ஓ.பன்னீர் அணியும் சசிகலா அணியும் இணையப் போகிறது?

ஓ.பன்னீர் அணியும் சசிகலா அணியும் இணையப் போகிறது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தற்போது அதிமுக அம்மா அணி (சசிகலா), அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி (ஓ.பன்னீர்செல்வம்) என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் பெயர், சின்னம், இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. கட்சி, சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்ய உள்ளது. இதற்கிடையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் வீட்டில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

admk apr 17

இந்த சூழலில், டிடிவி தினகரன் கடந்த தமிழ்ப் புத்தாண்டு நாளன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தற்போதைய சிக்கல் களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தான் காரணம் என்று கூறிய மூத்த அமைச்சர்கள் சிலர், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர். ஆனால், தினகரன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தினகரன், ‘‘சில விஷயங்கள் குறித்து கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தது உண்மைதான்’’ என்று கூறினார்.

இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் உடலுக்கு தஞ்சையில் நேற்று காலை அஞ்சலி செலுத்திய அமைச்சர் தங்கமணி, பிறகு திருச்சிக்கு வந்து ஹோட்டலில் தங்கினார். அவரை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார். அப்போது, திருச்சி எம்.பி.யான ப.குமார் மற்றும் அதிமுக அம்மா அணி முக்கிய நிர்வாகிகளை அமைச்சர்கள் இருவரும் நேரில் அழைத்தும் பேசினர். மேலும் சிலரிடம் தொலைபேசி மூலமாகவும் பேசியுள்ளனர். பின்னர் இருவரும் ஈரோடு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

அமைச்சர்களின் இந்த திடீர் ஆலோசனை குறித்து கேட்டபோது அதிமுக அம்மா அணி முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. இது கட்சிக்கு நல்லதல்ல. எனவே, கட்சியை மீட்க வேண்டும் என்றால், தற்போது உள்ள இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக ஓபிஎஸ் தரப்பினரிடம் மட்டுமின்றி, அதிமுகவைச் சேர்ந்த பிற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்தும் நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிப்பதால், மிக விரைவில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது. மேலும், இரட்டை இலை சின்னமும் மீட்கப்படும். ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகத்தில் யார், யார் இருப்பது என்பது குறித்து இரு அணிகளும் இணைந்தபிறகு முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்சியில் எதிர்ப்பு வலுத்து, பிரிந்த இரு அணியினரும் மீண்டும் சேர்வதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துவரும் பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தினகரன் இன்று பெங்களூரு செல்கிறார்.

error: Content is protected !!