October 16, 2021

ஜி எஸ் டி ; ஏப்ரல் 1 முதல் எவையெவை விலை குறையும்? எவை எகிறும்?

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை மேற்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அமல்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதம், இழப்பீடு கொள்கை உள்ளிட்ட அம்சங்களை முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஆடம்பரப் பொருட்களுக்கு வரிவிதிப்பது தொடர்பாக, கருத்தொற்றுமை ஏற்பட்டது. அதேபோல், ஜி.எஸ்.டி. வரியால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிமுறையிலும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்யும் விஷயத்தில், கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால், இந்தக் கூட்டம், அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tax oct 21

இதனிடையே இந்த புதிய வரிவிகிதப்படி கோழி இறைச்சி, தேங்காய் எண்ணெய் போன்ற தற்போதைய 4 சதவீத வரி விதிப்பு பொருட்கள், 6 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகிதப்பட்டியலில் சேர்க்கப்படுவதால் இவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் உயரும் என்று தெரிகிறது. இதைப்போல மற்ற சமையலறை பொருட்களான மஞ்சள், ஜீரகம், தனியா, கருமிளகு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் கியாஸ் ஸ்டவ், பர்னர் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரக்கூடும் என தெரிகிறது.

அதே சமயம் தற்போது 29 சதவீத வரி விதிப்பில் உள்ள டி.வி., ஏ.சி., வாஷிங் மெஷின், இன்வெர்ட்டர், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி மற்றும் சமையல் சாதனங்களுக்கு இனிமேல் 26 சதவீத ஜி.எஸ்.டி. வரியே விதிக்கப்படுவதால் அவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் வாசனை திரவியங்கள், ஷேவிங் கிரீம், பவுடர், ஹேர் ஆயில், ஷாம்பூ, சோப் உள்ளிட்ட குளியலறை பொருட்களின் விலையும் குறைகிறது. இந்த 4 அடுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் தற்போது பரிந்துரைக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த மாதம் (நவம்பர்) மீண்டும் கூடும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று  தெரிகிறது