February 7, 2023

மிழ் சினிமாவில் முதல் டபுள் ஆக்ஷன் படம் 1940ல் வெளிவந்தது. கிராபிக்ஸ், தொழில்நுட்பம் எதுவுமே பெரிதாக தலை நீட்டப்படாத அக்காலத்திலே இது சாத்தியமாக்கப்பட்டது. ராஜகுலத்தில் பிறந்த இரட்டையர்கள், தாய் மாமாவின் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவர் நல்லவராகவும் மற்றொருவர் கெட்டவராக வாழ, இறுதியில் கெட்டவன் திருந்தி அண்ணன் தம்பி இணைந்து மகுடம் சூடுவர். அக்காலத்திலே இக்கதைக்கு மவுசு அதிகம். 1940ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கி பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தம புத்திரன்’ படம் இக்கதையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதே கதை, இயக்குனர் ஸ்ரீதரின் திரைக்கதையில் 1958ல் ‘உத்தம புத்திரன்’ என்ற அதே தலைப்புடன் வெளியானது. இந்திய சினிமாவிலேயே அதிக இரட்டை வேடப்படங்கள் செய்தவர் என்.டி.ஆர். அதே சமயம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-தான் . தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மக்கள் திலகம் 16 படங்களில் இரட்டை வேடங்களை ஏற்றிருக்கிறார். அது சரி இதெல்லாம் இப்போ எதற்கு என்கிறீர்களா? ஹிப் ஹாப் ஆதி புதுசாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படும் அன்பறிவு விமரசனத்தின் முன்னோட்டக் குறிப்பிது! அரதப் பழசான கதை ,திரைக்கதையில் புதுமையோ, சுவாரஸ்யமோ, ஒட்டுதலோ கொஞ்சமும் இல்லாத படமிது!

கதைப்படி அன்பு என்றும் அறிவு என்றும் இரட்டையர் வேடங்களில் வந்து போகும் ஆதியில் அம்மாவிடம் ஒருவரும், அப்பாவிடம் ஒருவருமாக வளர்கிறார்(கள்). மதுரைப்பக்க கிராமத்தைச் சேர்ந்த அப்பா சாய் குமாரும், அம்மா ஆஷா சரத்தும் காதலித்து மணந்து கொண்டவர்கள். ஆஷாவின் அப்பா பாசம் சாய்குமாரை வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கிவிட, அந்த வீட்டில் சுயநலம் பிடித்த பணியாளராக இருக்கும் விதார்த்தின் சூழ்ச்சிப்படி மனைவியைப் பிரிந்து ஒரு குழந்தையுடன் வெளிநாடு செல்கிறார். அப்புறம் நடக்கும் எல்லாமே பல படங்களில் பார்த்த பக்கா மசாலா சீன்களின் தொகுப்பே..

ஹிப் ஹாப் ஆதிக்கு வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்த இரண்டு ரோல்களும் கொஞ்சம் கூட வித்தியாசம் காட்டாமல் சொதப்பி விட்டார். மதுரை வட்டார மொழியில் இழுத்து இழுத்துப் பேசினால் அன்பு, வார்த்தைகளுக்கு இடையே சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசினால் அறிவு என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். ஹேர் ஸ்டைலில் கூடவா மாற்றம் செய்ய முடியாது. வழக்கமான பொழுதுபோக்கு குடும்ப சினிமாக்களில் என்ன வேலையோ அதே வேலைதான் இதிலும் நாயகிகளுக்கு. இவர்கள் தவிர நெப்போலியன் (இவர் ஒருவர்தான் தன் கம்பீரமான தோற்றம், அனுபவ நடிப்பால் அசத்தி இருக்கிறார்) , ஆஷா சரத், சாய் குமார், தீனா, ரேணுகா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவே. வில்லனாக நடித்துள்ள விதார்த் தன்னால் இயன்ற அளவு கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்திருக்கிறார்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் மதுரையும், கனடாவும் கூடுதல் அழகாக தெரிகிறது. இசை என்ற பெயரில் பார்ப்போரை இம்சைப்படுத்தும் வேலையையும் ஹிப் ஹாப் ஆதி செம்மையாக செய்திருக்கிறார்.,. அந்தக் கால பாகவதர் படம் போல் திகட்டுவது போல் ஒன்பது பாடல்கள். ஆனால் ஒரு பாடலும் மனத்தில் தங்கவில்லை என்பதும் நிஜம்.

புதுமுக இயக்குநர் கிடைத்த முதல் வாய்ப்பில் ஜாதிச் சர்ச்சையை கிளப்ப முயன்று அரைத்த மாவை அரைக்க முயன்று கடுபேற்றி உள்ளார். அதே சமயம் ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணி இருக்கும்,படத்தின் நீளத்தை ஆளாளுக்கு எடிட் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி தியாகராஜனுக்கு நன்றி சொல்வோர் பட்டியல் பெரிசு..

மொத்தத்தில் அன்பறிவு – அவுட் ஆஃப் ஆர்டர்

மார்க் 2. 25 / 5