November 28, 2021

நம் நாட்டில் எகிறிக் கொண்டே போகும் மதுப் பிரியர்கள்!- சர்வே ரிசல்ட்!

இந்த கொரோனா காலக் கட்டத்தில் சுமார் 40 நாட்கள் வரை வைரஸ் பரவல் குறித்த செய்திகள் முன்னிலை வகித்தது.. ஆனால் 41ம் நாளிலிருந்து ஒட்டு மொத்த தமிழக சேனல்களும் டாஸ்மாக் செய்திகளை முன்னிலைப்படுத்தத் தொடங்கி விட்டது. இச்சூழலில் நம் சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா சொன்னது போல் ‘நம் இந்திய வரலாற்றில் வேதகாலம் முதல் குடி என்கிற பொருளில் பயன்படுத்தப்படும் போதைதரும் அல்லது மயக்கமூட்டும் பானங்கள் இருந்து வந்துள்ளதையும், அதிலும் இது உற்சாக பானம் என்றே அழைத்து வந்ததையும் பலர் மறந்து விட்டார்கள். குறிப்பாக முன்னொரு கால தமிழர்களிடம் தேறல் எனப்படும் கள் என்கிற மதுவகையும், மற்றும் ரோம், கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதுவகைகளும் இருந்து வந்துள்ளன.

மேலும் இப்போது போதை என்றழைக்கப்படும் சொல் ‘பாதை’யை மறக்கடிக்கும் பானம் என்பதை குறிக்கும் சொல்லினடியாகத்தான் வந்திருக்கக் கூடும் என்போருமுண்டு. மேலும் இந்த குடிபானங்களை தமிழில் மது என்கிற சொல்லால் குறிக்கிறோம். இச்சொல் அர்த்த சாத்திரத்தில் சொல்லப்பட்ட 6 வகை குடிபானங்களில் ஒன்றான மது என்கிற ஒரு பிரத்யேக வகையிலிருந்து ஆளப்பட்டு வந்திருக்கலாம். அல்லது சமஸ்கிருதத்தில் இனிமையைக் குறிக்கும் “மதுரம்“ என்கிற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அத்துடன் பாலின்பத்திற்கான பெண் உடலின் ஒரு பகுதியை “மதனபீடம்“ என்கிற சொல்லால் குறிப்பதையும் இணைத்துக் காணலாம். மது என்பது அதன் சொற்பொருள் அடிப்படையில் இன்பத்துடன் இணைந்தே அறியப்பட்டிருக்கிறது.

இச்சூழலில் நம் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, தெலங்கானா போன்ற பல மாநிலங் களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒயின்ஷாப்புகள் திறந்தபோது கூடிய கூட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான். இப்போதெல்லாம் மது என்பட்டும் போதை அருந்துவது தனிநபரின் விருப்பத்தை தாண்டி அந்தஸ்துக்கிரிய விஷயமாகி அரசுக்கு வருமானம் தரும் தொழிலாகவே பல்வேறு மாநிலங்களிலும் அமைந்துவிட்டதே குடிப்பழக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமானது.

இந்த இடத்தில் ஒரு உண்மையச் சொல்லியே ஆக வேண்டும்.. கடந்த கால் நூற்றாண்டு – அதாவது கிட்டத்தட்ட 27 வருசங்களில் இதே இந்தியாவில் மதுப்பழக்கம் சுமார் 38 விழுக்காடு வரை அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டு தோறும் சராசரியாக 4.3 லிட்டர் மது அருந்திய இந்தியர்கள் இப்போது 5.9 லிட்டர் அருந்துகின்றனர்.

இதை அடுத்து சர்வதேச அளவில் நம்முடன் ஜனத்தொகையில் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் சீனாவுக்கு அடுத்தபடியாக மது அருந்துபவர்கள் அதிகமுள்ள நாடு நம்ம இந்தியாதான். ஜஸ்ட்பத்து வயது முதல் 70 வயதுடையவர்களில் 14 விழுக்காட்டினர் மது குடிப்பவர்கள்தான். இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 16 கோடி பேர் மது அருந்து கிறார்கள். 17 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற அளவிலேயே மது அருந்துவோர் பாலின விகிதம் இருக்கிறது. உலகிலேயே விஸ்கி அதிகம் அருந்தும் நாடு இந்தியா.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 14.2% விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உடையவர்கள்.

இதனிடையே சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப் ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த 3 மாநிலங்களோடு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவாவிலும் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் மது விற்பனை என வரும்போது இந்த மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களே நாட்டின் 45 விழுக்காடு மதுபானங்களை விற்பனை செய்கின்றன.இவ்வளவு மது குடிக்கும் நாட்டில் அதுசார்ந்த பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. நாடு முழுவதும் 5 கோடியே 70 லட்சம் பேர் குடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளானர். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு குடிநோய்க்கு சிகிச்சை பெற வேண்டியவர்கள் உள்ளதாக சமூக நீதித்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.