May 15, 2021

பாலிவுட்டுக்கு போகும் ஷங்கரின் அந்நியன்! விக்ரம் ரோலில் ரன்வீர் சிங்!!

நம் கோலிவுட்டில் முளைத்து பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தவர் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் ஷங்கர். அவரிடம் நம் கட்டிங் கண்ணையா ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது, ‘நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லயே, ஸ்கிரீன்பிளே எழுத ரொம்ப கஷ்டப்பட்டது `அந்நியன்’ கதைக்குத்தான். காரணம், அந்தப் படத்துல எல்லா ஜார்னரும் இருக்கும். கிரியேட் செஞ்ச ஒவ்வொரு கேரக்டர்கள், திரைக்கதை எல்லாத்தையும் சரியா கொண்டுவந்து மிகச்சரியா முடிக்கிறது பெரிய சிரமமாவும், சவாலாவும் இருந்துச்சு.” என்றார் அப்படி தமிழில் பெரு வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான “அந்நியன்” திரைப்படத்தை மீண்டும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங்-கை வைத்து உருவாக்கவுள்ளார். இப்பெரும் ஆளுமைகளை இணைத்து, இப்பிரமாண்ட படத்தினை Pen Studios சார்பில் தயாரிக்கிறார் Dr.ஜெயந்திலால் காடா.

இயக்குநர் ஷங்கர் தன் பிரமாண்ட கற்பனைகளை ,திரையில் கொண்டுவந்து, தமிழ் திரையை, வணிகத்தை உலக அளவில் எடுத்து சென்றததற்காக கொண்டாடப்படுபவர். ஆனால் தன் பிரமாண்ட திரைப்பார்வைக் குறித்து கேட்ட போது, ‘பிரமாண்டமா காட்டவோ அல்லது செலவை அதிகரிச்சு காட்டுறதுக்குன்னு எந்தப் படத்தையும், எந்த சீனையும் திட்டமிட்டு எடுக்கும் பழக்கம் எனக்கில்லை. அதிலும் போன படம் 50 கோடியில் எடுத்தோம் அப்போ இந்தப் படத்தை 100 கோடியில எடுக்கலாமே என்றும் நினைத்து பார்ப்பதில்லை. இதுக்கு முன் செய்த படத்துக்கு வந்த உற்சாகம் குறையாம என்ன ஸ்கிரிப்ட் வருதுனு பார்க்கணும். போன படம் மாதிரியே இருக்கக்கூடாது. அதை எல்லா வகையிலயும் எப்படி அழகுபடுத்தணும்னு யோசிக்கும்போது, அதுக்கு என்ன செலவோ அதைப் பண்றதுதான் என்னோட வழக்கம். அப்படித்தான் நான் படம் பண்றேனே தவிர, செலவு வைக்கணும்னு பண்றதில்லை. ஃப்ரேம்ல பிரமாண்டம் காட்டுறது என்னன்னா செலவு பண்ற காசு படம் பார்க்குறவங்களுக்குத் தெரியணும். எந்த கேமராவுல எந்த லென்ஸ் போட்டு எங்க கேமராவை வெச்சா நம்ம பண்ண மொத்த செலவும் வரும்னு பார்க்கணும். பண்ற செலவெல்லாம் ஸ்கிரீன்ல வர்றதுக்கு டீமா ரொம்ப மெனக்கெடுவோம். அதே நேரம் திரைக்கு பின்னாடி இருக்கிற செலவை எல்லாம் கட் பண்ணிடுவேன். ஏன்னா, அங்க எவ்வளவு செலவு பண்ணாலும் திரையில தெரியப்போறதில்லை. `பாய்ஸ்’ல `பிரேக் தி ரூல்ஸ்’ பாட்டுக்கு எல்லோருக்கும் ஒரே காஸ்ட்யூம். டி-ஷர்ட், பிளாஸ்டிக் பக்கெட், பலூன்கள்னு செலவு குறைவு. ஆனா, பார்க்க பிரமாண்டமா இருக்கும். கொஞ்சம் ஸ்மார்ட்டா வேலை செய்யணும். அவ்வளவுதான்.” என்றெல்லாம் கட்டிங் கண்ணையாவிடம் சொன்னது தனித் தகவல்

இதனிடையே பாலிவுட் ஹீரோ நடிகர் ரன்வீர் தன் திரை வரலாற்றில் கமர்ஷியல் மட்டுமல்லாது பல அட்டகாசமான படங்கள் மூலம் தன் நடிப்பு திறமையை நிரூபித்து வருபவர். இவ்விருவரும்தான் மிகச்சிறந்த ஒரு படமான அந்நியன் மீளுருவாக்கத்தில் இணைகிறார்கள். இப்படம் இந்திய திரை உலகம் கண்டிராத மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இந்த அதிரடியான ஆச்சர்ய அறிவிப்பு வட இந்தியாவில் பைசாகி விழா நாளிலும், தமிழில் புத்தாண்டு விழா நாளிலுமாக, இரு இடங்களிலும் புதுவருட கொண்டாட்ட தினத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. God Bless Entertainment நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் இசை Saregama வில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஷங்கர் படம் குறித்து கூறியது…

இந்தி மொழியில் “அந்நியன்” படம் உருவாக மிகச்சிறந்த நடிப்புதிறன் கொண்ட, திரையினில் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்ட வசீகரம் மிக்க நடிகர் வேண்டும். அந்த வகையில் ரன்வீர் சிங் இன்றைய தலைமுறையின் இணையற்ற நடிகராக, தன் நடிப்பு திறனால் எக்காலத்திலும் அழியாத பாத்திரங்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்களுக்காக “அந்நியன்” படத்தை மீளுருவாக்கம் செய்வது மிக மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த அழுத்தமிகு கதை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் எனும் நம்பிக்கை உள்ளது. ரன்வீரும் நானும் இப்படத்தினை இந்தி மொழியின் ரசிகர்களுக்காக, அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாராக கதையினை மாற்றம் செய்து, மீளுருவாக்கம் செய்யும், எங்கள் கனவினை புரிந்து கொள்ளும் அற்புத தயாரிப்பாளராக Dr. காடா அவர்களை பெற்றிருக்கிறோம். எல்லா வகையிலும் மிகச்சிறந்த படைப்பாக இப்படம் வெளிவரும்.

நடிகர் ரன்வீர் சிங் படம் குறித்து கூறியது…

இயக்குநர் ஷங்கரின் அற்புதமான கற்பனையில் உருவாகும் படைப்பில் வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். நாம் நினைத்து பார்த்திராத பல அரிய சாதனைகளை திரையில் நிகழ்த்தி காட்டியவர் அவர். என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து படம் செய்வேண்டுமென்பது எனது கனவு. இப்படம் ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்தும் என உறுதியாக நம்புகிறேன். “அந்நியன்” போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது, எந்த ஒரு நடிகருக்குமே பெரிய வரமாகும். இந்திய சினிமாவில் நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆளுமையான நடிகர் விக்ரம் எவராலும் நிகழ்த்த முடியாத, மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் தந்திருந்தார். அவரை போல் நடிப்பது கடினம். வாழ்வில் கிடைத்திராத அரிய கதாப்பாத்திரம் இது . என் முழு உழைப்பையும் தந்து இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களுடன் இணையும் மேஜிக்கை நிகழ்த்துவேன் என நம்புகிறேன். இயக்குநர் ஷங்கர் ஒரு வரலாற்று ஆளுமை அவருடன் பணிபுரிவதை, மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்.

Pen Studios சார்பில் தயாரிப்பாளர் Dr. ஜெயந்திலால் காடா படம் குறித்து கூறியது…

இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரன்வீர் இருவரும் ஒரு படத்தில் இணைவது இந்திய திரையுலகின் மிகப்பெரும் திரை நிகழ்வு. Pen Studios மூலம் இந்த இருவரது கூட்டணியில் ஒரு படத்தினை தயாரிப்பது மற்றும் உலகளவில் விநியோகம் செய்யவுள்ளது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இவர்களது கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும். இப்படத்தின் அறிவிப்பு, வட இந்தியாவில் பைசாகி விழா நாளிலும் தமிழில் புத்தாண்டு விழா நாளிலுமாக, இரு இடங்களிலும் புதுவருட கொண்டாட்ட தினத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இயக்குநர் ஷங்கர் மற்றும் ரன்வீர் கூட்டணி இந்திய அளவில் மிகப்பிரமாண்ட வெற்றியை தரவுள்ளதையே குறிக்கிறது.