மெடிக்கல் டிகிரியான எம்.பி.பி.எஸ். & பி.டி.எஸ் படிக்க விண்ணப்பிக்கப் போறீங்களா?

மெடிக்கல் டிகிரியான எம்.பி.பி.எஸ். & பி.டி.எஸ் படிக்க  விண்ணப்பிக்கப் போறீங்களா?

ருத்துவமான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அத்துடன் சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்க்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்படும். அதைப்போன்று 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு ஆகும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் அதாவது 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவினர் 720 மதிப்பெண்களுக்கு குறைந்தப் பட்சம் 117 மதிப்பெண்களும், பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உட்பட அனைவரும் 93 மதிப்பெண்கள் பெற்றவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 325 எம்பிபிஎஸ் இடங்கள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 130 எம்பிபிஎஸ் இடங்களும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 13 பிடிஎஸ் இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 101 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 569 இடங்கள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது மறக்காமல் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 2,500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் 22ம் தேதி அதாவது நாளை முதல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் அக்டோபர் 3ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகள், கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்ற விவரங்களுக்கு இணையதளங்களில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

அதன் தொடர்ச்சியாக மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஆன்லைன் கலந்தாய்வே நடைபெறும் என தெரிகிறது.
.

error: Content is protected !!