January 29, 2022

அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு!

ஜி.எஸ். டி. வரியுடன் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றதும் உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சையை அவர் செய்து கொண்டார். அதன் பின்னர், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அருண் ஜெட்லிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறு இருப்பதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கிருமி தொற்ற ஏற்படும் என்பதால் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியதால், அவர் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் பதவியேற்கவில்லை. பதவியேற்காத ஐந்து எம்.பி.-க்களில் அவரும் ஒருவர்.

இந்த சூழலில், அருண் ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படலாம் எனவும், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.