August 14, 2022

அகஸ்தியர்கூட மலை : முதல் முறையாக பெண் மலையேறினார்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது 7,500 அடி உயரத்தில் இருக்கிறது அகஸ்தியர் கோயில். ஆண் கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த இக்கோயில் உள்ள மலையில் ஏற முதல் முறையாக பெண் களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. அதை தொடர்ந்து முதல் முறையாக கே. தான்யா சானல் என்ற பெண் இன்று மலையேறத் தொடங்கினார். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கே. தான்யா சானல், கேரளாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.

கேரளாவின் நெய்யார் வனத்துறை சரணாலயத்தில் உள்ள அகஸ்தியர்கூடம் கேரளாவின் இரண்டாவது உயரமான மலை ஆகும். அரியவகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நிறைந்து உள்ள இந்த மலைப்பகுதி ஐநாவின் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் அகஸ்தியர் முனிவரின் பிறப்பிடமாக கருதப்படுவதால் இந்துக்களின் வழிபாட்டு தலமாகவும் இந்த இடம் விளங்குகிறது. அகஸ்தியர் கூடம் மலையில் அகஸ்தியர் முனிவரின் சிலை ஒன்றும் உள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகஸ்தியர் கூடத்தின் மலை உச்சிக்கு கால்நடையாக மட்டுமே செல்ல முடியும். இந்த 22 கிலோமீட்டர் பயணத்திற்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 47 நாட்களுக்கு மலையேற அனுமதி வழங்கப் படுகிறது. இதற்கான நடைப் பயணம் சாகசம் மிகுந்தது. காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குடி, கன்னிகட்டி, பூம்பாறை, பாண்டியன் கோட்டை, துலக்க மொட்டை என முக்கிய இடங்களின் வழியாக 36 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். மிக முக்கியத்துவம் வாய்ந்ததான பூங்குளம் என்கிற இடத்தைக் கடக்க வேண்டும். இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கும் இடமும் இந்தப் பகுதிதான். அதிக விஷத் தன்மை கொண்டதாகக் கருதப்படும் ராஜ நாகங்களும் அதிகம் காணப்படும். வழுக்குப் பாறைகளைக் கடந்து மலையின் உச்சியில் இருக்கும் அகத்தியர் கோயிலை அடைய வேண்டும். ஆனால், இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் எந்த விலங்குகளாலும் பாதிக்கப்படுவதே இல்லை என்பது ஓர் அதிசய உண்மை! அதனால்தான் ஆண்கள் மட்டுமே மலையேற இதுவரை அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சபரிமலை விவகாரத்தால் அகஸ்தியர் கூடத்தில் பெண்கள் மலையேற அனுமதி மறுக்கப்படுவது ஊடகத்தின் கவனத்தை பெற்றது. அதை தொடர்ந்து அகஸ்தியர் கூடத்திலும் பெண்களுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி கேரளா ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் 2019ம் ஆண்டு முதல் அகஸ்தியர் கூடத்தில் மலையேற பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று அகஸ்தியர் கூடம் மலையேறிய 100 பேர் கொண்ட முதல் குழுவில் பெண் ஒருவர் இடம்பெற்றிருந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது. ஆம்.. இன்று மலையேறிய முதல் குழுவில் ஒரே பெண்ணாக கே. தான்யா சானல் என்ற பெண் இடம் பெற்று இருந்தார். அவரை தொடர்ந்து மேலும் பல பெண்கள் மலையேறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது என்று அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மலையேற மொத்தம் 4,700 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 100 பேர் பெண்கள் என்று கேரளா வனத் துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர். பெண்கள் மலையேறுவதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மலையேறும் வழியில் இரண்டு உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அகஸ்தியர்கூடம் மலையில் பெண்கள் ஏற நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு அந்த மலையில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் இன்று மலையேறிய பெண்ணை அவர்கள் தடுக்கவில்லை.

பெண்கள் மலையேறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் மலையடிவாரத்தில் கூடி தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தங்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிவாசி மகாசபா அமைப்பின் மாநில தலைவர் மோஹனன் திரிவேணி கூறுகையில் ‘‘அகஸ்திய மலையின் பாரம்பரியம் உடைக்கப்பட்டதால் எங்களுக்கு ஏற்பட்ட வலியை தெரியப்படுத்தவே போராடுகிறோம். அதேசமயம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து மலையேற வந்த பெண்களை நாங்கள் வழி மறிக்கவில்லை’’ என தெரிவித்தார்