August 17, 2022

நாசா சாதனை : மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவியது!

ர்வதேச அளவில் மிகப்பெரிய தொலைநோக்கியான James Webb Space Telescope-ஐ வெற்றிகரமாக நாசா விண்ணில் செலுத்தியது. பல மில்லியன் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம் இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கி உள்ளன. பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்த உள்ளனர்.

அதாவது இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறிய 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விண்ணில் செலுத்தியிருக்கிறது நாசா. இந்த தொலை நோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ எனத் தெரிவித்திருக்கிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக நாசா கூறி உள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள், (930,000 மைல்கள்) தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாகின மற்றும் அண்ட சராசரம் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும். பிரபஞ்ச ரகசியம், தோற்றம் தொடர்பான பல புதிர்களுக்கான விடைகள் இந்த தொலைநோக்கி மூலமாக கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.