புதிதாக வாகனம் வாங்கப் போறீங்களா? மின்சார வ்ண்டி வேண்டவே வேண்டாம்!

புதிதாக வாகனம் வாங்கப் போறீங்களா? மின்சார வ்ண்டி வேண்டவே வேண்டாம்!

புதிதாக மின்சார வாகனம் வாங்க நினைப்பவர்கள் தயவு செய்து பெட்ரோல் வாகனமே வாங்கவும், எக்காரணம் கொண்டும் TVS iqube மின்சார வாகனம் வாங்க வேண்டாம், பேட்டரி 10000 கிலோ மீட்டர் ஓடி முடித்தவுடன் அது தர வேண்டிய நிஜ ரேஞ்சான Economic mode 75 கிலோ மீட்டர் தேய்ந்து Economic mode ல் 55 முதல் 60 கிலோ மீட்டர் மட்டுமே தருகிறது , Odo meter cluster ல் 75 காட்டுவதால் நாம் நம்பி தொலை தூரம் கொண்டு போனால் தீர்ந்தோம், வருகையில் பேட்டரி முழுக்க வடிந்து Limp home mode காட்டும் , வண்டியை வீட்டுக்கு தள்ளு என்பது தமிழாக்கம், சிகப்பு ஆமை படம் வரும், வண்டியை தள்ளவேண்டும், அல்லது மீன் பாடி வாகனத்தில் 500₹ தந்து ஏற்றி வீட்டிற்கு எடுத்து வந்து சார்ஜ் இட வேண்டும், தமிழ்நாட்டில் வழியில் எங்கும் சார்ஜிங் ஸ்டேஷன் கிடையாது, இதன் 5amp coolant fan சார்ஜர் 2.5 கிலோ எடை கொண்டது, இது கொண்டு 100 % சார்ஜ் செய்ய சுமார் 7 மணிநேரம் ஆகும் (இது சத்தியம்) எங்கேயாவது வண்டி நின்றால் எத்தனை மணிநேரம் எங்கேயாவது கேட்டு உதவி பெற்று சார்ஜ் செய்து வீடு வர முடியும்? இதில் 3 பேட்டரிகள் உண்டு,ஆனால் மூன்றில் இரண்டு சீட் அடியிலும்,ஒன்று கால் அடியிலும் உண்டு, பேட்டரியை நாம் பார்க்க கூட முடியாது ,எனவே கூடுதல் பேட்டரி வாங்கி வைத்து காலத்தை கடத்தலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை, தவிர பேட்டரி ஒன்றின் விலை 21000₹ வருகிறது.

தமிழ்நாட்டில் சாலையோர மெக்கானிக் கடைகளில் ஒரு கடை கூட EV வாகனங்களை பழுதுபார்ப்பதில்லை, எளிதான சோதனை, உங்கள் தெருவில் இறங்கிப் பாருங்கள் எத்தனை ஏசி மெக்கானிக் கடை உண்டு? , எத்தனை வாஷிங் மெஷின் மெக்கானிக் கடை உண்டு , ஆனால் உங்களால் ஒரு EV பழுது பார்க்கும் கடையைக் கூட காண முடியாது, உங்களுக்கு அவசரத்துக்கு ஒரு bolt nut கூட பெட்ரோல் இருசக்கர வாகன மெக்கானிக் முடுக்க மாட்டார்கள்,காரணம் அவர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் கற்க நேரமில்லை, அவசியமில்லை, இந்த EV பழுது பார்க்கும் சர்வீஸ் மையங்கள் மற்ற பெட்ரோல் வாகன சர்வீஸ் மையங்கள் போல 1 கிலோ மீட்டர் நெருக்கத்தில் இல்லை, 7 முதல் 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக உள்ளது,பம்மலில் உள்ள எனக்கு தாம்பரம் விட்டால் போரூர் தான் கதி.

TVS கம்பெனியில் இந்த Range பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது,காரணம் இந்த பேட்டரி வாகனம் பழுது பார்ப்பு தொழில் நுட்பத்தில் விற்பன்னர் (expert) இங்கு இல்லை, TVS உயர் அதிகாரிகளில் ஆராய்ந்து சரி செய்பவர்( Thinkers & Fixer ) யாரும் இங்கில்லை , மேலும் TVS நிறுவன ஊழியர்கள் இந்த ரேஞ்ச் பிரச்சனைக்கு சொல்லும் தீர்வுகள் வினோதமானவை,

1. பேட்டரி வண்டியை மெயின் ரோடில் மட்டும் ஓட்டுங்கள்.
2. பேட்டரி வண்டியில் ஒருவர் மட்டும் பயணியுங்கள்.
3. பேட்டரி வண்டியில் user manual சொல்லியபடி 120 கிலோ எடை வரை மட்டும் பயணியுங்கள்.
4. ப்ரேக் லீவரை கை விரல்களால் முன்னால் தள்ளி தள்ளி ஓட்டுங்கள்.
இப்படி வினோதமான ஆலோசனைகளை நமக்கு தருகின்றனர், எனவே மின்சார வாகனம் 10000 கிலோமீட்டருக்கு மேல் ரேஞ்ச் கடுமையாக சரியும், தொலை தூரங்களுக்கு ஏற்புடையதல்ல, எனவே கண்ணை மூடிக் கொண்டு நிராகரியுங்கள்.

இது 12629 கிலோமீட்டர் ஓட்டியவுடன் நான் தரும் அறிவுரை, காரணம் எல்லோராலும் 118 கிலோ வாகனத்தை தள்ளிக் கொண்டு வீடு வர முடியாது.  Odometer Cluster ல் காட்டும் range (distance to empty )ஐ நம்பி நீங்கள் இந்த வாகனத்தை கொண்டு போய்விட்டு வீடு திரும்ப முடியாது, பழைய செல்போனில் எப்படி பேட்டரி சரசரவென தீருமோ அதுபோல 10000 கிமீ கடந்ததும் தான் இந்த பேட்டரி மெல்ல வேலையைக் காட்டத் துவங்கும்.

மேலும் எப்படி இன்வெர்டர் ஏஸி ,LED smart TV , washing machine எல்லாம் பழுதாகிவிட்டால் PCB board மாற்ற ஆயிரக்கணக்கில் செலவு வைக்குமோ அது போல 10000 கிமீ தாண்டியதும் இதன் சார்ஜர் போய்விடும், அதை மாற்ற port , PCB board, charger என மொத்தமாக மாற்ற 18000 ₹ வரை வரும்,

warranty ல் இருக்கையிலேயே எனக்கு இவை பழுதானதால் இலவசமாக மாற்றித் தந்தனர், 3 வருடம் அல்லது 50000 கிமீ என ஒரு நிபந்தனை வைத்துள்ளனர், எனவே உங்கள் EV க்கு சார்ஜர் 50000 கிமீ கடந்து பழுதானால் அதை சரி செய்ய தோராயமாக 18000₹ ஆகும் என அறிக. 10000 கிமீ கடந்த நிலையில் வெறும் 3.7 கிலோ மீட்டர் நிஜ தூரத்துக்கு 5 கிலோ மீட்டருக்கான பேட்டரியை EV குடிப்பதால் உங்கள் உத்திரவாத காலம் விரைவில் கடக்கும் என்பது கண்கூடு,

பெட்ரோல் இரு சக்கர வாகனம் போல சிறிது சிறிதாக spark plug, air filter, clutch plate, brake shoe ,எஞ்சின் ஆயில், கியர் ஆயில் என EV செலவு வைக்கவில்லை , 4000 கிமீக்கு ஒரு முறை சர்வீஸுக்கு வெறும் 500₹ தான் வரும் என்றாலும் PCB Board போல பெரிதாக பழுதானால் அடியோடு மாற்ற வேண்டிய தொகைக்கு முன் அந்த தொகை ஒன்றுமில்லை என்பதால் இங்கே எச்சரிக்கை மணி அடிக்கிறேன், EV ல் PCB board உட்பட பல circuit board பாகங்கள் use and throw தான்,shot ஆனதென்றால் soldering செய்ய விற்பன்னர் இங்கில்லை .

10000 கிலோமீட்டருக்கு பின் இப்படி சார்ஜர் மாற்றி, 75 கிமீ என்று clusterல் காட்டி 50 முதல் 60 கிமீ மட்டும் நகருக்குள் தந்ததால் , EV தள்ளி நொந்து போய் பல நாட்கள் சர்வீஸ் விட்டு , range பிரச்சனை சரியாகாமல் மீண்டும் மீண்டும் வாகனத்தை மூன்று முறை புன்சிரிப்புடன் அதே சர்வீஸ் சென்டரில் தந்து நொந்து போன தீர்க்கமான அனுபவத்தில் இதை எழுதுகிறேன். நிறுவனத்தில் இருந்து உங்களை அழைத்து service review ஒவ்வொரு முறையும் கேட்பார்கள், service center சரியாக பழுது பார்க்காததைச் சொன்னால் அவர்கள் service center ஊழியர்களைத் தான் கடிந்து கொள்வர்,வாட்டுவர், ஊழியர்கள் நம்மிடம் அந்த வருத்தத்தை நிச்சயம் ஒவ்வொரு முறையும் காட்டுவர்,முகத்தை திருப்பிக்கொள்வர், ஆனால் உங்கள் range பிரச்சனை மட்டும் சரி ஆகவே ஆகாது, பிரச்சனைக்கு தீர்வாக , அவர்கள் GPS camera app மொபைலில் நிறுவி TVS மெக்கானிக் எடை குறைந்தவரை வைத்து (சிங்கிள் ) நல்ல GST road போன்ற பிரதான சாலையில் வாகனம் ஓட்டியதை gps photo எடுத்து நமக்கு அனுப்பி வைத்து உங்கள் பிரச்சனை சரியானது என EV திரும்பத் தருவர், அதை நம்பி நாம் சிங்கிள் ஆளாக நீண்ட தூரம் கொண்டுபோய் திரும்பினால் போயிற்று, cluster ல் 20 கிமீ மீதம் இருந்தாலும் சடுதியில் காற்றில் கரைந்து போய் என் போல 2 கிமீ வாகனம் தள்ள வேண்டி வரும்.

10000 கிலோமீட்டர் தொடும் முன்பு வரை நான் EV ல் பம்மலில் இருந்து பெரம்பூர்,கொரட்டூர் , மறைமலை நகர், மஹேந்த்ரா டவுன்ஷிப், பாரிமுனை, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவான்மியூர் கேளம்பாக்கம் , சிறுசேரி எல்லாம் சாதாரணமாகப் போய் வருவேன்,அப்போது range பிரச்சனை வந்ததில்லை, இப்போது 10000 கிலோமீட்டர் கடந்த பின் EV அதிகபட்சம் 60 கிலோமீட்டர் தான் தருகிறது என்பதால் மிஞ்சிப்போனால் பம்மல் – பூந்தமல்லி, பம்மல்- கேகே நகர், பம்மல் தி.நகர் வரை மட்டும் செல்லலாம் என எல்லையைச் சுருக்கிக் கொண்டு பெட்ரோல் வண்டியை தான் எடுத்துச் செல்கிறேன்.

EV யார் எல்லாம் வாங்கலாம்? யார் வாங்க கூடாது.

140000₹ ready cash தந்து வாங்க முடிந்தவர்கள் EV ஓட்டும் அனுபவத்துக்காக வாங்கலாம், மைலேஜ் பொருட்டல்ல என்பவர், புல்லட் ஓட்டுபவர் என்றால் வாங்கலாம்,நான் மைலேஜ் சோதிப்பதில்லை பக்கத்தில் கடைக்கு, பள்ளிக்கு சென்று வருவேன் என்றால் வாங்கலாம்.

நான் மைலேஜ் சோதிப்பேன்,smart connect app பார்ப்பேன், நான் செலவிடும் ஒவ்வொரு பணமும் எனக்கு முக்கியம் ,என்பவர்கள் வாங்காதீர்கள்.instalment ல் வாங்க நினைப்பவர்கள் வாங்காதீர்கள்,காரணம் பிரச்சனை சரியாவதற்குள் கட்ட வேண்டிய தவணை தொகை வங்கியில் பிடிக்கப்படும்.

பெட்ரோல் இருசக்கர வாகனம் backup வைத்திராதவர்கள் EV வாங்காதீர்கள், காரணம்EV 10000 கிமீ கடந்தவுடன் உங்கள் பெட்ரோல் வாகனம் தான் நீண்ட தூரங்கள் செல்ல தேவைப்படும்.

உங்களுக்கு Resale value பற்றி கவலை இல்லை, 7 மணிநேரம் சார்ஜ் ஆனால் கவலையில்லை ,118 கிலோ வண்டியை தள்ள முடியும், 90 கிலோ எடை இருப்பவர் , நல்ல ஆறடி உயரம் இருப்பவர் , எல்லாவற்றையும் ஒரு பாடமாக நினைத்து வாழ்பவர் என்றால் வாங்கலாம், நீங்கள் tech savvy, உங்களுக்கு gps camera நிறுவி அதில் படம் எடுத்து ஆதாரம் இணைத்து சங்கிலித் தொடராக TVS ற்கு மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும் என்றால் வாங்கலாம், இருப்பதிலேயே கடினமான பணி புகாருக்கு முறையான ஆதாரத்தை தர ஆவணப்படுத்துதல் தான் என்பேன்,நான் சொல்வதெல்லாம் உண்மை என நிரூபிப்பதற்குள் படபடப்பே (palpitation) வந்து விடும், அதில் புலிகள் EV வாங்கலாம். ஆங்கிலம் பேசுவதில் வல்லவர்கள் வாங்கலாம், காரணம் TVS call centre ஊழியர்கள் ஆங்கிலம் இந்தி அல்லது கன்னடம் தான் பேசுவர், தமிழில் உங்கள் பிரச்சனையை தெளிவாக புரிய வைக்க முடியாது என்பதால் சொல்கிறேன்.

இந்த வாகனத்துக்கு அதன் உறுதி மற்றும் சொகுசுக்காக 3.8 /5 க்கு தருவேன்,ஆனால் மைலேஜுக்கு 1/5 தான் தருவேன்.

நாங்கள் இந்த சரிசெய்ய முடியாத Range பிரச்சனைகளால் நொந்து போய் 999₹ கட்டி முன்பதிவு செய்திருந்த Iqube ST (145 km )ஐ சென்ற வாரம் ரத்து செய்து விட்டோம்,இணைப்பு படங்கள் பாருங்கள். எக்காரணம் கொண்டும் என் பெட்ரோல் வாகனம் TVS ஜூபிடரை விற்று இனி ஒரு EV வாங்கக்கூடாது என உறுதியும் கொண்டோம்.

12629 கிமீ ஓட்டி தெளிந்த ஞானம் கிடைத்தபின் இந்த முடிவுக்கு வந்துள்ளேன், இனி அடுத்த சர்வீஸ் 16000 கிமீ,அதற்குள் என்ன update என்றாலும் இங்கே எழுதுவேன். இந்த பேட்டரி 50000 கிமீ வரை ஓடும் என்கின்றனர், எனவே அதுவரை இந்த range படிப்படியாக குறையும், அதையும் எழுதுவேன், அந்த 3 பேட்டரிகளை மாற்ற ஆகும் செலவு 60000₹ வரும் என்கின்றனர்,50000 கிமீ தாண்டி பேட்டரி மாற்றியதும் அதையும் விரிவாக எழுதுவேன்.

12200 கிலோ மீட்டரில் என் பின்சக்கரத்தின் mud guard கடும் சத்தத்துடன் பிரதான சாலையில் உளுத்துப் போய் கொட்டிவிட்டது, அதை stock இல்லாததால் இன்னும் புதிது மாற்றவில்லை, மழை காலம் இல்லாததால் சரி போகிறது, இது போல வாகனம் ஓட அத்தியாவசியமான பாகங்கள் out of stock என்றால் விலையுயர்ந்த BMW கார் கேரேஜில் வாடிக்கையாக நிற்பது போல உங்கள் EV கூட வாடிக்கையாக கேரேஜில் நிற்பது திண்ணம்.

யூட்யூபில் EV வாகனம் இரவல் வாங்கி review செய்வதையும்,EV 10000 கிமீ ஓட்டிய அனுபவம் இல்லாதவர்கள் பலரும் அடித்து விடுவதை நம்பியும் EV வாங்கி மாட்டிக் கொள்கின்றனர்,அதைக் கண்டு வேதனை மிஞ்சுகிறது ,எனக்கு நான் தோற்றதை சொல்லும் தைரியம் மனப்பக்குவம் உண்டு, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என பொய்யான review என்னால் எழுத முடியாது,EV வாங்கி தோற்ற அனுபவத்தால் தான் இத்தனை விழிப்புணர்வு கிடைத்தது, அதை பிறருக்கு மடைமாற்றி விடுகிறேன், EV குறித்து என்ன கேள்வி என்றாலும் கமெண்ட் செய்து கேளுங்கள், அத்தனைக்கும் பொறுமையாக தரவுகளுடன் பதில் சொல்கிறேன்.

நான் இதுவரை review எழுதி 1₹ சம்பாதித்ததில்லை, என் அனுபவத்தை நேர்மையாக இங்கே பதிவு செய்துள்ளேன், புதிதாக இருச் சக்கர வாகனம் வாங்குபவர்கள் பெட்ரோல் இருசக்கர வாகனம் வாங்குவதே மிகுந்த புத்திசாலித்தனம்.

Aether வாங்கலாமா? Bajaj Urbane வாங்கலாமா? Revolt வாங்கலாமா?கோமாகி வாங்கலாமா? PureEV வாங்கலாமா என்றால் வாங்காதீர்கள், hero வாங்கலாமா? என்றால் வாங்காதீர்கள், வாங்கியவர்கள் வாய் பொத்தி அழுவார்கள், ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள், எனவே வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள்.

கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன்

error: Content is protected !!