October 20, 2021

இங்கிலாந்து அரசியின் கவுரவமிக்க இளம் தலைவர்கள் விருதுக்கு அங்கித் கவத்ரா தேர்வு!

நாட்டில் பசி, ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகியவற்றைப் போக்குவதற்கு புதுமையான வழியில் பாடுபட்ட இந்திய இளைஞருக்கு ஐ.நா. அமைப்பின் அங்கீகாரம் கூட கிடைத்த நிலையில் நம் நாட்டு இளைஞர் அங்கித் கவத்ராவை இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ஸ்பெஷலாக அழைத்து கவுரவிக்க உள்ளார்.இதற்கான விழா லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அங்கித் கவத்ரா, தனது பணியை உதறிவிட்டு “ஃபீடிங் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த பட்டதாரி இளைஞர், புதுமையான வழியில் மேற்கொண்டுள்ள தொண்டு இதுதான். இந்தியத் திருமணங்களில் அதிக அளவில் சமைத்து வீணாக்கப்படும் உணவுகளைச் சேகரித்து பசியால் வாடும் மக்களுக்கு அளிப்பதுதான். அதற்கான தொடக்கப்புள்ளி எங்கிருந்து வந்தது என்பதை முன்னரே விவரித்திருந்தார். அது இதுதான் ;

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பன்னாட்டு வர்த்தக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். ஒரு நாள், பிரமுகர் ஒருவரின் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அந்தத் திருமணத்துக்கு சுமார் 10,000 பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்காக, 35 விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்ட இந்த உணவு வகைகளை என்ன செய்யப் போகிறார்கள் என்று காத்திருந்து பார்த்தபோது, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் செய்த காரியம் எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்தது. சுமார் 5,000 பேர் சாப்பிடக்கூடிய மீதருந்த உணவு வகைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

அப்போதுதான், இதுபோன்று திருமண விழாக்களில் வீணாக்கப்படும் உணவினை சேகரித்து, பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று எண்ணம் உதித்தது. அதையடுத்து, எனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, “ஃபீடிங் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினேன்.எங்கள் அமைப்பில் நாடு முழுவதிலும் உள்ள 28 நகரங்களில் இருந்து 2,000 தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்கள், திருமண விழாக்கள், பன்னாட்டு நிறுவனங்களின் உணவகங்கள், விருந்து நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அதிகப்படியாக தயாரிக்கப்படும் உணவு வகைகளைச் சேகரித்து, பசியோடு இருப்பவர்களுக்கு வழங்குகிறார்கள். இதன் மூலம், நாட்டில் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் பாடுபடுகிறார்கள்.

இந்த உணவு வகைகளை, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம், சுயநிதியில் இயங்கும் பள்ளிகளின் மாணவர் விடுதிகள் ஆகிய இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கி வருகிறோம். அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த சரிவிகித உணவுகளை வழங்கி வருகிறோம். எங்களது பணியால், இதுவரை சுமார் 10 லட்சம் பேர் பசியாறியிருக்கிறார்கள்.

எங்கள் அமைப்பின் அடுத்த முயற்சியாக, அதிகப்படியாக தயாரிக்கப்படும் உணவு வகைகளைச் சேகரிப்பதற்கும், அவற்றைத் தேவையானவர்களுக்கு அளிக்கவும், 24 மணி நேரமும் நகரங்களில் லாரிகளை இயக்கி வருகிறோம்.மேலும், உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவது குறித்து மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பிரபல சமையல் கலைஞர்கள், தொலைக்காட்சி  பிரபலங்கள், உணவக உரிமையாளர்கள் ஆகியோரையும் எங்கள் அமைப்பில் இணைத்திருக்கி றோம்  என்றார் அவர். ஆரம்பத்தில் 5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு. தற்போது நம் நாட்டின் 43 நகரங்களில் 4,500 தன்னார்வலர்களுடன் செயல் படுகிறது. இதுவரை 85 லட்சத் துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான உணவு, குழந்தைகள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அங்கித் கவத்ராவின் பணிகளை பாராட்டி, “நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவ தற்கான இளம் தலைவராக’ ஐ.நா. அங்கீகரித்துள்ள நிலையில் இங்கிலாந்து அரசியின் கவுரவமிக்க இளம் தலைவர்கள் விருதுக்கு அங்கித் கவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கித் கவத்ராவுடன் 53 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 60 பேரும் இந்த விருதை வரும் 29-ம் தேதி பெறவுள்ளனர்.“ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன்” என்று அங்கிக் கவத்ரா கூறியுள்ளார்.