அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, தற்போதுதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரட்டை தலைமை மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பின் கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக் குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் பதவி உள்ளிட்ட சிலரின் அதிமுக உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழு அதிகாரம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுக்குழுவை அதிமுக தலைமை கூட்ட வில்லை. அதிமுக பொதுக்குழு கூட்ட இயலாத காரணத்தை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக கட்சி தலைமை அனுப்பி வைத்தது. அந்த கடிதத்தில், “கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது, உட் கட்டமைப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழக அரசும், அமைச்சர் களும், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கஜா புயல் நிவாரணம், சீரமைப்பு, மறுகட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் தற்போதய சூழலில் அதிமுக பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை உள்ளது” என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு வருகிற 24ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள  ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது.

இந்த கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப் பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே 4,500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டி ருந்தது. அழைப்பிதழ் கடிதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முதல்வர் எடப்படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளிநாடு சென்று முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. அப்போது கூட்டணி கட்சிளுக்கு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எவ்வளவு கவுன்சிலர்கள் சீட் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. அதே போன்று அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை தொடர வேண்டுமா அல்லது ஒற்றை தலைமையா என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது சிலர் ஒற்றை தலைமை என்பது கட்சி நலனுக்கு நல்லது என்று கூறினார்கள்.

இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது விமர்சனம் வைப்பது நல்லதல்ல என்று கூறினர். தொடர்ந்து மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் சிலர் சசிகலாவை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை ஓபிஎஸ், இபிஎஸ் சமாதானப்படுத்தினர். அதே போன்று நடிகர் ரஜினி காந்த் 2021ல் அதிசயம் நடைபெறும் என்று கூறியுள்ளார். எனவே, அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அதை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் இருந்து யாரும் வெளியேறுவதை தடுக்க பதவி வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர் களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள தடைக் கல்லாய் இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட 23 தீர்மானம்:

> சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.

> விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.

> இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.

> உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.

> அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

> மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.

> பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு > பாராட்டு.

> நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.

அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

> தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.

> தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

> கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு.

> இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

> காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.

இதற்கிடையே, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் உட்கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர், தற்போதைய நிலையில், 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!