March 26, 2023

அதிமுக பொதுக்குழு மற்றும் எடப்பாடி தேர்வு செல்லும் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

டந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே கூட்டத்தில் ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தது. பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இருநீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும். கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்ச்சைக்குள்ளான அதிமுக எடப்பாடி வசமானது.

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியாக பிரிந்து அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. இதில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பதையும் இன்றைய தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.