September 25, 2021

டிரம்ப் அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள, கூகுள், ஃபேஸ்புக் போன்றவை நிதி திரட்டுது!

ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் 3 மாத காலம் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்து, கடந்த 27-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.இது தொடர்பாக அங்கு பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வழக்கை சியாட்டில் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் விசாரித்து, டிரம்பின் உத்தரவுக்கு நாடு முழுவதும் இடைக்கால தடை விதித்து, கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக டிரம்ப், சான்பிரான்சிஸ்கோ 9-வது மேல்-முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சியாட்டில் கோர்ட்டு உத்தரவுக்கு உடனடியாக தடை போட அந்த கோர்ட்டு மறுத்து விட்டது.இந்த நிலையில் அமெரிக்காவில் டிரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 அட்டார்னி ஜெனரல்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர்கள் நீதிமன்றங்களையும் அணுகி உள்ளனர்.

usda feb 8

இது குறித்து மசாசூசெட்ஸ் அட்டார்னி ஜெனரல் மவுரா ஹீலே கூறும்போது, “நமது சட்டங்களைவிட, அரசியல் சட்டத்தைவிட எந்த ஜனாதிபதிக்கும் அல்லது நிர்வாகத்துக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விஷயத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்” என குறிப்பிட்டார்.நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சனிடெர்மன் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி பிறப்பித்த தடை உத்தரவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, சட்ட விரோதமானது, அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரானது” என கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் வகையில், நிதி திரட்டும் பணிகளை கூகுள் தலைமையில் பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. டிரம்ப் அறிவிப்பால், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், இன்டெல், ஆப்பிள், உபெர் என பல்வேறு நிறுவனங்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாட்டு மக்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. இதனால், தங்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

இதற்கான சட்டப்போராட்டத்தையும் தொடங்கியுள்ள அந்நிறுவனங்கள், அகதிகள் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் பணிகளையும் தொடங்கியுள்ளன. கூகுள் தலைமையில் இந்த நிறுவனங்கள் நிதி திரட்டி வருவதாகவும், இதற்கு பல்வேறு தரப்பு மக்களும் பெரும் ஆதரவுடன் நிதி உதவி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.அடிப்படை யதார்த்தம் தெரியாமல் டிரம்ப் அதிபர் பதவியில் உள்ளார் என்றும், அந்த நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.