September 25, 2021

ஆல் பாஸ் அப் டூ அஞ்சாம் கிளாஸ் ஒன்லி – மத்திய அரசு முடிவு!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக non-detention எனப்படும் அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. 2009 மத்திய அரசால் இயற்றப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம், இந்த ஆல் பாஸ் திட்டத்தை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த Non-Detention திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். “மாணவர்கள் அந்தக் கல்வியாண்டிற்கான பாடங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் கற்று கொண்டார்களா? அடுத்த மேல் வகுப்பினை படிப்பதற்கு தகுதியடைந்து விட்டார்களா?” என்பன போன்ற அடிப்படைக் கேள்விகள் கூட இங்கே பதிலில்லாமல் நிற்கின்றன.

exam viii july 1

இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக அரசு சொல்லும் காரணம் தேர்வு பயத்தினால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கின்றது. தேர்வு முடிவுகளால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதெல்லாம் தான். ஆனால் இது மாணவர்களை காரணம் காட்டி நமது கல்வித்துறையிலும், கல்வி முறைகளிலும் உள்ள பெரிய ஓட்டைகளை அடைக்க முயலும் சாக்கு போக்காகவே பார்க்க முடிகிறது. ஏனெனில் “தேர்ச்சி” என்பதின் முழு பொறுப்பையும் மாணவர்கள் தலையில் மட்டும் சுமத்த முடியுமா? வருடத்திற்கு 15,000 கோடி ரூபாய் செலவழைத்தும் அடிப்படை தேவைகளான, சுகாதாரமான பள்ளிக் கட்டமைப்புகளையோ, போதுமான ஆசிரியர்களையோ, தேவையான கற்றல், கற்பித்தல் உபகாரங்களையோ கூட அரசால் இன்னும் எல்லா பள்ளிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.தரமான கற்பித்தலை உறுதி செய்ய தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த முடியவில்லை.ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தம் பணியை சரிவர செய்கின்றனவா என உறுதி செய்யவேண்டிய கல்வித் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?மேற்கண்ட எதையுமே திறம்பட செயல்படுத்த முடியாத அரசின் கை கழுவும் தந்திரமாகத்தான் இந்த அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. அதே சமயம் 8ஆம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச்செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ஆம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்தவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.அதில், தற்போது, 8–ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5–ம் வகுப்புவரை மட்டுமே ‘ஆல் பாஸ்’ திட்டம் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபற்றி மேலும், “8–ம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் செய்யப்படும். அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5–ம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.”அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.