ஏஞ்செலா மெர்கல் எனும் தேவதைப் பிரதமர்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு
ஜெர்மனியின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒரு பெண்மனி அதுவும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 16 ஆண்டுகளுக்கு அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார் என்பது வியப்பைத்தான் தரும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்ட ஜெர்மனி 1990 ஆம் ஆண்டில்தான் மீண்டும் ஒன்றிணைந்தன. இடைப்பட்டக் காலங்களில் இரண்டு ஜெர்மனிக்கும் வளர்ச்சி விஷயத்தில் கடும் வேறுபாடு நிலவியது. கிழக்கு ஜெர்மனி கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்த பொதுவுடமை நாடு. மேற்கு ஜெர்மனி ஜனநாயக அமைப்பைக் கொண்ட நாடு. கிழக்கு ஜெர்மனியருக்கு மேற்கு ஜெர்மனியைக் காண அடங்காத ஆவல். ஆனால் அது நிறைவேறாத கனவு. அப்படி கனவில் மேற்குலகை விரும்பி வந்தவர்களில் ஒருவர்தான் ஏஞ்செலா மெர்கல். அவரது பின்னொட்டான மெர்கல் முதல் கணவரின் பெயர்.
தனது 35 ஆம் வயது வரை கிழக்கில் வாழ்ந்த ஏஞ்செலா ஒருநாள் கிழக்கு பெர்னிலின் தெருக்களில் நடந்து கொண்டிருந்த போது கிழக்கையும், மேற்கையும் பிரிக்கும் சுவருக்கு அப்பாலிருந்து ஏராளமான மக்கள் வருவதும், இங்கிருந்து போவதுமாக இருந்த நிலையில் என்ன நடக்கிறது என்று வினவியபோதுதான் கிழக்கு ஜெர்மனி தனது எல்லையை திறந்து விட்டுள்ளது என்று புரிந்தது. பின்னர் தடைச் சுவர் இடிக்கப்பட்டது., இன்று அங்கொரு நினைவுச் சின்னம் மட்டுமேயுள்ளது. தனது இரசாயன ஆய்வுகளை விடுத்து அரசியலில் இறங்கிய ஏஞ்செலா முதலில் சிறிய கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அக்கட்சி கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பு எனும் ஆளுங்கட்சியுடன் இணைந்தது. அன்றைய பிரதமர் ஹெல்முட் கோல் என்பவரின் பார்வையில் பட்ட ஏஞ்செலாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சிறிது காலம் கழித்து கோல் ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்ள அவரது கட்சித் தலைமைப் பதவி ஏஞ்செலாவிற்கு கிடைத்தது. அடுத்த ஐந்தரை வருடங்களில் ஏஞ்செலா ஒன்றுபட்ட ஜெர்மனியின் முதல் பெண் பிரதமரானார். அதுவும் கிழக்குப் பகுதியிலிருந்து வந்த அரசியல்வாதி!
கிழக்கிலிருந்து வந்த அரசியல்வாதி இரண்டு ஜெர்மனியையும் பொருளாதாரம், சமூகம் மற்றும் தனி நபர் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை. அது மட்டுமின்றி 2015 ஆம் ஆண்டில் சிரியா உட்பட பல நாடுகளிலிருந்து அகதிகளாக நுழைந்த அராபிய மற்றும் இன்னும் பிற மக்களையும் ஜெர்மனியர்கள் ஏற்றுக்கொள்ளும்படி போராடினார். அப்போதெல்லாம் அவர் ஜெர்மனி தனது பன்முகத்தன்மையை இழந்து வருகிறது என்று எச்சரித்தே வந்தார். அகதிகளுக்கு எதிரான நிறவெறிக்கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்தே வந்ததும் அவர் சந்தித்த சவால்களில் பெரிதாக இருந்தது. சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அதே சமயம் தனது பதவியை விட்டுக்கொடுக்கவும் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் தனது பிரதான எதிர்க்கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் புதிய பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஷோல்ஸ்சிடம் பதவியை ஒப்படைத்து விட்டு வெளியேறினார். அத்தேர்தலில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்து விட்டது. சமூக ஜனநாயக கட்சி நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பசுமைக் கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைத்தது.
ஏஞ்செலாவும் இதற்கு முன்னர் எவருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில் சமூக ஜனநாயக் கட்சியுடன் ஆட்சிப் பொறுப்பை பகிர்ந்து கொண்டவர்தான். அவரது அரசில் நிதியமைச்சராக இருந்தவர்தான் இன்றையப் பிரதமர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பிய முன்னணி நாடுகளில் ஜெர்மனிக்கு தனியிடம் இருந்தது. அதன் வளர்ச்சி (மேற்கு ஜெர்மனியின் வளர்ச்சி) வியப்படையும் வகையிலும் இருந்தது. இந்தியா போன்ற நாடுகளுக்கு மேற்கு ஜெர்மனி கடனெல்லாம் கொடுத்தது. ஆயினும் அது அமெரிக்கா உட்பட பல தொழில்மய நாடுகளிடம் உதவிக் கேட்டுப் பெற்றுத்தான் முன்னேறியது. உலகில் அதிக வரி வசூலிக்கும் அரசுகளில் ஜெர்மனிக்குத்தான் முதல் இடம். இங்கு பொருளாதாரத்தில் புழங்கும் மொத்த வருமானத்தில் 50% அரசுக்கு வரியாகவோ அல்லது வரியல்லாத வகையிலோ வருவாயாகப் போகிறது. அதே சமயம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்த ஒன்று. வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவது உட்பட பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதும் ஜெர்மானிய அரசின் சாதனைகளில் ஒன்று.
கடந்த 2013 ஆம் ஆண்டில் ஸ்விஸ் நாட்டின் தாவோஸ் நகரில் நிகழ்ந்த மாநாட்டில் பேசிய ஏஞ்செலா ஐரோப்பாவிடம் உலகின் 7% மக்கள் தொகை இருந்தாலும் 25% உலக வருமானத்தைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் உலகின் 50% சமூக நலச் செலவுகளை செய்கிறது என்று சுட்டிக்காட்டினார். அவர் சமூக நலத் திட்டங்களுக்கு ஆகும் செலவை குறுக்கச் சொல்லவில்லை. ஏனெனில் ஐரோப்பிய சமூகம் முதுமை அடைந்து வருகிறது. மக்கள் தொகை குறைந்து வருகிறது. பல நாடுகளில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள சலுகைகளையும், ஊக்கத்தொகையும் கூட அளிக்கிறார்கள். தொழில்நுட்பம், வளர்ச்சி, அமைதி ஆகியவை ஐரோப்பாவில் அதிகம் உள்ளன. அதுவும், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விடர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிடையே ஒற்றுமையும், முரண்பாடுகளும் அதிகம் உண்டு. எனினும் ஜெர்மனியும், பிரான்ஸ்சுமே ஐரோப்பாவின் இஞ்சின்கள் எனக்கருதப்படுகின்றன. அத்தகைய நிலைக்கு ஜெர்மனியை தக்கவைத்துக்கொள்ள சமரச ஆட்சியைக் கொடுத்தப் பெண்மனியான ஏஞ்செலா உண்மையிலேயே வரம் தரும் தேவதைப் பிரதமர்தானே?