அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ரயில் விபத்து ; காரணம்?
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது நேரிட்ட ரயில் விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ரயில்வேயின் இடத்துக்குள் மக்கள் கூடிநிற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறாததே ரயில் விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் என்னும் பகுதியில் ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த விழா நிகழ்ச்சியானது ரயில் தண்டவாளம் இருக்கும் பகுதிக்கு அருகில் நடந்துகொண்டிருந்தது. ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் அங்குக் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தின் மீது ஏறியும் ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப் பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது. பொம்மைக்குள் வெடிகளை வைத்துக் கொளுத்தி இருக்கிறார் கள். பட்டாசு வெடிக்கும் சத்தம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை என இந்த ரயில் விபத்து குறித்து வெளியான வீடியோ மூலம் தெரிகிறது. அப்போது, வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
தகவலறிந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்து வமனையில் அனுமதித்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று கூறப் படுகிறது. பலர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறித்து அரசு தரப்பில் இருந்து முழுமையான தகவல் இன்னும் வெளியிடவில்லை. இந்த ரயில் விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தசரா விழாவில் இந்த துயரச் சம்பவம் நடந்து உள்ளது. அவர் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து பற்றி டெல்லியில் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் கூடி நிற்பது அப்பட்டமான விதிமீறல் என்று தெரிவித்தனர்.ரயில் பாதையை ஒட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கான எந்த அனுமதியும் கேட்கப்பட வில்லை என்றும், இந்த விபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என்றும் அவர்கள் கூறினர். அத்துடன் பஞ்சாப் அமைச்சரின் மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்கு தெரிந்திருக்கும் என்றும், அது தொடர்பாக ரயில்வேக்கு தெரிவிக்காதது நிர்வாகத்தின் தவறு என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விபத்துக்கு உள்ளூர் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர்கள், விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், எங்கும் புகை சூழ்ந்திருந்த தாலும் மக்கள் கூட்டத்தை ரயில் ஓட்டுநரால் பார்த்து உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர். எனினும், உடனடியாக ரயில்வே மருத்துவக் குழுக்கள், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவினர் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த ரயில் விபத்திற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று (அக்டோபர் 20) அனைத்து அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும்” என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். “அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்து வருத்தமளிக்கிறது; இதயத்தை உருக்குகிறது; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்; ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி களைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்