December 4, 2022

கீச்சுப் பேச்சுக்கள் தன்னார்வமா? தலையீடா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இரு மாதங்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள்+ ஆகியோரின் போராட்டம் குறித்துப் பன்னாட்டுப் பிரபலங்கள் சிலர் டிவிட்டரிலும் இன்ன பிற சமூக ஊடகங்களிலும் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். இதில் பிரபல பாடகி ரிஹானா என்பவர் “நாம் ஏன் இதைப் பற்றி பேசுவதில்லை?” என்ற கேள்வியுடன் இப்போராட்டம் குறித்த தனது கவலையைப் பகிர்ந்து இருந்தார். இவரைத் தொடர்ந்து சூழலியர் கிரேட்டா தன்பர்க்கும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் மருமகளான மீனா ஹாரிஸ்சும் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய நடிகர்கள், கிரிக்கெட் பிரபலமும் பாரத் ரத்னா பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் இந்தியாவின் உள் விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று கூறினர்.

இரு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் கடந்த குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியால் பெருமளவு வன்முறையையும் சந்தித்தது. இதுவரை மத்திய அரசும் பலசுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்திப் பார்த்துவிட்டது. உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. நாடு முழுதும் பல எதிர்க் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்தாலும் ஹரியாணா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இன்றுவரை களத்தில் உள்ளனர். ஏற்கனவே ஒரு சாதியினரின் போராட்டம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் புதிய பரிணாமமாக காலிஸ்தான் கொடிகள் செங்கோட்டையில் ஏற்றப்பட்டது வெளிநாட்டு சக்திகளின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டி யுள்ளது. இது குறித்து ஏற்கனவே காவல்துறையினரிடம் கூறிவிட்டதாக யோகேந்திர யாதவ் போன்ற போராட்டத் தலைவர்கள் கூறினாலும் அதைத் தடுக்கத் தவறியதும், அவர்களை போராட்டத்தில் பங்கெடுக்க வைத்த தார்மீகப் பொறுப்பும் இத்தலைவர்களுக்கு உண்டுதானே?

விவசாயப் போராட்டத்தின் பின்னணி என்னவென்பதை அறியாமல் பிரபலங்கள் பதிவிட்டு உள்ளதாக அயலுறவுத் துறை தெரிவித்திருந்தது. எனினும் கடந்த மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரஸ் கட்டடத்தை கைப்பற்ற முயன்ற நிகழ்வுத் தொடர்பாக உலகம் முழுதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளோர் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். டிரம்ப் ஆதரவாளர் முற்றுகை, விவசாயிகளின் முற்றுகை இரண்டையும் சம அளவிலான நிகழ்வு களாக கருதி மீனா ஹாரிஸ் பதிவிட்டிருந்தார். இரண்டுமே மக்களாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றுள்ளார் அவர். இரு மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை அரசு வன் முறையால் அடக்கவில்லை. பேச்சு வார்த்தை நடத்துகிறது. தனது நிலைப்பாட்டில் சற்று இறங்கி மாநிலங்களே இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அடுத்த 18 மாதங்களுக்கு மூன்று விவசாய சட்டங்களையும் நிறுத்தி வைக்கவும் முன் வந்துள்ளது. ஆனாலும் போராட்டக்காரர்கள் நிறைவேறிய சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர். மேலும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கொண்டு வந்த விவசாயி-உற்பத்தியாளர் சட்டம் மோடி அரசின் சட்டத்தை விட சிறந்தது என்று சமீபத்தில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டம் ஒன்றில் முன்னாள் நிதிச்செயலர் எம் ஆர். சிவராமன் கூறினார். அப்படி சிறப்பான சட்டமிருந்தால் டெல்லியில் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா?

விவசாயிகளின் போராட்டம் அரசியல் ரீதியிலானது என்பது பலருக்கும் புரிந்ததுதான். பொதுவாக பன்னாட்டு அரசியலில் ஜனநாயக மாண்புகள் உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கு பாதகமாக ஏதேனும் ஒரு நாட்டில் போராட்டங்கள் நடந்தால் அதைப் பன்னாட்டு சமூகங்கள் கண்டிப்பது வாடிக்கையாகி விட்டது. இது ஜனநாயகம் குறித்த தன்னார்வலர் நிலையில் நிகழ்வது என்று கருதிக்கொள்ளலாம். ஆனால் அதே சமயம் ஒரு இறையாண்மைப் பெற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதும் அத்துமீறல். எதெல்லாம் தன்னார்வம், எதெல்லாம் தலையீடு என்பதற்கான தெளிவான வரையறைகள் இல்லாத சூழலில் கண்டனங்களும் பதில் கண்டனங்களும் பரிமாறிக் கொள்ளப்படுவது தவிர்க்க இயலாதது. எனவே விவசாயிகளின் போராட்டமும், கேபிடல் வன்முறையும் ஒன்றல்ல.

டிரம்ப் தனது பதவிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வன்முறைக்கு வழியேற்படுத்தியதும், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் அல்லது அரசுக் கொள்முதல் கிடங்குகளில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்றுக்கொள்ளலாம் என்பதும் ஒன்றல்லவே. விவசாய சட்டங்களை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒருவேளை இச்சட்டங்கள் விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறது என்று நினைத்திருந்தால் அவற்றை செல்லாதவையாக அறிவித்திருக்கும். உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் அறிக்கை எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அக்குழுவில் சட்டத்திற்கு ஆதரவாக கருத்து சொன்னோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சட்டங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பும் வரலாம். அப்போது வெளிநாட்டு தன்னார்வலர்களும், உள்நாட்டு போராளிகளும் என்னக் கருத்து சொல்வார்களோ?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு