உடல் நலத்துடன் இருக்கிறேன் – சீக்கிரம் ரிலீஸ் ஆயிடுவேன் – சசிகலா கடிதம்

உடல் நலத்துடன் இருக்கிறேன் – சீக்கிரம் ரிலீஸ் ஆயிடுவேன் – சசிகலா கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் நலமுடன் உள்ளதாகவும் தனது விடுதலை குறித்து கர்நாடக சிறைத்துறை விரைவில் முடிவெடுக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா குறித்து ஒரு இணைய தளத்தில் சசிகலாவுக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பதால், சிறையில் கிடைக்கும் சிகிச்சைகள் போதாமல் வெளியே மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அவரது உறவினர்கள் விரும்புவதாகவும், “வெளியே இருந்த வரைக்கும் சசிகலா சர்க்கரை வியாதிக்கு போதுமான மாத்திரைகள், ஊசிகள், அவ்வப்போது மருத்துவரின் ஆலோசனைப்படியான உணவு முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தார். ஆனால் சிறைக்குள் வெளியே இருப்பது போன்ற இந்த முறைகளை அவரால் பின்பற்ற முடியவில்லை.

இத்தகைய காரணங்களால் சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லும் அவரது உறவினர்கள் இதனால் பதற்றப்பட ஆரம்பித்துள்ளார்கள். சசிகலாவை விரைவிலேயே வெளியே கொண்டு வந்து விட்டால் தரமான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவரது சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, டயாலிசிஸ் வரைக்கும் செல்வதிலிருந்து தவிர்த்துவிட முடியும்” என்று அவர்கள் கூறுவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

இப்படி சசிகலாவைப் பற்றி எண்ணற்ற தகவல்கள் வெவ்வேறு ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களின் கவலை குறித்து குறிப்பாக ஒரு இனைய தளத்தில் வெளியிட்ட செய்தியை, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கவனத்துக்கு பலரும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ,மூலம் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் உள்ள தகவல்கள் இதோ…

தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கோவிட் காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது. கோவிட் நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட் நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

கோவிட் காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து , ‘நேர் காணல்’களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர் காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ள சசிகலா… தனது விடுதலை பற்றியும் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி ஃபைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.

கர்நாடக நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 14-2-2017 தேதிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில், சட்டப்படியாக குயூரிட்டி மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அதுபற்றி திரு. டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்” என்று கூறியுள்ளார் சசிகலா. இதன் மூலம் தனக்கும் தினகரனுக்கும் இடையே இடைவெளி ஏதும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் சசிகலா, ” தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணைய தள செய்தியைப் படித்துப் பார்த்தேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு இணைய தள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது.

உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய்ச் செய்தியை உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் வணங்கும் இறைவன் ஆசியோடும்.என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக் கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ள சசிகலா அதிமுக தொண்டர்களின் வாழ்த்து தனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த இணையதள செய்தி ஊடகத்தில், சமீபத்தில் ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும், என் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும், தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டுல நீங்க இனி ஓய்வு எடுக்கணும். உங்களை எல்லோரும் ரொம்ப புண்படுத்தியதாக இனிமேல் வர காலமாவது நீங்கள் நிம்மதியா இருக்கணும் என என்னிடம் சொன்னதாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஒரு சதவிகித உண்மை கூட இல்லை. ஜெய் ஆனந்த் என்னை வந்து சந்திக்கவே இல்லை* என்றும் குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

அத்துடன் “அந்த இணையதள செய்தி தவறான செய்தி என்றும் அதை வெளியிட்டோர் மீது சட்டப்படியான நடவடிக்கையை தாங்கள் எடுக்கவும்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அளித்த பேட்டியில் “சசிகலாவின் உடல்நிலை குறித்த செய்திகள் ஊடகத்தின் வழியாக வெளியாகின. அதுகுறித்து பலரும் என்னிடம் கேள்வி எழுப்பியதால், சிறைத்துறை கண்காணிப்பாளர் வாயிலாக நான் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பதில் கடிதம் எழுதியுள்ளார்” என்று மேற்படி தகவலை விவரித்தார்.

error: Content is protected !!