January 26, 2022

மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. சாதனை!

த்திய கல்வி நிறுவனங்களில் சிறந்த நிறுவனம் என்று பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் புத்தாக்கப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் மூலம் முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான நிறுவனம் என்ற ‘அடல் தரவரிசை’ கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை வரிசைப்படுத்தி தரவரிசை வெளியிடப்படுகிறது. 2019ஆம் ஆண்டில் 496 நிறுவனங்களும், 2020ஆம் ஆண்டில் 674 நிறுவனங்களும் பங்குபெற்றன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2021) ஆயிரத்து 438 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்கார் வெளியிட்டார்.

அதன்படி, மத்திய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை 3வது ஆண்டாக தொடர்ந்து தக்கவைத்து இருக்கிறது. மாநில பல்கலைக்கழகங்களில் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் 5வது இடத்திலும் பெரியார் பல்கலைக்கழகம் 10வது இடத்திலும் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 4வது இடத்திலும் வி.ஐ.டி. 8வது இடத்திலும் உள்ளன.

அதேபோல அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி 2வது இடத்தையும், தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி 4வது இடத்தையும் பெற்றிருக்கின்றன. தனியார் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி 2வது இடத்திலும், ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 3வது இடத்திலும் இருக்கின்றன.