January 29, 2022

அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க – விமர்சனம்!

காதல் என்ற இந்த மூன்றெழுத்து உணர்வை புரிய அல்லது அனுபவிக்க வயது வரம்பு ஒரு போதும் கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையிலும் நாம் யாரையோ, எதையையோ காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதர் மனிதர்மேல் கொள்ளும் காதலுக்கு சற்று மதிப்பு அதிகம் என்றே சொல்லலாம். இளம்ஜோடியின் பல காதல் கதைகளை நாம் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், எங்கோ எப்போதோ டிவி அல்லது செய்திகள் மூலம் மட்டுமே தெரிய வரும் முதியோர் ஜோடி ஒன்றின் பிணைப்பை சகல தரப்பினருக்கும் புரிய வைக்க முயலும் படமே “அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க” திரைப்படம் .

நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் முதியோர் இல்லங்கள் அதிகம் திறக்கப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகள் கொண்ட முதியோர் இல்லங்கள் நிறைய உள்ளன.எல்லாம் இருந்தாலும் அன்பாக, ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்ல யாருமில்லையே என்கிற ஏக்கம் ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கும் உண்டு என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வதில்லை என்பதை சுவைபட சொல்லி இருக்கிறார்கள். அதாவது ஒரு முதியோர் இல்லம்.. முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி.. அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள்.. காதலை காப்பாற்ற கை கொடுக்கும் நண்பர்கள்.. இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவையுடன் சொல்லும்விதமாக இப்படம் உருவாகி உள்ளது.

கமலின் மூத்த சகோதரர் .சந்திர ஹாசன்,ஷீலா,இளவரசு,டெல்லி கணேஷ்,காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படம் முழுக்க வரும் வசனங்கள் மனதை நெருடுகிறது..சில சீன்கள் முதல் மரியாதையையும், கொஞ்சம் பவர் பாண்டி காட்சிகளையும் நினைவுக்கு கொண்டு வந்தாலும் பெரியவர்கள் இல்லாத ஒரு வீட்டில் அடையும் நன்மைகள் மிகவும் குறைவானதுதான். ஆனால், இளைஞர்கள் இழப்பதே அதிகம். மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணி போலித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் தனிக்குடித்தனக்காரர்கள்தான் இன்று அதிகம். ஆதலால்… முதியோரை அரவணைப்போம். நாமும் நலம் பெறுவோம் என்ற மெசெஜை சொல்லி உணர வைக்கிறார்கள்.

அப்பத்தாவாக வருகிறார் பாண்டியன் ஸ்டோர்சில் நடித்த லட்சுமி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கிறார் லட்சுமி அம்மா. உலக நாயகனே பிரமித்த சந்திர ஹாசன் நடிப்பும் ,ஷீலா ஆக்டிங்கும் அற்புதம் .டி வி புகழ் ஜெயச்சந்திரன் அவ்வப்போது வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்

மொத்தத்தில் காமம் பொங்கும் இளமை காதலை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்கள் பெருகி வரும் நேரத்தில்,முதியவர்களின் காதல் என்பதை இதுவரை யாருமே ஒப்பனாக பேச முன் வராத சூழலில் அந்த வயதாnoor காதலை மையப்படுத்தி கதை பண்ணி அதையும் ஓடிடியில் (சோனி லிவ்) ரிலீஸ் செய்து மனதில் ஒட்ட முயல்கிறார்கள்..

ஒவ்வொரு குடும்பதினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது!