ஆன்டி இந்தியன் விமர்சனம்

ஆன்டி இந்தியன் விமர்சனம்

பாஷா எனும் சுவர் சித்திரம் வரையும் ஒருவர் கொலையாகி மரணமடைகிறான், அவன் அப்பா முஸ்லீம் அம்மா கிறிஷ்துவாக மதம் மாறியவர் என்பதால், அவனை அடக்கம் செய்வதில் பெரும் பிரச்சனை உருவாகிறது. இதனால மதக்கலவரம் உருவாகும் நிலைவர, அந்த ஏரியாவில் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் இந்த பிரச்சனையை அரசியல் கட்சிகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பது தான் கதை.

தமிழ் சினிமா மசாலாத்தனங்களை லாஜிக் மீறல்கலை, கிண்டலடித்தே புகழ் பெற்ற ப்ளூசட்டை மாறனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. இப்படத்தில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பலர் விளக்கெண்னெய்யை கண்ணில் விட்டு காத்திருக்கின்றனர்.

உண்மையில் படம் எப்படி இருக்கிறது ?, இப்படம் பலர் எதிர்பார்த்து காத்திருந்த அளவு மோசமாக இல்லை. ஆனால் அதே நேரம் படம் பல பிரபலங்கள் புகழும் அளவு காவியமாகவும் இல்லை.

படமே மரணமடைந்த இளமாறனின் முகத்தின் க்ளோசப்பில் தான் ஆரம்பிக்கிறது. அங்கேயே தமிழ் சினிமாவின் சகுனங்களை உடைக்க ஆரம்பித்தவர் படம் முழுதும் பல இடங்களில் அதனை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கருத்து சொல்லும் இயக்குநர்கள் அதிகம் பார்வையை வைக்கும் மதப்பிரச்சனை அரசியல் கட்சி மோசடிகள் பக்கம் தான் இளமாறனும் பார்வையை பதித்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் தைரியமாகவே களமிறங்கியிருக்கிறார். பாஷா எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதில் ஆரம்பித்து முஸ்லீம் தர்காவின் அரசியல், இந்து மக்களை பயன்படுத்திகொள்ளும் கட்சி அரசியல், கிறிஸ்துவ மதத்தை பரப்ப முன் நிற்கும் சர்ச் வேலைகள், எது நடந்தாலும் அதை தங்கள் கட்சி வெற்றிக்கு பயன்படுத்திகொள்ளும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சிக்கு சொம்படித்து எந்த வேலையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போலீஸ் என சமூகத்தின் பல முகங்களையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அந்த தைரியத்திற்கு பெரிய பூங்கொத்து.

சில விசயங்களை சினிமாவில் அப்பட்டமாக காட்டமாட்டார்கள் குறிப்பாக பிணத்தின் முகம் இஸ்லாமிய சாங்கியங்கள் என தமிழ் சினிமாவின் இந்த சம்பிரதாயங்கள் படத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது. அது படத்தில் நன்றாகவும் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு சமூக நிகழ்வை அரசியல் கட்சிகள் எப்படி பயன்படுத்திகொள்ளும் என்பதை காட்டிய விதம் அருமை. சாவு வீடும் அங்கு நடக்கும் சடங்குகளும் அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கானா பாடல்கள் சினிமா பூச்சில்லாமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

இனி படத்தின் மைனஸை பார்க்கலாம். சினிமா என்ன தான் வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றாலும் அது ஆர்ட் ஃபிலிமாக இருந்தால் அதை பல நேரங்களில் ரசிகன் கண்டு கொள்ளாமல் உறங்க சென்று விடுவான். சினிமாவுக்கு என்று ஒரு அழகியல் இருக்கிறது ஒரு காட்சி ஆரம்பிக்கும் விதம் அதன் வசனங்கள், இசை, ஒளிப்பதிவு கோணங்கள் சேர்ந்து தான் கதை சொல்ல வேண்டும் அது தான் எந்தக் கதையாக இருந்தாலும் ரசிகனை இருக்கையில் அமர வைக்கும் ஆனால் இப்படத்தில் அது சுத்தமாக மிஸ்சிங். படம் முழுதுமே வீடியோ கேமராவில் செய்தி பார்க்கும் கோணத்திலேயே பதிவானது போல் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும், படம் பார்க்கும் உணர்வை இந்த மேக்கிங் சுத்தமாக தரவில்லை. முழுக்க எதார்த்தை பிரதிபலிக்கும் காட்சிகளை படமாக்க நினைத்து சுவாரஸ்யத்தை கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தின் மெயின் பிரச்சனை இது தான். படம் பல காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இன்றி, நத்தையாக நகர்கிறது.

ராதாரவி, ஆடுகளம் நரேன், விஜய் டீவி பாலா, அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார்கள். இளமாறன் பிணமாகவே வந்து கலக்கியிருக்கிறார். படத்தின் இசையை வேறு யாரையாவது செய்ய விட்டிருக்கலாம் படத்தை பின்னிழுப்பதில் முதல் அம்சமாக இசை தான் இருக்கிறது. படத்தை கொஞ்சம் சினிமா டெக்னிக்கலோடு எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே போல் கானா பாடல்களின் நீளத்தை குறைத்திருக்கலாம் அந்த இடத்தில் கதையில்லாமல் இருக்க பயன்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.

மொத்தத்தில் ஆன்டி இந்தியன் தீவிர சினிமா ரசிகர்களுக்கு மட்டும்.

மார்க் 3 / 5

error: Content is protected !!