அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அரை நூறாண்டான 50-வது வருட, பொன் விழா ஆண்டான 2022-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட நாம் இப்போதே நம் பணிகளைத் தொடங்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான எடப்பாடிபழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல் வருமாறு: அக்டோபர் 17. உலகத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாள். அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். தீய சக்தி தி.மு.க.-வின் ஆட்சியிலே திக்குத் தெரியாமல் தவித்த ஏழை, எளியோரை எழுச்சி பெறச் செய்த நாள். தி.மு.க.-வின் ஊழல் ஆட்சியிலே இருளில் மூழ்கிப் போன தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் பரவிய நாள். தி.மு.க.-வின் அராஜக ஆட்சியில் கண்ணீரில் மிதந்த தாய்க்குலத்தின் முகங்களில் மகிழ்ச்சி தொடங்கிய நாள். தாழ்ந்திருந்த தமிழர்களின் வாழ்வை தலை நிமிரச் செய்ய தர்மதேவன் தேர்ந்தெடுத்த நாள். தமிழர்கள் தான் என் வாழ்வு. தமிழ் மொழி தான் என் சுவாசம். தமிழ் நாட்டின் உயர்வு தான் என் லட்சியம் என்ற கொள்கை முழக்கத்தோடு நம் தமிழ் மண்ணுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட எம்.ஜி.ஆரால், மக்கள் நலனுக்காக அ.தி.மு.க. என்ற எழுச்சிமிகு இயக்கத்தை தொடங்கிய நாள்.

தி.மு.க.-வின் அநீதியை அழிக்க தமிழர்களின் கரங்களில் வாளாக இருக்கும் இயக்கம். தி.மு.க.-வின் ஊழலை ஒழிக்க தொண்டர்கள் கரங்களில் வேலாக இருக்கும் இயக்கம். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் இதயங்களில் நிறைந்து விட்ட இயக்கம். தொண்டர்களின் ரத்த நாளங்களில் கலந்து விட்ட இயக்கம் 48-வது ஆண்டிலே அடி யெடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் விசுவாசத் தொண்டர்கள் இந்த இனிய நாளை திருநாளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா வின் மறைவிற்குப் பிறகு, நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில்தான் கருணாநிதியை முதல்வராக்கினார் எம்ஜிஆர். அதற்கு மாறாக கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தினார். கொடுங் கோலாட்சி நடத்தினார். ஊழல் ஆட்சி நடத்தினார். அராஜக ஆட்சி நடத்தினார். லஞ்ச, லாவண்ய ஆட்சி நடத்தினார். அவரை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கினார். கருணாநிதி செய்த சதி, தி.மு.க.-வுக்கு போதாத காலமாக ஆனது.

தமிழக மக்களுக்கு பொற்காலம் ஆனது. அ.தி.மு.க. தோன்றியது. தீய சக்தியின் ஆட்சியை வீழ்த்தி, தெய்வ சக்தியின் ஆட்சி மலர்ந்தது. எம்.ஜி.ஆர். என்ற மனித தெய்வத்தால், ஜெயலலிதா இதய தெய்வம் தமிழக அரசியலில் தோன்றினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, கழகத்தின் எழுச்சி அடங்கி விடும், அ.தி.மு.க. தொண்டர்கள் ஒடுங்கி விடுவார்கள் என்று தீயசக்தி துள்ளிக் குதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் வீரத்தால், விவேகத்தால் அந்த தீயசக்தி தி.மு.க.-வுக்கு மரணஅடி கிடைத்தது. எம்.ஜி.ஆரை உயிராக நேசித்த தமிழக மக்களைப் பாதுகாக்க, அவரது விசுவாசத் தொண்டர்களை பாதுகாக்க, வீர நாச்சியாராக வீறுகொண்டு எழுந்தார் ஜெயலலிதா. தி.மு.க.-வை திசை தெரியாமல் ஆக்கினார். தெறிக்க விட்டார். தமிழக மக்களை மகிழ்ச்சியில் மிதக்க விட்டார்.

மக்களால் நான். மக்களுக்காகவே நான் என்று தவ வாழ்க்கை வாழ்ந்த தங்கத் தலைவி. அம்மா என்றால் அன்பு. அறிவு, ஆற்றல் என்று புரிய வைத்த அதிசயத் தலைவி. ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக கழகத்தை உருவாக்கிய ஒப்புவமை இல்லாத உன்னதத் தலைவி. எதிரிகளால் நெருங்க முடியாத இரும்புக் கோட்டையாக துரோகிகளால் அழிக்க முடியாத எஃகுக் கோட்டையாக கழகத்தை கட்டிக் காத்த காவியத் தலைவி. தமிழக மக்களுக்கா கவே திட்டங்கள் தீட்டிய திராவிடத் தலைவி. அந்தத் திட்டங்கள் மூலம் அள்ளி, அள்ளிக் கொடுத்த அற்புதத் தலைவி. எனக்குப் பின்னாலும், அ.தி.மு.க. நூறாண்டுகள் நிலைத்து நிற்கும் என்று வீர முழக்கமிட்ட வித்தகத் தலைவி. எம்.ஜி.ஆரின் லட்சியங்களை நிறைவேற்ற சபதம் எடுத்துக் கொண்ட சரித்திரத் தலைவி. மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் மக்களாட்சி தத்துவம் தான் மிகச் சிறந்த ஆட்சி முறை எனத் தெளிவு பெற்று உலகெங்கும் மக்களாட்சி என்னும் புரட்சிப் பூ மலர்ந்த நூற்றாண்டு 20-ஆம் நூற்றாண்டு.

அரசியல் விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ, சமூக மறுமலர்ச்சியும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்படுதல் அவசியம் என்ற விழிப் புணர்வை உலகம் பெறத் தொடங்கியதும் கடந்த நூற்றாண்டில்தான். அந்த விழிப்புணர்வை நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்படுத்திட உழைத்த எண்ணற்றோரின் பாதையில், தந்தை பெரியார் உருவாக்கிய சிந்தனைகளின் அரசியல் வடிவமாக புதிய இயக்கம் கண்டார் பேரறிஞர் அண்ணா. அவர் வெளிப்படுத்திய தமிழ்ச் சிந்தனை, திராவிட அரசியலாகவும், தமிழ் பண்பாட்டின் அரணாகவும், அரசியலாகவும் வேரூன்றியது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் சம வாய்ப்பு பெற்று மகிழ்ச்சியுடனும், தலை நிமிர்ந்தும் வாழ அண்ணா வழியில் 47 ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான் அ.தி.மு.க.

திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான சமூக நீதியையும், மதச் சார்பின்மையையும், ஏற்றத் தாழ்வுகளற்ற சமூகம் படைக்கும் லட்சியத்தையும், பெண் விடுதலையும், சுயமரியாதையும் நிலைநாட்டப்படுவதையும் கொள்கைகளாக கொண்டு எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை வளர்த்தார். ஆட்சிப் பொறுப்பு தனது கரங்களில் வந்தவுடன் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை, எளிய மக்களின் உயர்வுக்கும் பெண்கள் சம உரிமை பெறுவதற்கும் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தினார். அரசியல் ரீதியாக எத்தனை, எத்தனையோ சோதனைகள் வந்த போதும், இயற்கை பேரிடர்கள் பல ஏற்பட்டு அல்லலுற்ற போதும், பொருளாதார நெருக்கடிகள் நேர்ந்த போதும் துணிவுடன் அவற்றையெல்லாம் அஞ்சாமல் எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்று மெல்ல மெல்ல அனைவரும், ஆம் நம்மை எதிர்த்தோரும் கூட ஏற்று பாராட்டும் வகையில் வெற்றிகரமாக இயக்கத்தையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி தேசிய சராசரியைவிட பல புள்ளிகள் உயர்ந்து 8 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இது விரைவில் 9 சதவீதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக தமிழ்நாடு மாறியுள்ளது. சீன அதிபரும், பிரதமரும் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு தமிழகத்தின் நிர்வாகத் திறமையை உலகுக்கு பறை சாற்றியுள்ளது. சட்டம் – ஒழுங்கு பராமரிப்பில் தமிழ் நாடு தலைசிறந்த மாநிலம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலத்திட்டப் பணிகள் பலவற்றை அயராது நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஏராளமான பணிகளைச் செய்து மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் நம் பணிகள் தொடர்கின்றன.

இந்தப் பொன்னான தருணத்தில் நம் முன் இருக்கும் அரசியல் பணிகளை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம். இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைத்திடுவோம். விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிலை களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்ற நமது பணிகளை உடனடியாகத் தொடங்குவோம். ஒற்றுமையுடன் அரசியல், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப் போம். நமது இயக்கத்தின் லட்சியங்களை மனதிற்கொண்டு அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்வோம். அனைத் திற்கும் மேலாக எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்ட போது, அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்ததைப் போல, அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு, பொன் விழா ஆண்டான 2022-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட நாம் இப்போதே நம் பணிகளைத் தொடங்குவோம். கட்சிப் பணிகளில் எங்களுடன் தோளோடு, தோள் நின்று அனைத்து வகையிலும் உழைத்து வரும் அ.தி.மு.க. உடன்பிறப்புகளின் உழைப்பு ஒரு போதும் வீண் போகாத வண்ணம் தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும் என்ற உறுதி மொழியை அளிக்கிறோம்”என்று அந்த அறிக்கையில் முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!