April 2, 2023

ஆந்திராவில் அதீத வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை!- வீடியோ

நாடெங்கும் கொரேனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஆந்திராவில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதி மருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.இதில் 656 ஆம்புலன்ஸுகள் நடமாடும் மருத்துவமனை யாக ‘104’என்ற அழைப்பிற்காக இயக்கப்பட உள்ளது. இதில் 77 பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. எஞ்சிய வாகனங்கள் அனைத்தும் ‘108’ அழைப்பிற்கான சேவை ஆம்புலன்ஸாக இயக்கப்படவிருக்கின்றன.

இது குறித்து கூறிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை செயலாளர் டாக்டர் ரமேஷ்குமார், 104 ஆம்புலன்ஸ் சேவையானது, அனைவருக்கும் உரிய மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் புரட்சிகரமான திட்டம் என்றார். இவை கிராமப்புற சிகிச்சை மையங்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஒன்றிணைக்கும். இந்த நடமாடும் மருத்துவமனைகள், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் உடல்நிலை குறித்த சுகாதார அட்டையை பராமரிக்கும். குழந்தைகள் இறப்பைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்று கூறினார்.

இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆம்புலன்ஸ்களில் நவீன மருத்துவ கருவிகளுடன் வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆம்புலன்ஸில் பணியில் இருக்கும் மருத்துவர், மற்றொரு மருத்துவருடன் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடத்த முடியும்.