September 20, 2021

எங்க மன்னார்குடி மக்கள்தான் அதிமுக- வை மீட்டெடுத்தார்கள்! – திவாகரன் பெருமிதம்

தஞ்சை தமிழ் சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழா தஞ்சையில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ரஷ்ய தூதரக உதவி தூதர் எவ்கேனி க்ராம் சென்கோ, கனடா நாட்டை சேர்ந்த சில்வர்ஸ்டார் ராஜரெத்தினம், மலேசிய தூதர் அப்துல் ஜலீல் விளார் சாமிநாதன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உறவினர் கிருஷ்ண மோகன்ஜி, முன்னாள் கேப்டன் அருண் சக்கரவர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

divakaran jan 15

கல்யாணபுரம் கே.ஜி. குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிழ்ச்சி நடந்தது.புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை நிறுவனர் திவாகரன் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் திவாகரன் பேசிய போது, “இந் நிகழ்ச்சி முறைப்படி துவங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சிறு நெருடலுடன், ஏன்? பெரு நெருடலுடன் நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய தங்கத்தாரகை புரட்சித்தலைவி நம்மைவிட்டு சென்றுவிட்டார்கள், அரசியல் களம் கொந்தளிக்கிறது. ஜனவரியில் அரசாங்கம் மாறிவிடும், கேபினெட் அமைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அம்மாவின் அரசாங்கம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இங்கே வந்திருக்கும் நீங்களெல்லாம் பங்களித்தவர்கள், பங்களிப்பவர்கள், பங்களிக்கப் போகிறவர்கள், அ.தி.மு.க. சரித்திரத்தில், தஞ்சைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புரட்சித்தலைவர் இந்த கட்சியை துவங்கும்போது, இந்தபகுதியில் மிகப்பெரிய பங்காற்றியவர் அண்ணன் எஸ்.டி.எஸ். அதையும் யாரும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது, அந்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது. எந்த நேரத்தில் யார் உதவி செய்திருந்தாலும் அதை மறக்கக் கூடாது. மறந்தால் அது உண்மையான தமிழனுக்கு அழகல்ல.

அப்போது திண்டுக்கல் தேர்தலை ஒரத்தாடு, மன்னார்குடி தொண்டர்களை வைத்துதான் நடத்தினார் எஸ்.டி.எஸ். ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல. இப்போதும் எவ்வளவோ சதிகள் நடந்துகொண்டிருக்கிறது. எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது செய்து விடலாம் என பல சதிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும்.

அ.தி.மு.க. தொடங்கியது முதல் அதன் சரித்திரத்தில் தஞ்சையின் பங்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தஞ்சையை சேர்ந்த எஸ்.டி.சோமசுந்தரம் தான்.திண்டுக்கல்லில் தேர்தல் நடந்த போது அந்த தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக தஞ்சையில் இருந்தும், மன்னார்குடியில் இருந்தும் சென்று பாடுபட்டோம். அப்போது மதுரை முத்து எங்களை அடித்தார்.  இப்போதும் பல சதிகள் நடந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவை விட்டு எங்களை நகர்த்த சதி நடந்தது. அப்படி முழுவதும் நகர்த்தி விட்டால் எளிதாக ஜெயலலிதாவை ஒன்றுமிடாமல் செய்து விடலாம் என்று சிலர் திட்டம் போட்டனர்.அந்த திட்டமும் நடக்கவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு ஜெயலலிதாவை கொண்டு வந்தது புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தான். அதை எல்லோரும் மறந்திடலாம். நான் மறக்கமாட்டேன். ஏனென்றால், நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். எங்கள் உயிர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம். அப்போது இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலையை மீட்டெடுத்த பெருமை முனைவர் நடராஜனுக்கு உண்டு.இப்போது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்திய அளவில் முடங்கிய சின்னம் மீண்டும் வந்ததாக சரித்திரம் இல்லை. அப்போது முனைவர் நடராஜன் உழைத்து உழைப்பு எனக்கு தெரியும்.

ஜா அணி, ஜெ அணி ரெண்டையும் ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை வாங்கினார். அதன்பிறகு நடைபெற்ற மதுரை, மருங்காபுரி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றி கண்டோம். அதற்கு தளபதியாக செயல்பட்டவர் முனைவர் நடராஜன். எந்தவிதமான எதிர்ப்புகளை பார்க்காமல் தலைவர் வளர்த்த கழகம், அம்மா ஆசைப்படி கழகத்தை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிநடத்த வேண்டும். நமக்கு கடுமையான காலகட்டம் இது,அ.தி.மு.க.வுக்கும் பொதுச்செயலாளர், எங்களை போன்றவர்களுக்கு நிறைய மிரட்டல் இருக்கிறது. நாம்தான் எப்போதும்போல, அ.தி.மு.க. ஆரம்பித்திலிருந்தே காத்து வருகிறோம். அதே மாதிரி இப்போதும் காக்க வேண்டும், ஒன்றாக இருந்து ஒரு நல்ல தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை தமிழர்கள் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறோம். இந்தியாவை ஆள்வதற்கு ஒரு முகர்ஜியோ, குப்தாதான் வருகிறார்கள். 40 எம்.பி.யை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம்?. இரண்டாம் பட்ச குடிமக்களாகத்தான் இருக்கிறோம். புயல் அடித்து ஒருவாரம் கழித்துதான் மத்திய குழுவினர் வருகிறார்கள், காவிரி பிரச்னையில் பின்வாங்குகிறார் பிரதமர். புயல் நிவாரணம் வரவில்லை. பார்த்தீர்களா என்ன அநியாயம் நடந்துக்கிட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டை தடையை மீறி அனுமதித்தால் அரசாங்கத்தை கலைத்துவிடுவோம் என்று சொல்கிறார்கள்.

கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட் சொல்லியும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கலைக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை அனுமதித்தால் கலைத்துவிடுவதாக சொல்லுகிறார்கள். எனவே நாம்தான் ஒன்றுமையுடன் இருந்து இவர்களை வேரறுக்க வேண்டும்,” என்றார்