October 16, 2021

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா கட்சி ஆதரவு!

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா கட்சி ஆதரவளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அதிமுக அம்மா கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19–ந் தேதி அன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்குமாறு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து தலைமை கழக நிர்வாகிகள், தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமனதாக பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுகிற விதமாக பாரதீய ஜனதாவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஏகமனதாக ஆதரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே ராம்நாத் கோவிந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியும் அவரை ஆதரிக்க முன்வந்துள்ளதால், அவரது வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.