேன். எனினும், முறைப்படி கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதியுள்ளேன். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம்” என அருண் ஜேட்லி கேட்டுக்கொண்டார்.