பாக். நடிக, நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது – இந்திய சினிமா சங்கம் எச்சரிக்கை!
உலக நாடுகளையே கவலை அடைய வைத்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய சினிமாத்துறையில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிக்கப்படுவதாக அனைத்திந்திய சினிமா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது பல தரப்பிலும் ஆதரவை பெற்றி ருந்தாலும் கலைஞர்கள் மொழி, இனம், துவேஷம் இல்லாதவர்கள் என்பதால் அவர்களை பழி வாங்கக் கூடாது என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு அனைத்திந்திய சினிமா ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட செய்தியில் இந்திய சினிமாத்துறையில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையும் மீறி பாகிஸ்தான் கலைஞர்களை பணிக்கும் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்திந்திய சினிமா ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன. மகாராஷ்டி ராவின் நவநிர்மான் சேனா கட்சி கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்திய இசை வெளியீட்டு நிறுவனங்கள் பாகிஸ்தான் பாடகர்களுடன் பணியாற்றுவதையும் அவர்களின் பாடல்களை வெளியிடுவதையும் நிறுத்தும்படி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைபடங்களை பாகிஸ்தானுக்கு விற்பதை நிறுத்த மும்பையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்திய தயாரிபாளர்கள் முடிவு செய்தனர்.
மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் கராச்சி நகரில் நடைபெறவிந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த இந்திய நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அவரது கணவர் ஜாவத் அக்தர் இருவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
இதற்கு பாகிஸ்தான் ஆர்ட்கவுன்சில் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜாவத் அக்தர் தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் யாரோ சில தீவிரவாதிகளின் செயலுக்கு திரைக் கலைஞர்களை பழிவாங்கக்கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.