August 14, 2022

எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரு நாள் பேலியோ குழுவை நோக்கி திரும்புவார்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக பேலியோ குழுவை கவனித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் குழுவினருடன் நட்புறவு கொண்டாடி வருகிறேன். அத்துடன் பேலியோ கொள்கைக்கு மாறுபட்ட வேகன் டயட் குழுவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். (அது ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவுடன் இணைந்தே செயல்படுகிறது) நான் பேலியோ முறையால் உடல் எடை குறையவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தனக்கு நீரழிவு வந்தவுடன் பல விஷயங்கள் வாசித்ததில் பேலியோ என்ற உணவு முறையை கண்டறிந்தவுடன் தான் மட்டும் செய்யாமல் நண்பர்களுடன் சேர்ந்து செய்யலாம் இந்த உணவு முறையை என்று நியாண்டர் செல்வனால் ஆரம்பிக்கபட்டது ஆரோக்கியம் நல்வாழ்வு உணவுக் குழு. ஆதி மனிதன் என்ன உண்டான், எப்படி செயல்பட்டான் எனபது மட்டுமில்லாமல் எந்த உணவு வகைகளில் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆராய்ந்து அதை பகிர்வதே குழுவின் நோக்கமாகும்.

edit nov 5

குழுவில் அறிவியல் பூர்வமாக அவர் ஆராய்ந்து, வாசித்து, அனுபவப்பூர்வமாக அறிந்து அதன் மூலம் பல பதிவுகள் போட, என்னதான் இருக்கு நாமும் முயற்சிக்கலாம் என்று நண்பர்கள் உள்ளே வர..சிவராம், கோகுல் இன்னும் பலரின் கட்டுரைகள் ஆய்வு தகவல்களை அளிக்க சங்கர் ஜி மிகுந்த சிறப்புடன் வழி நடத்த இப்படியாக படி படியாக நான்காண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வருகிறது இக்குழு. புதிதாக வரவில்லை. பலர் ஆண்டுக்கணக்கில் இம்முறையை மட்டுமே பின்பற்றி வருகின்றனர் அவர்களின் ஆரோக்கிய கதைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சமீபத்தில் எழுந்த சர்ச்சையில் சிலர் பேலியோ ஆபத்தா என்று என்னிடம் இன்பாக்ஸ் கேள்விகள் எழுப்பினார்கள். என் கவனிப்பை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பேலியோ என்பது பேலியோ லிதிக் காலத்தில் நியாண்டர் மனிதர்கள் உணவினை அடிப்படையாக கொண்டதாகும். பராம்பரிய உணவுகள் என்கிறோம்..அதைவிட மிகப் மிகப் பழைமையான குகை மனிதன் உணவு முறை.நமக்கு லைப் ஸ்டைல் நோய்கள் ஏன் வருகின்றன..இதற்கு தீர்வே இல்லையா என்று ஆராயும் பொழுது இந்த உணவு முறையை கவனிக்கும் பொழுது நிறைய உண்மைகள் புலப்படுகின்றன. சமீபத்தில் நான் வாசித்த இலக்கிய புத்தகத்தில் மங்கோலிய மக்களின் உணவு முறை பெரும்பாலும் பேலியோ உணவு முறையை ஒத்து இருந்தது. ஓநாய்கள் அவர்களின் கடவுள். அது வேட்டையாடும் மான்கள் மங்கோலியர்களின் உணவு. ஓநாய், மான் , மனிதர்கள் என்று சுவாரசிய ஆட்டம் வாழ்வு முறையாக உள்ள மங்கோலியர்கள் ஆரோக்கியமும், நல்ல சக்தியும் பெற்றவர்கள். சீனர்கள் உள்ளே வந்து அவற்றை ஒட்டுமொத்தமாக மாற்றியது வேறு கதை. இப்படி பல்வேறு ஆதிகுடிகளின் ஆரோக்கியம் நவீன மனிதர்களால் அழிக்கப்பட்டு நோய் மிகும் சமூகமாக மாற்றப்பட்டது.

இனி நான் குழுவில் பகிர்ந்து நான் கற்றுகொண்டவைகள்.

நாம் ஆரோக்கியமாக இருக்க மேக்ரோ அதாவது ப்ரோடீன், கார்ப், கொழுப்பு போன்றவைகள்…அடுத்து மைக்ரோ அதாவது விட்டமின் , மினரல்கள், பைட்டோ, அமினோ அமிலங்கள், வயிறுக்குள் இருக்கும் நல்ல பாக்டிரியாக்கள் என மிகபெரும் உணவு சம்பந்தமான தொழிற்சாலையே நடக்கிறது.என்னதான் உணவுத்துறையில் சிறந்தவராக இருப்பினும் இதான் சிறந்த உணவு முறை என்று சொல்லவே முடியாது. கடற்கரையில் இருக்கும் மனித பரம்பரை மீன் மட்டுமே பழகி இருக்கும். மலை மனிதன் வேறு வகை, சமவெளி மனிதன் இப்படி பல்வேறு தளங்களில் நாம் பயணப்பட்டு வந்ததால் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடலாம்.

ஆனால் விவசாய முறை வந்து காடுகளை அழிக்க ஆரம்பித்தபோதே பூமியின் சமநிலையை கெடுக்க ஆரம்பித்து விட்டோம். விவசா யமாவது ஒழுங்காக செய்தோமா அதுவும் இல்லை..பூச்சிக்கொல்லி, பயோ உணவுகள், ஸ்டார்ச் செறிவு ஊட்டப்பட்ட அரிசி கோதுமை வகைகள் மேலும் பதப்படுத்தப்பட்ட ரசாயனம் கலக்கப்பட்ட உணவு வகைகள் என்று நம்மை நாமே கொல்லும் இனமாக மனிதன் மாறினான். நமக்கு நாமே திட்டம்.கார்ப் உணவுகள் என்றால் என்ன. அரிசி, கோதுமை, பழங்கள் அனைத்திலும் மாவு சத்து உள்ளது. பலவற்றில் கிளைசைமிக் இன்டக்ஸ் அதாவது சர்க்கரை அளவு அதிகம் இருக்கும். கோதுமை சப்பாத்தி, ராகி, ஓட்ஸ் சாப்பிடுகிறேன்..சர்க்கரை அளவு சரி செய்ய மாத்திரை சாப்பிடுகிறேன் என்று பலர் சொல்வதை கவனிக்கலாம். வட இந்திய மருத்துவர்கள் அரிசி சாப்பிடுங்க என்பதையும், தென்னிந்திய மருத்துவர்கள சப்பாத்தி சாப்பிடுங்க என்பதையும் கவனிக்கலாம்.

ஆனால் நிரழிவு நோயை யாராலும் கட்டுபடுத்த முடியவில்லை. முதன் முறையாக நீரழிவு மாத்திரை இல்லாமல் உணவு முறையில் கட்டுப்படுத்தி ஆரோக்கியம் மேம்படுத்த முடியும் என்று சொன்னது மட்டுமில்லாமல் இன்சுலின் போட்டுக் கொண்டு முன்னூறு, நானூறு சர்க்கரை அளவு இருந்தவர்கள் கூட எந்த ஊசி, மருந்தும் இல்லாமல் எழுவது அளவில் மிக மிக ஆரோக்கியமாக இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். என் பேலியோ நண்பர்கள், தோழிகள் பலர் அப்படி ஆரோக்கியமாக மாறியவர்கள், ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவைப்பற்றி சொல்வதானால்..

புத்தர் சொன்னது.. இறப்பே இல்லா வீட்டில் கடுகு வாங்கிகொண்டு வா, இறப்பை மாற்றி அமைக்கிறேன் என்று.. ஆனால் நிரழிவு இல்லாத குடும்பத்தை காட்டு என்று மாற்றி சொல்லும் அளவுக்கு இந்திய சமூகத்தில் சர்க்கரை புரையோடி போய்விட்டது..அதற்கு அடுத்து ஓபெசிடி என்னும் உடல் பருமன். ஓபெசிடி என்பது பல்வேறு பிரச்னைகளை தன்னோடு கூட்டிக்கொண்டு வரும், ஹார்மோன் பிரச்னைகள், ரத்தக் கொதிப்பு, மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய், இதய நோய் , எலும்பு சம்பந்தப்பட்ட சில பிரச்னைகள் இன்னும் பல பல பிரச்னைகளுக்கு உடல் பருமன் காரணமாகிறது.

எந்த உடல் கோளாறுக்கு நடுததர வயதினர் மருத்துவரிடம் சென்றாலும் உடல் எடை சிறிது குறைக்கவும் என்று பிரிஸ்கிரிப்ஷனில் எழுதாமல் சொல்லுவார்.பேலியோ அல்லது வேகன் எந்தக் குழு வந்தாலும் பலர் ஒப்பிப்பது இதான். என்ன என்னவோ செய்துட்டேன் உடல் எடை குறையவில்லை..இங்கு மந்திரம் போல உடல் எடை எந்த மருந்தும் கொடுக்காமல் கடும் உடற்பயிற்சிகள் இல்லாமல் ( அசையவே முடியாத வலியுடன் இருப்பவர்களும் அடக்கம் , போலியோ பிரச்சனை உள்ளவரும் தன உடல் பருமன் நோயில் இருந்து விடுப்பட்டதாக சொல்லிருந்தார்) வெறும் உணவு பழக்கத்தை மாற்றியே குறைவது கண்டு செய்பவர்கள் அனைவருக்குமே ஆச்சர்யமாக இருக்கும்.

paleo_diet_infographic_

ஆரம்ப காலத்தில் பேலியோ குழு ஆதி மனிதன் உணவு வகை அதை சிறிது மாற்றம் என்று சென்றுக் கொண்டு இருந்தது. பலர் உள்ளே குதிக்க ஒவ்வொருவரும் அவர்கள் அனுபவத்தின் படி கருத்துக்கள் சொல்ல, பல ஆரோக்கிய விவாதங்கள் நடக்க, பலர் எதிர்த்து கேள்வி கேட்க, குழுவினர் பதில் தேடி தங்களை இன்னும் முன்னேற்றி முன்னேற்றி குழு பெரும் பாலும் எதிர்ப்பின் மூலமும், விவாதம் மூலமும் வளர்ந்தது. குழுவினர் யாரும் எந்தக் கேள்விக்கும், எந்த விவாதத்துக்கும் பதில் சொல்ல தயாராகவே இருப்பர். ஏன் என்றால் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரு நாள் பேலியோ குழுவை நோக்கி திரும்புவார் என்பது அனுபவத்தில் அறிவோம். அதே சமயம் கட்டுரைகளை வாசிக்காமல் வெறுமனே எதிர்ப்பவர்களை புறக்கணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

கார்ப் என்பதில் அதிக மாவு சத்து அடங்கி இருக்கிறது. முன்னரே சொன்னது மாதிரி உடலுக்கு மிகப்பெரிய எதிரி சர்க்கரை என்பதை அறிவோம். இதுவே உடல் பருமன், நீரழவு நோய்க்கும் அடிப்படையாகும். என் உறவினரை மருத்துவமனையில் சேர்த்து இருந்தேன். அவர்கள் கொடுத்த டயட் … மிகப்பெரிய தட்டில் சாதம் மற்றும் சிறிதளவு காய்கள். இவ்ளோ கார்ப் சர்க்கரை நோய்க்கு கொடுத்தால் என்னவாவது என்று அங்குள்ள உணவு நிபுணரிடம் கேட்டேன். அப்படி என்றால் சப்பாத்தி சாப்பிடவும் என்றார். சப்பாத்தியிலும் அதற்கு ஈடாக கார்ப் இருக்கே என்றுக் கேட்டேன்.. நாங்கள் எனர்ஜிக்கு இவற்றைத்தான் கொடுக்க வேண்டும் மாத்திரையில் மருத்துவர்கள் சர்க்கரையை சரி செய்வார்கள் என்றார். ஆக மொத்தம் மிகப்பெரிய மருத்துவமனையின் உணவு   நிபுணர் கூட தவறாகவே வழி காட்டுகிறார். சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் போட சொல்லிவிட்டு உணவில் சர்க்கரையோடு பரிந்துரைக்கிறார். பிறகு சாதாரண மனிதர்கள் பற்றி என்ன சொல்ல முடியும்?

எனர்ஜிக்கு கார்ப் இல்லாவிடில் என்ன செய்வது? அதற்குதான் கொழுப்பு..அதுவும் நீண்டக் காலத்துக்கு தேவைப்படாது. .பிறகு ப்ரோட்டின் அடிப்படையில் மாறிவிடும். முட்டைகள், மீன், அப்போ அப்போ மாமிசம், தினம் கீரை, அதிகளவில் அதாவது மருத்துவர் ஹரிஹரன் பரிந்துரைக்கும் டயட் சார்ட்டில் அரை கிலோ காய்கறி, அசைவம் முடியாவிடில் பாதாம், என்று இருக்கும் அதுமட்டுமில்லாமல் பிரச்சனை சார்ந்து உணவு முறையை மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். உடல் பருமன் சரியாகிவிட்டால் அவரவருக்கு ஏற்ற தானியம் குறைந்த உணவு உட்கொள்ளலாம். சர்க்கரை இருந்தால் சர்க்கரையால் பழுந்தடந்த பிரச்னைகளை சரி செய்ய கீட்டோ, lchf தொடரலாம். தமிழ் பேலியோ குழுமத்தை . செல்வன் ஓபன் சோர்ஸ் முக்கியமாக மருத்துவர்களின் ஆராய்ந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டே நடத்துகிறார். இன்னும் உணவில் தைராயிடுக்கு, சர்க்கரை உள்ளவர்களுக்கு சைவம், அசைவம் என்று பலருக்கு தனித்தனியே உணவுப் பட்டியல் உண்டு. சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் சிவராம் மற்றும் மருத்துவர்களால் சிறப்பு கவனம் பெறுவார்கள். ஏன் என்றால் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தின் லட்சியமே சர்க்கரையில்லா தமிழகம்.

கிருத்திகாதரன்