மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி தினகரன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை 35 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திய தினகரன், ‘‘அடுத்த 60 நாட்களில் இரு அணிகளும் இணைய வேண்டும். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன்’’ என்று அறிவித்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்தனர். அப்போது இரு அணிகளும் இணைவது தொடர்பாக பிரதமர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இது தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற டிடிவி தினகரனும் திவாகரனும் சந்தித்துப் பேசினர். இருவரும் ஒன்றாக பேட்டி அளித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும்  தினகரன் அறிவித்திருந்த 60 நாள் கெடு, ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அவர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவார் என்றும் தினகரன் தரப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வரவுள்ளதாகவும், அதற்காக மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாயின.

இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை நிர்வாகிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. கட்சி அலுவலகத்துக்கு தினகரனை வரவிடாமல் தடுப்பது, அணிகள் இணைப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் 21-ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்றார். அதன்பின் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் அவ்வப்போது தலைமைச் செயலகத்திலேயே ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது அதிமுக எம்.பி.க்கள் சிலர் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்வரானார். வெங்கய்ய நாயுடு, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்கள் வகித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக சில மூத்த அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போதுள்ள சில அமைச்சர் களை கட்சிப் பொறுப்புக்கு மாற்றவும் பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சரவையை மாற்றுவது குறித்து பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசித்து வருகிறார்.

இம்முறை, கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அமைச்சரவை யில் இடம் தர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள் ளது. எனவே, அக்கட்சியின் எம்.பி.க்கள் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் ஆதரவு அளித்துள்ள அதிமுக எம்.பி.க் களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை தற்போது மாநிலங்களவை, மக்களவையில் 50 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 பேர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். இரு தரப்பும் பாஜகவை ஆதரித்துள்ள நிலையில், வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் அதிமுக எம்.பி.க்களுக்கு இடம் அளிக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.சமீபத்தில் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ்ஸிடம் பேசியுள்ளதாகவும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக விரைவில் முதல்வர் பழனிசாமி அறிவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.ஆனால் இத்தகவலை டி.டி.வி. தினகரன் மட்டும் ம்றுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!

error: Content is protected !!