September 20, 2021

ஜெயலலிதா சிலை ; சீர் செய்யப்படும்! – அமைச்சர் தகவல்!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, “நேற்றைய தினம் சிலையை திறந்தது அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க விஷயமாகும். சிலை அவரைப் போல் இல்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வலைத்தளங்களில் வரும் கருத்துக்களின் அடிப்படையில் சிலையில் சில மாற்றங்கள் செய்வதற்கு தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று(பிப்ரவரி 24) திறக்கப்பட்டது. இந்தச் சிலையை சிற்பி எஸ்.வி.வி. பிரசாத் வடிவமைத்திருந்தார். மிகவும் தடபுடலாக நடைபெற்ற விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஒருசேர சிலையை திறந்து வைத்தனர். சிலையை திறந்தவுடன் இதுதொடர்பான மீமீஸ்கள், ட்ரோல்கள் வர தொடங்கின. இதற்கு காரணம், சிலை ஜெயலலிதாவைப் போல் இல்லை என்பது தான். சிலையில் உள்ள முகம் அவரைப் போல் இல்லை என பலரும் கருத்துக்களை பதிவிட, அதுவே ட்ரெண்டானது.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் , “ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதற்குப் பதில் வளர்மதிக்குச் சிலை வைத்துள்ளனர்” என்றும் ‘ அம்மா சிலைக்கு மாடலாக எடப்பாடி மனைவி போட்டோவை கொடுத்து விட்டர்கள்’ என்று நாஞ்சில் சம்பத் போன்றோர் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து சிலையை மறு சீரமைப்பு செய்ய அதிமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று(பிப்ரவரி 25) செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதாவின் சிலையை நேற்று திறந்துவைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. சிலை தொடர்பாக சமூகவலைதளத்தில் விமர்சனம் எழுந்துள்ளதால் சிலையில் சில மாற்றங்களைச் செய்ய கட்சி தலைமை விரைவில் முடிவு செய்யும்” என்று விளக்கமளித்துள்ளார்.

இதேபோல், ஜெயலலிதாவின் சிலையில் உள்ள முகம் மறுசீரமைப்பு செய்யப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் முழு சிலையும் நன்றாக இருந்தாலும், இன்னும் மெருகூட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவைப் போலவே தத்ரூபமாக சிலை வடித்துள்ளார் சிற்பி என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.ஜெயலலிதா சிலை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நெல்லையில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “அம்மாவைப் போல் அழகாக சிலை தத்ரூபமாக இருக்கிறது. சிங்கநிகர் தலைவி தலைமை கழகத்துக்கு வரும்போது எப்படி கையசைப்பரோ அப்படி உள்ளது. சிற்பி சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது