அரியவன் – விமர்சனம்!

அரியவன் – விமர்சனம்!

சினிமா என்னும் பொழுது போக்கு ஊடகம் மூலம் சமூக அக்கறையை வெளிக்காட்டும் கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெளியாவது அரிதாகி விட்டது.. இச்சூழலில் தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், திருச்சிற்றம்பலம் என தனுஷை வைத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஆர் ஜவஹர் அரியவன் படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது குறித்தும் எக்ஸ்போஸ் பண்ணி தனிக் கவனம் பெறுகிறார்.

அதாவது இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வருகிறது டேனியல் பாலாஜியின் (துறைப்பாண்டி)தலைமையில் இயங்கும் கும்பல். வன்கொடுமை செய்வது மட்டுமன்றி, அதை வீடியோ ரெக்காரட் செய்து, “நாங்கள் கைக்காட்டும் ஆட்களுக்கு அடிபணியவில்லை என்றால் இதை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்” என அப்பாவி பெண்களை மிரட்டவும் செய்கின்றனர்.

இதனிடையே திறமை மற்றும் துணிச்சல் மிக்க கபடி போட்டியாளரான ஜீவா (இஷோன்) என்ற இளைஞர். இவர் உருகி உருகி காதலிக்கும் பெண் மித்ரா (பிரணாளி)யின் தோழி ஜெஸ்ஸி, மேர்படி டேனியல் பாலாஜியின் கும்பலில் சிக்கிக் கொள்கிறார். . இவரைக் காப்பற்றப் களமிறங்கும் நாயகன் அதிரடியால் மெயில் வில்லன் டேனியல் பாலாஜியின் தம்பி, பப்புவின் கைகளை வெட்டி விடுகிறார், அப்படி தன், தம்பியின் கையை வெட்டியவனை பழி வாங்கியே தீர வேண்டும் என முடிவெடுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? வில்லனின் பழிவாங்கலில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? அந்தக் கும்பலிடம் மாட்டிய பெண்களின் கதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை.

நாயகன் இஷான், ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக அறிமுக நடிகர்கள் ஹீரோவை மையமாக கொண்ட கதையில் நடிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, பீமேல் ஓரியன்டேட் கதையில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்ய முயன்றிருக்கிறார் இஷான். நடிப்பதில் போதிய பயிற்சி எடுக்க வில்லை என்றாலும் எந்தப் பக்கமிருந்தும் எத்தனை பேர் வந்தாலும், தனது நீண்ட கால்களால் அநாயசமாக எட்டி உதைத்து, தனது ஹீரோயிசத்தை தக்க வைக்க முயல்வதில் ஜெயித்து விடுகிறார்.

பல படங்களில் சப்போர்டிங் ரோலில் வந்து செல்லும் ப்ராணலி இப்படத்தில் நாயகியாக கலக்கியுள்ளார். நிஷ்மா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.ஹீரோவுக்கும் அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் இப்படத்தில் குறைவு தான் என்றாலும் கிடைத்த வாய்ப்பில் மிரட்டுகிறார். உடன் நடித்த ரமா, சூப்பர் குட் சுப்ரமணி, சத்யன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துவிட்டனர். சுப்பிரமணியபுரம், ஈசன், பசங்க போன்ற படங்களில் ‘நச்’சென பாடல்களுக்கு மெட்டு போட்டு கொடுத்த ஜேம்ஸ் வசந்தன், அரியவன் படத்தில் அதைக் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை போலும். ஆனால் சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை ஸ்கோர் செய்கிறது. மற்றபடி, இன்னும் இசைக் கோர்வையில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்

படம் தொடங்கி இண்டர்வெல் வரை, வழக்கமான கதைக் களத்தில் பயணிக்கும் அரியவன் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு, ரிவெஞ்ச் த்ரில்லராகவும் விழிப்புணர்வு படமாகவும் மாறி மாறி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சமீப காலமாக. “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு பெண்கள்தான் காரணம்” என்பது போன்ற கருத்தை முன்னிறுத்தி பல படங்கள் வெளி வரும் சூழலில், பெண்களை ஒருவன் வீடியோ எடுத்து மிரட்டுகிறான் என்றால், தவறு பெண்களிடமில்லை குற்றவாளி அவனே என்பதை உரக்கச் சொல்லும் அரியவன் போன்ற படங்களை பார்ப்பது அரிதுதான். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை இன்னும் ஆழமாகச் சொல்லியிருந்தால் படம் பலராலும் இன்னமும் உன்னிப்பாக கவனிக்கப்படும்..

மொத்தத்தில் இந்த அரியவன் – கவனிக்கத்தக்கவன்

மார்க் 3/5

error: Content is protected !!