“‘திருவின் குரல்’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் -அருள்நிதி பெருமிதம்!

“‘திருவின் குரல்’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் -அருள்நிதி  பெருமிதம்!

லைகா புரொடக்‌ஷன்ஸ், பெரிய பட்ஜெட் பிளாக் பஸ்டர் படங்களை மட்டும் தயாரிக்காமல், அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயத்தையும் வென்ற உள்ளடக்கம் சார்ந்த பொழுது போக்கு படங்களைத் தயாரிக்கும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்த வரிசையில் இந்நிறுவனம் தயாரித்து இருக்கும் 24-வது படமான ‘திருவின் குரல்’ (Voice of Thiru) நாளை ஏப்ரல் 14 – ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார்.  அப்பா மகன் உறவை போற்றும் விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிஷ் பிரபு. சாம்.சி.எஸ் இசையில் இந்தப் படத்தில் வரும் அப்பா பாசத்தை விளக்கும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் இந்தப் படம் பற்றி பேசினார் அருள்நிதி.

“அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும், சில படங்கள் மட்டுமே நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அது போன்ற படம்தான் இந்த ‘திருவின் குரல்’.இந்தப் படத்தில் நான் சிறப்புத் திறனாளியாக நடிக்கிறேன். இதில் எனக்கு பேச்சுத்திறன், செவித்திறன் அளவில் மாற்றுத் திறனாளி பாத்திரம். இதற்கு முன் இதே போன்று ராதா மோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ படத்தில் நடிச்சிருக்கிறேன். என்னுடைய கலைப்பயணத்தில் நான் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது பிருந்தாவனம் படம்தான். அதற்குப்பின் இந்தப் படத்தில்தான் எனக்கு அதைப் போன்று சவாலான வேடம் கிடைத்திருக்கிறது. பிருந்தாவனத்தில் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய, செய்கை மொழியை கற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடித்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அப்படி நடிக்கவில்லை. ஏனென்றால் நான் விஷயத்தைப் புரிய வைப்பதை விட பிற பாத்திரங்கள் எனக்கு புரிய வைக்கும் விதத்தில்தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஹாஸ்பிட்டலை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் எனது. தந்தையாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். அவருடன் நான் இணைந்து நடித்ததில் என் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதில் என் அப்பாவும் ஒருவர். இந்தப் படத்தில் அப்பாவுக்காக வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் இப்போது பிரபலமாக இருக்கிறது. அந்தப் பாடல் குறித்து என் அப்பாவிடம் ஒரு முறை வைரமுத்து சிலாகித்து சொல்லியிருக்கிறார்.

பாரதிராஜா சாருடன் நடிக்கப் போகிறோம் என்றதும் முதலில் எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் படப்பிடிப்பில் ஒரு குழந்தையைப் போல அவர் இயல்பாக நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரிடம் மிகவும் இயல்பாக பழகிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் விளையாட்டாக “உங்களைப் பற்றி நிறைய நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இயக்கும்போது அடிப்பீர்களாமே. ஆனால் உங்களைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிறகு ஏன் உங்களைப் பற்றி எல்லோரும் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை..!” என்றேன்.

அப்போது அவர், ‘நான் டைரக்ட் செய்யும் போது வேற மாதிரி இருப்பேன்டா’ என்று சொன்னார். பிறகு நான் கேட்டுக் கொண்டதற்காக, அப்படத்தில் வரும் ஒரு காட்சியை என்னை வைத்து டைரக்ட் செய்தார். அது நானும் ஆத்மிகாவும் பங்குபெறக்கூடிய ரொமாண்டிக் காட்சி. அதற்கு ஒருவர் ஒருவருக்கொருவர் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். ஆனால் நான் பார்க்கும்போது ஆத்மிகா திரும்பி விடுவார், அதேபோல் ஆத்மிகா பார்க்கும் பொழுது நானும் திரும்பி விடுவேன். இப்படிதான் எங்கள் ரொமான்ஸ். ஆனால் இதை பார்த்துவிட்டு பாரதிராஜா சார், உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காதா? என மைக்கில் நேரடியாக கேட்டுவிட்டார். “உனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. உங்களுடைய உடல் மொழியும் முக பாவங்களும் சரியாக இல்லை..!” என்று மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டே இருந்தார். “ஐயோ போதும் சார்… தெரியாமல் கேட்டு விட்டேன்..!” என்று நானே ஜகா வாங்கிக்கொண்டேன். அவரது இயக்கத்தில் நடிப்பது அத்தனை கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனாலும் பாரதிராஜா சாரிடம் நல்ல பையன் என்ற பெயரை நான் இந்தப் படத்தில் எடுத்திருக்கிறேன். ஆத்மிகா இந்தப் படத்தில் என் உறவுக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். எங்களுடன் இந்த படத்தில் வில்லன்களாக நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் உயரத்தில் ஒல்லியாக இருந்து நடிப்பில் மிரட்டி விட்டார்..!” என்று முடித்த அருள்நிதியுடன் இந்தச் சந்திப்பில் படத்தின் நாயகி ஆத்மிகா, இயக்குனர் ஹரிஷ் பிரபு உடன் இருந்தனர்.

“அருள்நிதியுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் ஒரு திறமையான கோ ஆர்டிஸ்ட். அதனால் என் நடிப்பும் கவனிக்கும்படி அமைந்தது..!” என்றார் ஆத்மிகா.

“இந்தப் படத்தில் அருள் நிதி மாற்றுத்திறனாளியாக நடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அது ஏன் என்பதை படத்தில் உணர்ந்து கொள்வீர்கள்..!” என்றார் இயக்குனர் ஹரிஷ் பிரபு. இப்படத்தை இயக்கியிருக்கும் ஹரிஷ் பிரபு, அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!