Categories: தமிழகம்

புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா இன்று காலமானார். அவருக்கு வயது 93 .அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது

இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால்தான் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 64 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். விரிவுரைகள் பக்கம் பக்கமாக இருந்தாலும், சளைக்காமல் கையால் எழுதியர்.* மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருது களைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வார்.

உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையில் அறிமுகம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டிருந்தவர். எளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக செயலாற்றி வந்தார்

இப்பேர்பட்ட டாக்டர் சாந்தா தன்னைப் பற்றி சொன்ன வாழ்க்கைக் குறிப்பு இதோ:

”பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போ சென்னை-ன்னு சொல்லப்ப்டற மெட்ராஸ்தான். ஓலைக் கூரையால் வேயப்பட்ட, அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மயிலாப்பூர், தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அப்போ எல்லோரையும்போல, எனக்கும் சுதந்திர உணர்வு நிறையவே இருந்துச்சு. எங்க பள்ளியின் முதல்வர் செல்லம். அவங்ககிட்டதான் நிறைய நல் ஒழுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல பெண்களுக்கு கல்வி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். கல்வி கற்ற பெண்கள் பலரும் அதை பயன்படுத்திக்காம, கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு இருந்துட்டாங்க. அதனால பெண்கள் படிச்ச படிப்புக்கு அர்த்தம் இல்லாமப் போயிடுச்சேன்னு, அப்போ நான் பல நாட்கள் வேதனைப்பட்டதுண்டு. அப்போதான் தீர்க்கமான ஒரு முடிவெடுத்தேன்” என மருத்துவராக ஆவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்ட தருணத்தை நினைவுகூர்கிறார்.

“நாம படிச்சு மக்களுக்கு சேவை செய்யணும், இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான சில காரியங்களைச் செய்யணும் என்ற உறுதி வந்தது. டாக்டராகணும்னு முடிவெடுத்தேன். சென்னை மருத்துவக் கல்லூரியில படிச்சு, 1949-ல் டாக்டர் பட்டம் வாங்கினேன். அடுத்து, சென்னை எழும்பூர், பெண்கள், குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியில பி.ஜி.ஓ மற்றும் எம்.டினு ரெண்டு முதுநிலைப் பட்டங்கள் வாங்கினேன். பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக தேர்வுசெய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் சில காலம் மருத்துவராகப் பணிபுரிந்தேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மா பல கஷ்டமான சூழ்நிலைகளைக் கடந்து ‘விமன்’ஸ் இந்தியன் அசோஸியேஷன் கேன்சர் ரிலீஃப் பண்ட்’ வாயிலாக நிதி திரட்டி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பிச்சாங்க. அப்போ அமெரிக்காவுல இருந்த அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை வரவழைச்சு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை கவனிக்க வெச்சதோடு, புதிதாக மருத்துவர்கள் வேணும்னு சொல்லியிருந்தாங்க. அந்த 1955-ம் ஆண்டுதான் இந்த நிறுவனத்துல நானும் ஒரு அங்கமாகச் சேர்ந்தேன். அப்போ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நான், ரெண்டு செவிலியர்கள், ஒரு டெக்னீஷியன் உள்ளிட்ட 10 பேர்தான் வேலை செஞ்சோம். நோயாளிகளுக்கு முத்துலட்சுமி அம்மா வீட்டுல இருந்துதான் சாப்பாடு வரும்.

அந்தக் காலகட்டத்துல, கேன்சரைக் குணப்படுத்தவே முடியாது, இந்நோய் வந்தவங்க இறந்து போயிடுவாங்கங்கிற மாதிரியான அச்சம் மக்கள்கிட்ட இருந்துச்சு. அதையெல்லாம் போக்கி, இந்நோயைக் குணப்படுத்தி, கேன்சர் நோயாளிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க முடியும்னு நிரூபித்துக் காட்டினோம். அதுக்காக அப்போ நாங்க எடுத்துக்கிட்ட முயற்சிகளும், கஷ்டங்களும் ரொம்பவே அதிகம். இப்போ மருத்துவமனை, ஆராய்ச்சியகம், கல்லூரி என அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் விருட்சமா வளர்ந்திருக்கு. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் என்ற எங்க மருத்துவமனையின் நோக்கத்தோட, அரை நூற்றாண்டுக்கும் மேலாக புற்றுநோயாளிகளை குணப்படுத்திட்டு வர்றோம்” எனும் டாக்டர் சாந்தா, 65 வருடங்களாக இம்மருத்துவமனையில் தன்னை அர்ப்பணித்து வந்தாராக்கும்.

“1984-ல் எனக்கு கிடைச்ச அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை, அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்போட இன்னைக்கு வரைக்கும் கண்ணும் கருத்துமா கவனுச்சுட்டு வர்றேன். என்னோட 62 வருடப் பங்களிப்பு என்பது சிறியதுதான். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள்ல இருந்து இப்போ வரைக்கும் இங்க வேலை செய்த, வேலை செய்துட்டு இருக்குற அனைவரின் கூட்டு முயற்சிதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணம். அதனால, இந்த சாதனைக்கு என்னைக் காரணமா யார் சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டேன். தனி ஒருவர் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமா இருக்குறது என்பது, எனக்குத் தெரிஞ்சு சாத்திய மில்லை. நானும் ஒரு ஊழியர்தான். என்னைப் போல இங்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தன்னலம் பார்க்காம, மருத்துவம்ங்கிற வார்த்தைக்கு உண்மையான பொருள்படும் படியாக சேவை செய்றாங்க. அந்த சேவைக்குதான் மக்கள் இந்த நிறுவனத்தை மதிக்குறாங்க” என்றவர்….

”நாங்க நிறுவனம் தொடங்கினப்போ புற்றுநோய் மரணங்களைத் தடுக்கிறது சவாலாத்தான் இருந்தது. இப்போ புற்றுநோய் பாதிப்புள்ள 65 சதவிகிதக் குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் பெரும்பாலானோர் முழுமையா குணமடைஞ்சு போறாங்க. மேலும், இப்போ புற்றுநோயையும் மற்றுமொரு நோயா அச்சமின்றி எதிர்கொண்டு, லட்சக்கணக்கானோர் முறையான சிகிச்சையைப் பெற்று, வாழ்க்கையை இனிதே கழிக்குறதைப் பார்த்து மகிழ்ச்சியடைஞ்சுட்டு இருக்கேன்.

அதே சமயம், வேலைப்பளுவால் உடல் நிலையைக் கவனிச்சுக்காம, இயற்கை உணவுகளைத் தவிர்த்து, துரித உணவுகள் பக்கம் திரும்பி பலரும் இன்னைக்கு புற்றுநோய்க்கு ஆட்படுவதை நினைச்சும், குடும்பத்தைக் கவனிச்சுட்டு பெண்கள் பலரும் தங்களோட உடல்நிலைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்காம உடல்நிலைப் பாதிப்புகளுக்கு உள்ளாகுறதை நினைச்சும் தினம் தினம் வருத்தப்படுறேன். அதனால எல்லோரும் தங்களோட உணவு, உடல்நிலை மேல போதிய அக்கறை செலுத்தணும். புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயையும் வரவிடாமலும், வந்தால் ஆரம்பக் கட்டத்துலயே அதை குணப்படுத்தியும் மகிழ்ச்சியா வாழணும் என்பதே என்னோட ஆசை” என்றார்

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

புற்றுநோய் ஏன்? டாக்டர் சாந்தா சொன்ன காரணங்கள்….

“இன்றைக்குக் காய்ச்சல் வருவது போல், புற்றுநோய் வருகிறது. இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.. மோசமான சூழல், தவறான உணவுப் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பயிற்சி இல்லாதது எனப் பல காரணங்களால்தான் இன்றைக்கு நோய்கள் அதிகரித்துவிட்டன. நோய்கள் வந்த பின் கவனிப்பதைவிட, வரும் முன் காப்பதே தப்பிக்க வழி. இன்றைக்குச் சந்தோஷமாக இருந்தோமா என்பதுதான் முக்கியம், நாளையைப் பற்றி கவலை இல்லை என இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர். இது தவறு. இன்றைக்கு செய்கிற தவறுகள் தான், எதிர்காலத்தில் நோய்களாக வந்து தாக்கும். கொழுப்பு ஆகாரங்களைத் தவிர்ப்பது, காய்கறி, பழங்கள், சமச்சீரான உணவு முறைகளைப் பின்பற்றுவது, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதம் ஒருமுறை மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் கட்டிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். மல்ட்டிபிள் பார்ட்னர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த நோய்களும் வருவதற்கு காரணமாகிவிடும். வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் இல்லாமல், எதை எதையோ நாகரிகம் எனக் கருதாமல், முறையான வாழ்க்கையை ஆண், பெண் இருவரும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் உள்ளுறுப்புகளை சுத்தமாகவைத்திருப்பதன் மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம். 40 வயதைத் தாண்டிய பெண்கள், வருடம் ஒருமுறை ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு அவசியம். ஒரு பெண் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்க முடியும். இதை, ஒவ்வொரு குடும்ப உறவுகளும் உணர்ந்து, வீட்டுப் பெண்களை வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினாலே, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்திவிட முடியும்“

“பெண்களின் வாழ்க்கைமுறையில், மருத்துவரீதியாகத் தற்போது எதாவது மாற்றங்களைப் பார்க்கிறீர்களா? பெண்களுக்குத் தங்கள் உடல் பற்றிய அக்கறை இருக்கிறதா?”

“கனிவும் அன்பும் நிறைந்தவள் பெண். கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, பயமற்ற நிலை எனப் பெண்கள் இன்றைக்கு, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார்கள். ஆனால், கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தை அக்கறையாகக் கவனிக்கும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வது இல்லை. வலிகளைக்கூட வெளியே சொல்லாமல் தாங்கிக்கொண்டு, முடியாத நேரத்தில்தான் டாக்டரிடம் வருகிறார்கள். காலம் கடந்து வரும்போது, நோய் முற்றிவிடுகிறது. இதுதான் என்னை வருத்தப்படவைக்கிறது.

மேல்தட்டு மக்களிடம் கொஞ்சம் மருத்துவம் குறித்த விழிப்புஉணர்வு இருக்கிறது. நடுத்தர மற்றும் கிராமப் பெண்களின் நிலைதான் இன்னும் பரிதாபம். பெண்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்ய, ஒவ்வொரு கிராமமாகச் சென்றிருந்தோம். அங்குள்ள பெண்கள் யாருமே தங்களைப் பரிசோதித்துக்கொள்ள முன் வரவில்லை. ‘கணவருக்கும் பிள்ளைங்களுக்கும் பாருங்க’ எனச் சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்களிடம் பலமுறை பேசி, ஒப்புக்கொள்ளவைத்து, பரிசோதித்தால் பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் இருந்தது தெரியவந்தது. சிறு வயதில் தாயாகி வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் பெண்கள், நம் தமிழக கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறார்கள். தங்களை கவனித்துக்கொள்வது பற்றிய விழிப்புஉணர்வு கொஞ்சம்கூட இல்லை.

aanthai

Recent Posts

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை…

4 hours ago

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும்…

4 hours ago

பள்ளி மாணவன் சரியாக பதில் எழுதாததால் அடித்தே கொன்ற ஆசிரியர் தலைமறைவு!

உத்தரப்பிரதேசம், அவுரையா மாவட்டத்தில் பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது பட்டியலின மாணவன் வகுப்பு தேர்வில் ஒரு வார்த்தையில் எழுத்துப்பிழை…

5 hours ago

சுந்தர் சி-க்கு டாக்டர் பட்டம்!- காஃபி வித் காதல்’ ஹைலைட்ஸ்!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காஃபி…

1 day ago

ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு – தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய…

1 day ago

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதுக் கட்சி தொடங்கிட்டார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஜனநாயக…

1 day ago

This website uses cookies.