சந்திரயான் – 2 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது! -முழு ரிப்போர்ட்!

சந்திரயான் – 2 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது! -முழு ரிப்போர்ட்!

உலகளவில் எந்தவொரு நாட்டின் விண்கலமும் சென்றிராத, நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் – டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்குத் தொடங்கி திங்கட்கிழமை பிற்பகல் 2.43க்கு நிறைவடைந்தது. சந்திரயான்-2 வெற்றி கரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து விண்வெளி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை அடுத்து இந்த சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி,பிரதமர், முதல்வர் உள்ளிட்ட விஐபிகள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதாவது நிலவில் சந்திரயான்-1 விண்கலம் கண்டறிந்தவற்றிலிருந்து, அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு நாட்டின் விண்கலமும் சென்றிராத, நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ள உள்ளது. நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப் படுவதோடு, சூரிய குடும்பத்தின் வரலாறு குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நிலவில் மனிதர்கள் குடியிருக்க சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது . அதனால் இதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு நமக்குத் தர உள்ளது. அதன் மூலம், நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான்-2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் வெற்கிரமாக ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் சந்திரயான்-2 விண்கலம், தொடர்ந்து 16 நாள்கள் புவி சுற்றுவட்டப் பாதையிலேயே வலம் வந்துகொண்டிருக்கும். அதன் பின்னர், 17-ஆவது நாள் நிலவை நோக்கி விண்கலம் நகர்த்தப்படும். தொடர்ந்து 5 நாள்கள் இந்த நகர்வு நடைபெறும். பின்னர் 22-ஆவது நாளில் அதாவது, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும். அதன் பின்னர் தொடர்ந்து 28 நாள்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும். அப்போது, நிலவுக்கும் விண்கலத்துக்குமான தொலைவு படிப்படியாகக் குறைக்கப் பட்டு நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றிவரும் வகையில் விண்கலம் கொண்டுவரப்படும்.

பின்னர் ராக்கெட் ஏவப்பட்ட 50-ஆவது நாளில் அதாவது செப்டம்பர் 2-ஆம் தேதி விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதிக்குள் இருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். இந்த லேண்டர் பகுதி தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றி வந்து, அதாவது ராக்கெட் ஏவப்பட்ட 54-ஆவது நாளான செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறக்கப்படும். லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பின்னர், அதனுள் இருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் கலம் இறக்கிவிடப்படும்.

2,379 கிலோ எடைகொண்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஓராண்டு சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்காக அதில் அதிநவீன கேமரா, நிலவின் பரப்பை ஊடுருவி ஆய்வு செய்யும் எக்ஸ்ரே கருவிகள், நிலவின் பரப்பு மற்றும் படிமங்களாக இருக்கும் கனிமங்கள் குறித்த தகவல்களைத் தரக்கூடிய ஐ.ஆர்.ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்ட 8 கருவிகள் ஆர்பிட்டரில் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆர்பிட்டரிலிருந்து பிரித்து விடப்படும் 1,471 கிலோ எடைகொண்ட “விக்ரம்’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் லேண்டர் பகுதி 14 நாள்கள் ஆய்வை மேற்கொள்ளும். இதில் நிலவின் பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு செய்யும் சீஸ்மோ மீட்டர், வெப்பநிலையை ஆய்வுசெய்யும் கருவிகள் என 3 கருவிகள் இடம்பெற்றிருக்கும். நிலவில் தரையிறங்கிய 15-ஆவது விநாடி யிலிருந்து ஆய்வுத் தகவல்களையும், புகைப் படங்களையும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், ஆர்பிட்டருக்கும் விக்ரம் கொடுக்க ஆரம்பிக்கும்.

27 கிலோ எடைகொண்ட “பிரக்யான்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் வாகனம், நிலவின் பரப்பில் 14 நாள்கள் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். ஒரு விநாடிக்கு 1 செ.மீ. என்ற வேகத்தில் 500 மீட்டர் தூரம் வரை நிலவின் பரப்பில் ரேவர் வாகனம் நகர்ந்து செல்லும். இதில் நிலவின் பரப்பில் நீர் மூலக்கூறுகள், சோடியம், மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், டைட்டேனியம், இரும்புத் தாது உள்ளிட்ட கனிமங்கள் குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், லேசர் கதிர்வீச்சு மூலம் இயங்கும் கருவி என இரண்டு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

1 முதல் 17-ஆவது நாள்வரை: புவி சுற்றுவட்டப்பாதை
17-ஆவது நாள்: விண்கலத்தை நிலவை நோக்கி நகர்த்துதல்
22-ஆவது நாள்: நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைதல்
22-ஆவது நாள் முதல் 49-ஆவது நாள்வரை: நிலவு சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருதல்
50-ஆவது நாள்: லேண்டர் – ஆர்பிட்டர் பிரித்துவிடுதல்
54-ஆவது நாள்: லேண்டர் நிலவில் இறக்குதல்
54-ஆவது நாள்: லேண்டர் உள்ளிருந்து ரோவர் கலம் நிலவில் இறக்கப்படும்

ஆக.. இதுவரை எந்தவொரு உலக நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரை யிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

https://twitter.com/aanthaireporter/status/1153338831556362243

error: Content is protected !!