December 6, 2022

சர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா? ஊக வாணிப முறையா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டப் பின்னர் பிணையில் விடுதலையான ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிக்கு மீண்டும் ஒரு சிக்கல். இந்தியா பாலகோட் பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதை முன் கூட்டியே அறிந்திருந்தார் அர்னாப் என்று ஒரு வாட்ஸ்-அப் தகவல் வெளிவந்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல் அளித்தவர், பெற்றவர் என இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை இந்த விவகாரம் குறித்து அரசோ, பாஜகவே கருத்து எதையும் வெளியிடவில்லை. வாட்ஸ்-அப் தகவல் உண்மைதான் என்று ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தின் பின்னணியில் மக்கள் காண வேண்டிய ஒன்று 24 மணி நேர செய்திச் சேனல்களுக்கு அதிரடியாக செய்திகளை வழங்கி தங்களது பார்வையாளர் எண்ணிக்கையை அதிகம் காண்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அடிப்படையில் அச்சு ஊடகம் எப்படி ஆண்டுதோறும் சர்வே செய்து வாசகர்களின் எண்ணிக்கையை வெளியிடுமோ அது போல ஒவ்வொரு மாதமும் செய்தி சேனல்களும் தங்களது பார்வையாளர் எண்ணிக்கையை வெளியிடும். அதில் குறிப்பிட்டளவு பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் சேனலுக்கு அதிக மதிப்பு கிட்டும். இதன் மூலம் விளம்பரம்/வணிக ரீதியிலான வருவாய் பெருகும். இந்தியாவைப் பொறுத்த வரை ஆங்கில சேனல்களே அதிகமானப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளன. காரணம் மொழி அடிப்படையில் இந்தியா முழுதும் ஆங்கிலம் அறிந்தோர் இச்சேனல்களை பார்க்கும் வாய்ப்பு. மேலும் இந்தியாவில் வசிக்கும் அயல் நாட்டவரும் இவற்றையே காண வேண்டும். பிற ஆங்கிலப் பொழுது போக்கு சேனல்களை விட செய்திச் சேனல்களின் வீச்சு அதிகம், அதன் தேவையையும் புரிந்துக்கொள்ளலாம்.

இந்நிலை ஏறக்குறைய அரை டஜன் ஆங்கிலச் சேனல்கள் இருந்தாலும் முதல் நான்கு இடங்களில் டைம்ஸ் நௌவ், என் டி டி வி, நியூஸ் 18, ஹெட்லைன்ஸ் டுடே ஆகிய சேனல்களுக்கு இடையேதான் போட்டி. ஏறக்குறைய ஒரே பிரேக்கிங் நியூஸை நால்வரும் காட்டினாலும், செய்தியை வழங்கும் விதத்தில் மாறுபடுவதால் பார்வையாளர்களும் தங்களது விருப்பமானச் சேனலைத் தேர்வு செய்து காண்கின்றனர். மேலும் இச்சேனல்களுக்கு பிற சேனல்களை விட அதிக செல்வாக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பெரு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அயல்நாட்டு தூதரகங்கள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரைக் கலைஞர்கள் ஆகியோரிடத்தில் அபரிதமாக இருக்கிறது. குறிப்பாக இவை மத்திய அரசின் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறுகிறார்கள் என்பதை முன்கூட்டியே ஏறக்குறையத் துல்லியமாகச் சொல்வது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

அதே போல அரசின் முடிவுகள், அரசியல் கட்சிகளின் முக்கிய முடிவுகள் என எவற்றையுமே அலசி ஆராய்ந்து முன் கூட்டியே பார்வையாளர்கள் முன்னர் வைப்பது வழக்கம்.  குறிப்பாக அமைச்சரவைப் பட்டியிலையே வெளியிடும் இந்தச் சேனல்களுக்கு அரசின் முக்கிய முடிவுகள், குறிப்பாக அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் குறித்து செய்திகள் ‘கசிந்து’ விடும். இல்லையென்றால் ஏதேனும் ஒரு ஆவணத்தை வைத்துக்கொண்டு அரசின் முடிவு அல்லது கொள்கை குறித்து விவாதிப்பார்கள். இது தவிர கருத்துக்கணிப்பு அல்லது செல்வாக்கு கணிப்பு என்று ஏதேனும் ஒன்றை நடத்தி அதைப் பலநாட்களுக்கு செய்தியாக்குவார்கள். இப்படி ஊகங்கள் அடிப்படையிலோ அல்லது வதந்திகளின் அடிப்படையிலோ செய்திகளை புரொஃபஷனலாக ஆராய்வது போல ‘வழங்குவது’ கொள்கையாகவே ஆகிப்போய் விட்டது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஆங்கிலச் சேனல்களின் ஆதிக்கம் பல வீடுகளில் சண்டையை உருவாக்கிவிடும்.

இப்படி இருக்கும் நிலையில் அர்னாப் போன்ற அனுபவம் மிக்க இதழியலாளர்கள் ஒருபடி மேலே போய் புலன் விசாரணை வரை அவர்களாகவே செய்வது என அதிரடி காட்டுவதும் இப்போது வழமையாகிவிட்ட ஒன்று. அப்படித்தான் பாலகோட் தாக்குதல், சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் எனப் பல விஷயங்களில் தனித்துவமிக்க வழிகளில் தகவல்களை அள்ளி வழங்கி னார்கள். குறிப்பாக சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என முழங்கி புலனாய்வில் இறங்கினார்கள். அதனால் அரசியல் ரீதியில் சிக்கலில் விழுந்தார்கள். சுஷாந்த்தின் மரணத்தில் மராட்டிய முதல்வர் உத்தாவ் தாக்கரேயின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவிற்கு தொடர்பு இருக்கிறது என மறைமுகமாக சுட்டும் விதத்தில் செயல்பட்டதால்தான் அர்னாப் எப்போதோ கைவிடப்பட்ட வழக்கில் திடீரென்று கைது செய்யப்பட்டார். . அதற்கு சற்று முன்னர் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்காட்ட அர்னாப்பின் ரிபப்ளிக் சேனல் பார்வையாளர்கள் பலருக்கு பணம் வழங்கியதாக மும்பை காவல்துறை வழக்குத் தொடர்ந்தது. அப்போதே அர்னாப் கைது செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அர்னாப் தனது ரிபப்ளிக் தொலைக்காட்சி வழியாக பாஜகவின் பிரச்சாரகராக செயல் படுவதாகவே பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் அவர் மீது அரசியல் ரீதியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் பாலகோட் விமானத் தாக்குதலை அர்னாப் முன்னரே அறிந்திருந்தார் எனும் வாட்ஸ்-அப் ஆவணம் ஒன்று தெரிவிக்க, மீண்டும் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை வாட்ஸ்-அப் தனது பயனர் கொள்கையில் தனிப்பட்டத் தகவல்களை ஃபேஸ்புக் தளத்திற்கு கொண்டு செல்லப்போவதாக தெரிவித்த நிலையில் பயனர்கள் சிக்னல், டெலிகிராம் என மாறிக்கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ்-அப் நிறுவனம் பல கோடி மதிப்புள்ள விளம்பரங்களை வெளியிட்டு அவ்வாறு பயனர் தகவல்கள் யாருக்கும் வழங்கப்படாது என்றும் தனது கொள்கை முடிவை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அப்படி ரகசியமாக வைக்கப்படும் செயலியில் இருந்து அர்னாப் முக்கிய அதிகாரியுடன் உரையாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு உண்மையிலேயே பதில் சொல்ல வேண்டியது ஃபேஸ்புக் நிறுவனம்தான்.

மத்திய அரசைப் பொறுத்தவரை அப்படி முக்கிய முடிவுகள் முன்கூட்டியே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியக் கட்டாயமுள்ளது. இப்படி ஊடக நெறிமுறைகளுக்கு எதிராகவும், அரசு விதிகளுக்கு புறம்பாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் சேனல்கள் எத்தனைக்காலம் செயல்படும்? தெரியாது. ஆயினும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக் குறித்து டிஜிட்டல் முறையில் கணக்கிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டால் பல சேனல்களின் நிலை பரிதாபமாகிவிடும். ஊடக நெறி முறைகளுக்கு ஊறு விளைவிப்பது போல் செயல்படுவோருக்கும் தடை ஏற்படும். அதுவரை ஊடகத்தினரே செய்தியாவது அடிக்கடி நடக்கக்கூடியதாகவே இருக்கலாம்.

-ரமேஷ் கிருஷ்ணன் பாபு