தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் கைது!- பிரஸ் கிளப்புகள் கண்டனம்!

தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் கைது!- பிரஸ் கிளப்புகள் கண்டனம்!

பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர், இன்று டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கு குறித்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் வேறு வழக்கின் பின்னணியில் அவர் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி கைதுக்கு ஆல் இண்டிய பிரஸ் கிளப் தொடங்கி சென்னை பிரஸ் கிளப் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். .

தகவல்களை சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூசின் இணை நிறுவனர் முகமது சுபேர், பல தகவல்களை தனது சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையில், அவருக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், தன்னை கொடுமையாக கமெண்ட் செய்த ஒரு ட்விட்டர் பயணியை சுட்டிக் காட்டி, அவரை டேக் செய்து, “நீங்கள் இப்படி சோசியல் மீடியாக்களில் வந்து அடுத்தவர்களை அசிங்கமாக பேசுவது உங்கள் பேத்திக்கு தெரியுமா? நீங்கள் உங்கள் profile pic மாற்ற பரிந்துரைக்கிறேன்.” என அந்த பயணியின் profile pic-இல் இருக்கும் அவரது பேத்தியை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார். மேலும், அந்த பதிவு போடும் போது, அந்த பெண் குழந்தையும் முகத்தை மறைத்தும் பகிர்ந்திருக்கிறார். ஆனாலும் இதனைத் தொடர்ந்து, NCPCR, அதாவது, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம், சிறு குழந்தையின் தகவலை தவறான முறையில் கையாண்டதாக புகார் அளிக்கப்பட்டது. பின், டெல்லி காவல்துறையின் சைபர் செல் அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

அந்த நேரத்தில், மைனரை ஏமாற்றியதாக சுபேருக்கு எதிரான குற்றச்சாட்டை ஆல்ட் நியூஸ் தவிடுபொடி ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சுபைர் டெல்லி ஐகோர்ட்டை அணுகியதால், கோர்ட் அவருக்கு எதிராக எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க டெல்லி காவல்துறைக்கு தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சம்மந்தமாக விசாரிக்க சுபேரை டெல்லி போலீஸ் இன்று வரவழைத்திருந்தனர்.ஆனால், அவருக்கு ஐகோர்ட் கொடுத்த பாதுகாப்பு காரணமாக புதிதாக ஒரு வழக்கு அவர் மீது பதிவு செய்து, அவர் மேல் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து சுபேர் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித்த ஆல்ட் நியூஸ் நிறுவர் பிரதீக் சின்ஹா, பத்திரிக்கையாளர்கள் சுபேரை சந்திக்க அனுமதிக்காததாகக் கூறப்படுகிறது. மேலும் எஃப் ஐ ஆர் குறித்த தகவல்களை வெளியிடவும் மறுத்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களைத் தடுக்கும் டெல்லி காவல்துறையின் IFSO அதாவது Intelligence Fusion and Strategic Operations சிறப்புப் பிரிவால் இந்த கைது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்களை வழங்குவது அடிப்படையில், பிரிவு 153 இன் கீழ், மற்றும் வேண்டுமென்றே மற்றும் தீங்கு இழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதாக, பிரிவு 295A வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முகமது சுபேர் தகவல் சரிபார்ப்பு தளமான Alt News இன் இணை நிறுவனராக இருக்கும் நிலையில், பல வருடங்களாக போலிச் செய்திகளை இடைவிடாமல் நீக்கி வருகிறார். கடந்த மே மாதம், சுபேர் மூன்று சர்ச்சைக்குரிய இந்துத் தலைவர்களான யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் – ஆகியோரை ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்று ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்காக, அவருக்கு எதிராக உத்தரபிரதேச காவல்துறை வழக்கும் பதிவு செய்தது. இந்து உணர்வுகளை சீர்குலைத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் சுபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வெறுப்பு உணர்வாளர்கள் என்று அழைக்கும் இந்த இந்துத் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும், முகம் சுளிக்கும் பல ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்கள் என்பதும், யதி நரசிங்கானந்தாவும் வெறுப்புப் பேச்சு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இக் கைது குறித்து சென்னை பிரஸ் கிளப் உள்பட பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனக் குரல் குரல் எழுப்பி வருகிறது.

error: Content is protected !!