October 19, 2021

தாய்லாந்து : ‘அந்த’ சிறுவர்கள் கோயிலில் வழிபாடு!

சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனனர். இதனைத் தொடர்ந்து அச்சிறுவர்கள் தாய்லாந்தில் கோயிலில் அதிர்ஷ்டம் வேண்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்தக் குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி இந்தக் குகைக்குச் சென்றனர். இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சிறுவர்கள் புதன்கிழமை செய்தியாளர் களைச் சந்தித்தனர். அப்போது நடந்த கேள்வி & பதில் இதோ:

பிரிட்டிஷ் நீர்மூழ்கி வீரர்களைக் கண்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?

குகைக்குள் ஏதோ சத்தம் கேட்டது. நன்கு கவனித்தபோது ‘யாராவது இருக்கீங்களா’ என்று கேட்டது. எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் ‘ஹலோ’ என்று கத்தினோம். அவர்கள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் நலமாக இருப்பதாக கூறினோம்.

அப்போது ஒரு சிறுவன்தான் ப்ரைட் ரைஸ் குறித்து நினைத்ததாக தெரிவித்தான். குகைகளில் கிடைத்த சுத்தமான தண்ணிரை குடித்தோம். உணவுகள் எதும் கிடைக்கவில்லை. குகைகளில் இருந்து தண்ணீர் வெளியேறியவுடன் வெளியில் செல்லலாம் என இருந்தோம்.

தங்களைக் காப்பாற்ற வந்த நீர்மூழ்கி வீரர் மரணம் குறித்து உருக்கமாகப் பேசினர். அவர் எனக்கு அப்பா மாதிரி என ஒரு சிறுவன் உருக்கமாக பேசினான். குகையில் சிக்கி இருந்தபோது அவர் என்னைக் குழந்தை என அழைத்தார் எனக் கூறினான். நாங்கள் ஒரு குற்றவாளிபோல் உணர்வதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.

உங்களது கனவு என்ன?

நான் ஒரு கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என சிறுவன் டைடன் கூறினான். 4 சிறுவர்கள் நீர்மூழ்கி வீரராக வேண்டும் என தங்களது ஆசையை தெரிவித்தனர்.

மீண்டும் குகைக்குச் செல்வீர்களா?

ஒரு நல்ல வழிகாட்டியுடன் குகைக்குச் செல்வேன் என சிலர் தெரிவித்தனர். ஒரு சிறுவன் திரும்ப குகை பக்கமே செல்ல மாட்டேன் என்றார். மேலும் சிலர் குகையில் இருக்கும்போது வீட்டுப்பாடங்களை நினைத்து வருந்தியதாக நகைச்சுவையுடன் கூறினர்.

உங்கள் பெற்றோருக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

அனைவரும் ஒருமித்த குரலில் மன்னிப்புக் கேட்க உள்ளதாகத் தெரிவித்தனர். சில சிறுவர்கள் நாங்கள் கால்பந்து பயிற்சிக்குச் செல்லவதாகதான் சொன்னோம் குகை பற்றி வாய்த்திறக்க வில்லை என்றனர். சிலர் எங்களது வீட்டில் தெரிவித்தோம். பெற்றோர்கள் அது மோசமான இடம் என தெரிவித்ததாக கூறினர்.

குகையிலிருந்து யாரெல்லாம் முதலில் வெளியே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்தது யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த பயிற்சியாளர் அகி, குகையிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற போட்டி எனது மாணவர்களிடையே இல்லை என்று கூறினார். மேலும், குகையில் அதிக நாள் யார் தங்கியிருந்தார்களோ, அவர்களை முதலில் அனுப்ப முடிவு செய்தோம் என்று விளையாட்டாகக் கூறினார். மேலும் ’ எங்களை மீட்பதற்காக யாரும் வரும்வரை நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை. அதனால் குகையின் மேற்பகுதியை தோண்டிவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டிக் கொண்டே இருந்தோம்.   என்றபோதிலும் எங்களுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எங்கள் குழுவில் இருந்த எல்லோராலும் நீந்த முடியும். ஆனால் சிலர் நீந்துவதில் வலிமையானவர்கள் அல்ல.’ என்றார்

இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய சிறுவர்கள் இன்று (வியாழக்கிழமை) தாய்லாந்து கோயில்களில் வழிபாடு நடத்தியுள்ளனர். அவர்களுடன் பெற்றோர்களும், உறவினர்களும் உடன் வந்திருந்தனர்.மேலும் கோயிலில் சிறுவர்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர். கோயிலில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சிறுவர்கள் பங்கேற்றனர்.