September 20, 2021

மார்ஷல் அர்ஜன் சிங் உடல் தகனம்!

இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடல் இன்று (திங்கட்கிழமை) முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்திய விமானப் படை வரலாற்றில் 5 நட்சத்திர தகுதி கொண்ட முதல் ஏர் மார்ஷல் அர்ஜூன் சிங் (98). இவரது பதவி பீல்டு மார்ஷல் அந்தஸ்துக்கு நிகரானது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, இவர் விமானப்படை தளபதியாக இருந்து வழி நடத்தினார்.

இதனால், அவருக்கு ஏர் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. கடந்த 1969ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அர்ஜூன் சிங், தனது பதவி காலத்தில் 60க்கும் மேற்பட்ட விமானங்களை இயங்கியவர். மேற்கு வங்கத்தில் உள்ள பனகர் விமானப்படை தளத்துக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது.

அப்பேர்பட்ட அர்ஜன் சிங் கடந்த சனிக்கிழமை அன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 98. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) 17 குண்டுகள் முழங்க, விமானங்கள் பறக்க, அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இவரின் இறுதிச் சடங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.