எந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான்..!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சார்ந்து கிட்டத்தட்ட முடிவுகள் தெரிந்துவிட்டது போன்ற நிலையிலும், அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு இனிதான் தெரிய வேண்டும் என்ற நிலையிலும் தமிழகம் நாளை வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்நோக்கியிருக்கிறது.

“தி.மு.க. கூட்டணி வெற்றியை வீதியில் வந்து கொண்டாட வேண்டாம். வீடுகளிலேயே கொண்டாடுங்கள்” என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

“வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.  நல்லது. கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, நாங்களும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று வேறு எந்தக் கட்சியும் சொல்லவில்லை.

புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு முதல் நாளிலிருந்தே பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்கும் முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் செய்தாக வேண்டும். இதற்கு ஆளும் கட்சி, இதர கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பிற கட்சிகளும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

“சாவியை கொடுத்தாச்சு… அவருகிட்ட கேளுங்க….” என்ற வாடகை வீட்டுக்காரர் மனநிலையில் யார் பேசுவதும் உகந்தல்ல.

எந்த ஆட்சியும் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சிதான். தேர்தலுக்கு முந்தைய நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிர்வாக நடைமுறை சார்ந்து முதலமைச்சர் இன்று போடும் கையெழுத்து வரை. முந்தைய ஆட்சி நடவடிக்கைகளின் சாதக, பாதகங்களைச் சுமந்தே புதிய ஆட்சி முன்செல்ல வேண்டும்.

முந்தைய ஆட்சியில் செய்யப்பட்டது என்பதற்காகவே கிடப்பில் போடுவது அல்லது அதன் பயன்பாட்டையே மாற்றுவது போலன்றி (கடந்த கால உதாரணங்கள் நாமறிவோம்), மக்களின் தேவையை ஒட்டி திட்டத்தை தொடர்வதும் மாற்றியமைப்பதும் நடப்பதே நலம்.

அதே போன்றுதான் இந்த ஆட்சியில் ஒரு சட்டம் போடுவது அந்த ஆட்சியில் விலக்கிக்கொள்வது என்பதும். சட்டத்துக்கும் மதிப்பில்லை. மக்களும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஏனெனில், இது நிரந்தரமானதல்ல, மாறக்கூடியது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றங்களின்போது இந்தத் தொடர் சங்கிலி அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில், பொருளாதார இழப்பிலிருந்து சமூகப் பதற்றம் வரை பலநிலைகளில் சிக்கல்களைத் தவிர்க்க முடியும். வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளில் இந்தத் தொடர்ச்சி பெரிதும் (முற்றிலும் அல்ல) துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

தமிழகம் முன்னோடி மாநிலம். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகப் பலவகைகளில் வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்றெல்லாம் பெருமிதம் கொள்ளும் நாம், இனியாகிலும் — கட்சி அரசியல் கடந்து, மக்கள் நலனை மட்டும் மையப்படுத்தி ஆட்சி செய்யும் பண்பாட்டைத் தழைத்தோங்கச் செய்வோம்.

புதிய ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வாழ்த்துகள்.

இளையபெருமாள் சுகதேவ்