அமிதாப்பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!- குடியரசு தலைவர் இன்று வழங்கினார்!

அமிதாப்பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!- குடியரசு தலைவர் இன்று வழங்கினார்!

பாலிவுட்டின் பிக் பி என்றைழைக்கப்படும் ஆல் இண்டிய சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் பத்ம விபூஷன், 4 தேசிய விருதுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ள நிலையில் இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (டிசம்பர் 29) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு வழங்கினார்.

66 வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 23 ஆம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெற்றது.இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் ‘பாரம்’, ஹிந்தியில் ‘அந்தாதூன்’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வாகின. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அமிதாப் பச்சன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னால் விருது வழங்கும் விழா வில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.இந்நிலையில் 29 ஆம் தேதி (இன்று) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்ததிருந்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் பேசிய நடிகர் அமிதாப் பச்சன், “திரைத்துறை யில் உயரிய விருது பெறுவதை பெருமையாக கருதுகிறேன். ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவால் இந்த இடத்தில் நிற்கிறேன்” என்று கூறினார்.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்தியில் பிரபலமான கவிஞராக இருந்த ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருந்த தேஜி பச்சனுக்கும் பிறந்தவர் இந்த அமிதாப்ப் பச்சன். பிறந்த நாள், 1942 அக்டோபர் 11, இன்குலாப் என்றே பெற்றோரால் இடப் பட்டது சுதந்திரப் போராட்ட காலத்தில் `இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற வார்த்தைகள் ஹரிவன்ஷ் ராய் பச்சனை ஈர்க்க, அந்த பெயர் சூட்டினார். அதுவே பிறகு அமிதாப் ஆனது. அதன் பொருள் `அணையாத ஒளி’!

1969 –ல் வெளிவந்த `ஸாத் ஹிந்துஸ்தானி’, இவரின் அறிமுகப் படம். படம் வெற்றி பெறவில்லை. ஆனால், சிறந்த புதுமுக நடிகருக்கான முதல் தேசிய விருதை வாங்கினார் அமிதாப்!

1973-ல் `சாஞ்சீர்’ படத்தில் நடித்த போது ஜெயபாதுரியுடன் காதல். அதே ஆண்டு ஜீன் 2-ல் திருமணம் நடைபெற்றது. அப்போது அமிதாப் அவ்வளவு பெரிய ஹீரோ அல்ல. ஆனால், ஜெயா…. சூப்பர் ஹிட் ஹீரோயின், ஜெயாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு தான் சினிமாவில் தனக்கு ஏற்றம் கிடைத்தது என்று இன்றும் நம்புபவர் அமிதாப்!

அமிதாப் ஜெயாபச்சன் இருவரும் கணவன் மனைவியாகவே பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவற்றில் `அபிமான்’, சுப்கே சுப்கே’, `ஷோலே’ ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள்!

யாஷ் சோப்ரா இயக்கி, அமிதாப் நடித்த `தீவார்’ படம், இந்தியா டைம்ஸ் வெளியிட்ட `கட்டாயமாகப் பார்க்க வேண்டிய டாப் 25 பாலிவுட் படங்களின்’ பட்டியலில் இன்று வரை முதல் இடத்தில் உள்ளது!

1975 ஆகஸ்ட் 15 அன்று வெளியான `ஷோலே’ இன்று வரை இந்திய சினிமாவின் `ஆல் டைம் ரெக்கார்ட்’ சுமார், 160 மில்லியன் அமெரிக்க டாலர் கணக்கில் இதன் வசூல் ஒரு மெகா சாதனை. `இந்த நூற்றாண்டின் படம்’ என்று பி.பி.சி. பாராட்டியது!

1973 முதல் 1983 வரை அமிதாப் நடித்து வெளியான அனைத்துப் படங்களும் எகிடுதகிடு ஹிட் தொடர்ந்து ஹிட் கொடுத்ததால், பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ஃப்ராங்க்காய்ஸ் ட்ரூஃபாட் இவரை `ஒன் மேன் இண்டஸ்ட்ரி’ என்று வர்ணித்தார்!

அமிதாப், சிறந்த பாடகரும்கூட 1979 –ல் வெளியான `மிஸ்டர் நடவர்லால்’ படத்தில் இவர் சொந்தக் குரலில் பாடல்களைப் பாடினார். இதனால் அந்த ஆண்டு ஃபிலிம் ஃபேர் சிறந்த பின்னணிப் பாடகர் விருது கிடைத்தது!

1982 –ல் `கூலி’ படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக் காட்சியில் இவருக்குக் காயம் ஏற்பட்டது. இவர் குணமடைய உலகம் முழுக்க, சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். ரசிகர்கள். பல மாதங்கள் மருத்துவ மனையில் இருந்து, அதன் பிறகு மீண்டும் நடித்தார். இவருக்கு ஏற்பட்ட விபத்தினால் உண்டான விளம்பரமே இந்தப் படத்தை `பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’ அடிக்கச் செய்தது!

1984 –ல் அமிதாப்பின் அரசியல் வருகை ஆரம்பித்தது. அலகாபாத் தொகுதியில், உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பஹீகுணாவை எதிர்த்துப் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் (68.2%) வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று வருடங்கள் இருந்தவர். தன் பதவிகளை ராஜினாமா செய்தார்!

`அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (ஏபிசிஎல்) வியாபாரத்தில் தோல்வி அடைந்த சமயம். நண்பர் அமர்சிங் உதவி செய்தார். அந்த கைமாறுக்காக அமர் சிங்கின் சமாஜ்வாடி கட்சியை ஆதரித்தார். இவர் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனார்.!

தொடர்ந்து படங்கள் தயாரித்து அவை தோல்வி அடைந்த நிலையில் கனரா வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாமல், தன் `ப்ரதீக்‌ஷா’ வீட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதில் இருந்து மீள இவருக்குக் கைகொடுத்தது. `கெளன்பனேகா க்ரோர்பதி’ டிவி. தொடர்! இதன் பின்னர் சுதாரித்து வாழ்க்கைக் கடத்திக் கொண்டிருக்கிறார்

error: Content is protected !!