May 7, 2021

அர்னாப் கோஸ்வாமி-யின் புதுச் சேனலான ரிபப்ளிக் -மோடி ஆதரவு?

முன்னரே சொல்லி வந்தது போல்2017-ஜனவரி 26(குடியரசு தினத்தன்று) ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார் டைம்ஸ் நவ் டிவி சேனலின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டு விட்டார்.

aranab dec 17

கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையில் சிலகாலம் பணிபுரிந்து, என்டிடிவி சேனலில் பிரணாய் ராய்-வுடன்ஆரம்பத்தில் இணைந்தவரின் விடாப்பிடியான மைக் ஆர்வத்தைப் பார்த்து டைம்ஸ் நவ் செய்தி சேனல் இவரை இணைத்து கொண்டது . அந்த டைம்ஸ் நவ், ஈடி நவ் ஆகிய சேனல்களின் முதன்மை செய்தி ஆசிரியர் மற்றும் தலைவராக பணியில் இருந்தார். அர்னப் கோஸ்வாமி, தனது செய்தி விவாத நிகழ்ச்சி, ‘தி நியூஸ் ஹவர்’ ‘The News Hour’ மூலம் நாடெங்கும் பிரபலமாகி பல வருடங்களாக இதை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

சூடான விவாதங்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்த இந்நிகழ்ச்சியின் மூலம் டைம்ஸ் நவ் சேனலின் 60 சதவீத வருமானம் கிடைத்தது. அர்னாப் கோஸ்வாமியின் இரவு 9 மணி விவாத நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. விவாதத்தில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், வல்லுநர்களை கிடுக்குப்பிடி கேள்விகளால் துளைத்தெடுத்து பல இளைஞர்களை ‘அர்னாக் கோஸ்வாமி’யாக ‘கத்த’ வேண்டும் என கனவில் மிதக்க விட்டவர்.

2008 மும்பை தாக்குதலின் போது தொடர்ந்து 100 மணிநேரம் செய்திகளை லைவ்வாக தொகுத்து அளித்தவர். அத்துடன் காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், அன்னா ஹசாரே போராட்டம் உள்ளிட்டவற்றை விரிவாக பதிவு செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. அண்மையில் அர்னாப் கோஸ்வாமி, பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி விமர்சித்ததால் அவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் மத்திய அரசு அர்னாப்புக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்தது.அத்துடன் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கியவர் அர்னாப் கோஸ்வாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று டைம்ஸ் நவ் டி.வி சேனல் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அர்னாப் கோஸ்வாமி அறிவித்திருந்தார். சேனலை விட்டு சென்ற இறுதி தினம், அங்குள்ள ஊழியர்களிடம் பேசிய அர்னப் கோஸ்வாமி, தான் செய்தி சேனலையும் தாண்டி ஒரு சுதந்திரமான தனிப்பட்ட ஊடகம் ஒன்றை தொடங்க உள்ளதாக கூறினார். அதன்படி 2017 குடியரசு தினத்தன்று ரிபப்ளிக் என்ற புதிய டி.வி சேனலை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அர்னபின் நிறுவனம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் என்றும், பெங்களுருவை சேர்ந்த ஒரு பெரிய டிவி விநியோகஸ்தக குழுமம் மற்றும் செல்வாக்கு மிக்க விளம்பர ஊடகம் ஒன்றும் இவருடைய நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி ஆதரவும் இச்சேனலுக்கு உள்ளது என்று செய்தி கிடைக்கிறது.அதாவது மோடியின் தற்போதைய பணமிழப்பு திட்டத்தால் இழந்து வரும் செல்வாக்கை தக்க வைக்க முன்னரே கோஸ்வாமியை  கன்வின்ஸ் செய்து அதானியை சப்போர்ட் செய்ய சொல்லியிருந்தார் என்றும் அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் ஒரு புது சேனல் வர இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.