September 20, 2021

நம்ம கிரிக்கெட் டீமோட கோச் ஆனார் – அனில் கும்ப்ளே!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணல் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் கங்குலி, லட்சுமண், தெண்டுல்கர் ஆகியோர் கும்பிளே, ரவிசாஸ்திரி உள்பட 10 பேரிடம் நேர்காணல் நடத்தினார்கள்.

anil kumble

57 பேர் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், புதிய பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அவர்கள் முடிவு செய்து விட்டதையடுத்து, தங்களது பரிந்துரையை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அளித்தனர். ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் அனில் கும்பிளேவை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே அடுத்த ஒரு ஆண்டுக்கு இருப்பார்.

அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான இந்தியச் சாதனையை வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 271 ஆட்டங்களில் 337 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 2506 ரன்களை 110 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் எடுத்துள்ளார். ஒரு சதம் 5 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் கும்ப்ளேயின் சிக்கன விகிதம் ஓவருக்கு 2.69 ரன்கள். ஒருநாள் போட்டிகளில் சிக்கன விகிதம் 4.30 ரன்கள். முதல் தர கிரிக்கெட்டில் மொத்தமாக 1136 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த அறிவிப்பை பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் வெளியிட்டார். இது குறித்து அவர், “பல ஆலோசனைகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓராண்டு காலம் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பார் என்ற முடிவெடுத்தோம். இந்திய கிரிக்கெட் அணி சிறந்த பயிற்சியாளருக்கான தகுதி பெற்ற அணி. அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ-க்கு பெரிய நம்பிக்கை உள்ளது. உள்நாட்டு அல்லது அயல்நாட்டு பயிற்சியாளர் என்பதல்ல, சிறந்த பயிற்சியாளர் என்ற ஒன்றையே கருத்தில் கொண்டு கும்ப்ளேயைத் தேர்வு செய்துள்ளோம்” என்றார்.

மேலும் அனில் கும்ப்ளே தனது தேர்வு குறித்துக் கூறும்போது, “இந்திய வீரர்கள் அறைக்கு வேறொரு பணி நிமித்தமாகத் திரும்புவது மிக்க மரியாதைக்குரியதாகக் கருதுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்