June 27, 2022

இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி!

கூகுள் டூடுலில் இன்னிக்கு இடம் பிடிச்சிருப்பவர் நம்ம இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி

✍?இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான. ஆனந்தி கோபால் ஜோஜிக்கு இன்னிக்கு பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவு கூரும் விதமாகவே  கூகிள் அவருக்குச் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இதனை பெங்களூரை சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர் வடிவமைச்சிருக்கார்.

மராட்டிய மாநிலம் பூனாவில் பிராமணக் குடும்பத்தில் இதே 31ம் தேதி மார்ச் மாசம் 1865-ம் வருஷம் பிறந்தார் யமுனா. ஆனந்தி பாய் ஜோஷியாக புகழ் பெற்றவருக்கு பெற்றோர் முதலில் சூட்டிய பெயர் யமுனா. இவருக்கு 9 வயதாக இருந்தபோது இவரை விட 20 வயது மூத்தவரான கோபால் ஜோஷி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் அஞ்சல் துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார்.முற்போக்குவாதியான கோபால் ஜோஷி தனது மனைவியின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். மேலும் தன் மனைவியை கல்வி கற்கும்படியும் ஆர்வமூட்டினார். இதைத் தொடர்ந்து ஆனந்தி ஆங்கிலம் மற்றும் பிற கல்வியையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார்.

14 வயதாக இருந்தபோது ஆனந்தி ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். அந்தக்குழந்தை போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பிறந்த 10 நாட்களில் மரணம் அடைந்து விட்டது. மேலும் அப்போது ஆனந்திக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். அதிலும் பெண் மருத்துவர்கள் என்று யாருமே இல்லை.எனவே மருத்துவம் படித்து தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று ஆனந்தி விரும்பினார். இதற்கு அவரது கணவரும் ஆதரவு அளித்தார். ஆனால் அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு, சமூக கட்டுப்பாடுகள் நிறைய இருந்தன. பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது. அதுபோன்ற நிலையில் ஒரு பெண் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தது.

இருப்பினும் கணவரின் உதவியுடன் அத்தனை தடைகளையும் அவர் தாண்டினார்.ஆனந்தி யின் மருத்துவக்கல்வி ஆர்வத்திற்கு உதவ அமெரிக்க குடும்பம் ஒன்று உதவி செய்தது. இதையடுத்து 1883-ம் ஆண்டு ஆனந்தி தனியாக அமெரிக்கா சென்றார். கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் சென்றார். பின்னர் பென்சில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனந்திபாய் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த போது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும், பழக்கமில்லாத உணவு வகைகளும் அவரது உடல்நலத்தை மிகவும் பாதித்தன. காச நோய் அவரைத்தாக்கியது. இது போன்ற பல்வேறு தடைகளையும், துன்பங்களையும் தாண்டி அவர் 1886-ம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு விக்டோரியா ராணி வாழ்த்துச்செய்தி அனுப்பி கவுரவித்தார்.

1886 இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்தபோது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன்’ என்று ஆனந்தி கடைசியாக கூறினார்.

இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சி பெண்ணாக வாழ்ந்த இவர் வாழ்க்கை போராட்டங்கள் இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் என்பதாலேயே கூகிளும் அவரை நினைவு கூர்ந்துள்ளது. ??

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்? By கட்டிங் கண்ணையா:

ஆனந்தியில் கணவர் கோபால்ராவ் தன் மனைவி மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். கூடவே ராபர்ட் வைல்டர் என்ற கிறித்தவ மறைபணியாளருக்கு 1880ல் கோபால்ராவ் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ஆனந்தி பாய்க்கு அமெரிக்காவில் மருத்துவம் படிப்பதில் இருந்த ஆர்வத்தை விளக்கி அதற்கு உதவும்படியும் தனக்கும் அமெரிக்காவில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை வாங்கித்தரவும் கோரியிருந்தார். உடனே தம்பதிகள் இருவரும் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றுவதாக வைல்டர் நிபந்தனை விதித்தார். ஆனால் மதம் மாறுவதற்கு கோபால்ராவ் தம்பதிகள் உடன்படாததால் அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை.

அதே சமயம் கோபால்ராவ் எழுதிய கடிதத்தை வைல்டர் தனது பத்திரிக்கையான பிரின்ஸ்டன்ஸ் மிஷினரி ரெவ்யூவில் வெளியிட்டார். நியூ ஜெர்சியின் ரோசலைச் சேர்ந்த தியோடிசியா கார்பெண்டர் பல் மருத்துவரைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது அதனைப் படிக்க நேர்ந்தது. ஆனந்திபாய்க்கு மருத்துவம் படிப்பதில் இருந்த அதீத ஆர்வமும் கோபால்ராவ் தன் மனைவியின் விருப்பத்தற்கு அளித்த ஆதரவும் தியோடிசியாவின் மனதைத் தொட்டன. ஆனந்திபாய் அமெரிக்காவில் தங்குவதற்கு இடமளிக்க முன் வந்தார். இருவருக்குமிடையே கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது. கடிதங்களில் அவர்கள் மற்ற விஷயங்களோடு இந்து மதக் கலாச்சாரத்தைப் பற்றியும் விவாதித்தனர்.

இதனிடையே கொல்கத்தாவிலிருந்தபோது ஆனந்திபாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பலவீனம், விடாத தலைவலி, எப்போதாவது வரும் காய்ச்சல், சில சமயங்களில் மூச்சுத்திணறல் என்று அவர் சிரமப்பட்டார். தியோடிசியா அமெரிக்காவிலிருந்து மருந்துகள் அனுப்பியும் பலனில்லாமல் போனது. 1883ல் கோபால்ராவிற்கு ஸ்ரீராம்பூருக்கு மாற்றலாகியது. அப்போது அவர் தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். உடல்நலம் குன்றிய நிலையிலும் மனைவி படித்து மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனந்திபாய் சற்றுத் தயங்கினாலும் பிற பெண்களுக்கு எடுத்துக் காட்டாய் இருக்க வேண்டிய அவசியத்தை கோபால்ராவ் அவருக்கு விளக்கி அமெரிக்கா செல்வதற்கு அவரைச் சம்மதிக்க வைத்தார்.

பென்சில்வேனியாவிலிருந்த பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்படி தார்பார்ன் மருத்துவத் தம்பதியினர் ஆனந்தி பாய்க்கு ஆலோசனை கூறினர். (உலகில் பெண்களுக்கு மருத்துவக் கல்வியளிக்க தொடங்கப்பட்ட முதல் துறை) மேற்கத்திய நாட்டில் மேற்படிப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட ஆனந்திபாயை இந்து வைதீகவாதிகள் பழித்தனர். பாராட்டி ஊக்கப் படுத்திய கிருத்துவர்களோ மதம் மாறத் தூண்டினர். அதையடுத்து ஸ்ரீராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஆனந்திபாய் மக்களைக் கூட்டி அவர்களிடம் தனது மருத்துவராகும் கனவையும் அதை நிறைவேற்றத் தானும் தனது கணவரும் சந்திக்கும் பிரச்சனகளையும் விளக்கிப் பேசினார். இந்தியாவில் பெண்மருத்துவர்களின் அத்தியாவசியத்தையும் இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவேண்டுமென்ற தனது குறிக்கோளையும் அவர்களுக்குப் புரிய வைத்தார். எந்தக் காலத்திலும் தான் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்று உறுதியும் அளித்தார். அவரது பேச்சு எங்கும் பரவி நாடு முழுவதிலிருந்தும் அவருக்கு பண உதவி வர ஆரம்பித்தது. அப்போதைய இந்திய வைசிராய் அவரது படிப்பிற்காக ரூபாய் 200 அளித்தார்.