March 22, 2023

கொரோனாவை வென்ற மோடி : பீகாரில் பிரச்சாரத்தை தொடங்கிய அமித்ஷா!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பு இருந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமாகிய அமித்ஷா, டிஜிட்டலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பீகார் மாநிலத்தில் வரும் நவம்பருடன் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவடைவதால் அக்டோபரில் அம்மாநிலத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று டிஜிட்டல் மூலம் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில் அவரின் பேச்சைக் கேட்க பாஜக சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத அமித் ஷாவைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் பாட்னாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் முழக்கத்திற்குப் பதிலாக தங்களுடைய கைகளில் வைத்திருந்தப் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பினர்.

அப்போது அவர், “கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நடவடிக் கையில் இந்தியாவின் நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன். சுகாதாரப் பணியாளர் கள், காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு அளப்பரியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களின் முயற்சியினால் நாம் இன்று நலமாக இருக்கிறோம். மக்கள் ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி பெரும் மதிப்பை பெற்றார். ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

அனைவரும் பத்திரமாக சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இன்று அனைவரும் நலமாக உள்ளனர். கொரோனா ஒழிப்பில் மக்கள் பிரதமர் மோடிக்கு துணையாக நின்றனர். ஆனால் இதனை சிலர் அரசியல் செய்கின்றனர். பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் அமைதியான முறையில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ., தலைமை யிலான கூட்டணி ஆட்சி பீகாரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார். மேலும் பேசிய அவர்; முன்பு நமது எல்லைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்த ஒரு காலம் இருந்தது. டெல்லியில் இருந்த அரசு பாதிக்கப்படமால் இருக்க நமது ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப் பட்டது. உரி மற்றும் புல்வாமா எங்கள் காலத்தில் நடந்தது. இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிறகு அதன் எல்லைகளை பாதுகாக்கக்கூடிய வலிமை பொருந்திய நாடு இருந்தால், அது இந்தியா தான் என்று முழு உலகமே ஒப்புக்கொள்கிறது.” என்று பெருமை பொங்கப் பேசினார் .. ஆனால் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் இந்த பிரச்சாரத்துக்கு பலதரப்பினரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்