December 7, 2021

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி பாலா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும் போது, “இந்தப் படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. இந்தப் படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லியிருந்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு. இந்தப் படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்க தயங்குனாங்க. தமிழர்களுக்கு எதிரான ‘ஃபேமிலிமேன் 2’ மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க. ஆனால் தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க. அதனால ஒருபக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம். இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப் படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம். இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்” என்று பேசினார்.

நடிகர் ராதா ரவி பேசுகையில், “இந்தக் கதையை என் கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தபோது, கிட்டத்தட்ட மூன்று முறை அவரை திரும்பத் திரும்ப வரவைத்து கதை கேட்டேன். ஏன்னா இந்தப் படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல முதலமைச்சராக நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு முதலமைச்சராக இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும். படம் பார்க்கும்போது யாரைப் பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும். ஆனால் இந்த நேரத்துல இந்தப் படம் வெளியாகும்போது யாரு என்ன விதமாக நினைத்துக்கொள்வார்கள்னு தெரியல.

இந்தப் படம் வெளியாவதற்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நிஜம்தான். அத்தனை பேர் படத்தைக் கழுவி ஊத்திருக்கார். நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க. திட்டத்தான் செய்வாங்க. அதேசமயம் படம் வெளியாகும்போது மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும். ஒரு படத்தைப் படமா பாருங்க. படம் முடிந்ததும் அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க. விஜய் ‘பைரவா’ன்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க. அதுக்குப் பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க.. நிச்சயம் இந்தப் படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்குத் தயாரா ஒரு கூட்டம் இருக்கும். இந்தக் காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்பதான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மைக் கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல. அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் பேசுகையில், “இந்தப் படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன். இந்தப் படத்தோட ட்ரெய்லர் வெளியான பிறகு அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு. விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை எதேச்சையாக என்னை சந்தித்தபோது வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப் படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டிருந்தாரு. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, ‘தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவ’ன்னு சொன்னேன். அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம்தான் தெரிஞ்சது,.

இந்தப் படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூன்று கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு. படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணுங்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களைச் செய்யச் சொல்லி அவர்கிட்ட சொன்னேன். அதற்கு அவர், அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்க, நான் ஷாக் ஆகிட்டேன்.

ஆனால் நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சஷன்லாம் பண்ணினார். ஒரு இயக்குநரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல. அதனால, ‘நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க, நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க. உனக்கு எது சரியாக படுதோ அதைப் பயன்படுத்திக்க’ன்னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்தினேன். மிகவும் சிறப்பாக வந்திருக்கு. சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பின்னாடி, இந்தப் படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள்கூட ரசிகர்களால பெரிய அளவில் கவனிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.