அதா,,,நீ எனும் பலூன் உடைந்து விட்டது!

அதா,,,நீ எனும் பலூன் உடைந்து விட்டது!

ரண்டுநாட்களாக பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளின் விசிபிலிட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. காரணம் எளிதானது என்னுடைய சமீபத்திய பதிவுகள் ஒன்றிய அரசுக்கும் அதன் முதலாளி நண்பர்களுக்கும் எதிரான விமர்சனங்களை கொண்டிருந்தது. விசிபிலிட்டிதான் சமூக வலை தளங்களின் புதிய ஆயுதம் என்று சில நாட்களுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன். யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தோதான விஷயங்கள்தான் இனி டைம்லைனில் வரும். ஆளும் பீஜேபீ அதைத்தான் செய்கிறது. வெறும் சமூக வலைத்தளங்களில் மாத்திரமல்ல. இந்தியா முழுக்கவே இன்று செய்திகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. என்ன மாதிரி செய்திகள் விவாதிக்கப்பட வேண்டும், யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் முகநூல் ட்விட்டர் டைம்லைனைப்போல மட்டுறுத்தப்படுகின்றன.

அதனால்தான் டிமோனின் சாம்ராஜ்யத்தின் இரும்புக்கோட்டையை வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டு பேர் கிளம்பி வந்து தகர்க்க வேண்டியதாகி இருக்கிறது. பி பி சி அந்த ஆவணப்படமும், இன்டேன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் செய்திருக்கிற சேதங்களின் விளைவுகளை வருங்காலங்களில் கண்கூடாக பார்க்க முடியும். ஏற்கனவே அதாநீ எனும் பலூன் உடைந்துவிட்டது. அடுத்து டிமோன்தான்.

இந்த நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் ஒன்று புதிதானவை அல்ல. இங்கே எல்லாருக்கும் குறிப்பாக ஊடக வட்டத்தில் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் ஏன் இங்கே யாருமே இதைப்பற்றி எதையும் எழுதவோ ஆவணப்படமாக ஆக்கவோ முன்வரவில்லை. இதை நம்மால் ஏன் செய்யமுடியவில்லை. ஊடகங்களை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தனக்கு கட்டுப்படாத ஊடகங்களை அது வழக்குகள் மூலமும் மற்ற நெருக்கடிகளின் வழியும் மண்டியிடச்செய்கிறது. அல்லது தன்னுடைய முதலாளி சகாக்களின் வழி ஊடகங்களை கைப்பற்றுகின்றனர். ஒருபக்கம் பொய் செய்திகளை பரப்புகிற ரிபப்ளிக் போன்ற ஊடகங்களை உருவாக்குவது. இன்னொரு பக்கம் என்டிடிவி மாதிரி ஊடகங்களை கைப்பற்றுதல் என ஒரு செயல்திட்டம் நம் கண்ணெதிரே செயல்படுத்தப்படுகிறது. ஊடக முதலாளிகள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

ஊடக சுதந்திரம் என்பது கடந்த எட்டாண்டுகளில் இந்தியாவில் இல்லாமல் ஆகிவிட்டது. 180 நாடுகள் கொண்ட ஊடக சுதந்திரத்திற்கான பட்டியலில் இந்தியா சென்ற ஆண்டு பிடித்த இடம் 150. இது முந்தைய ஆண்டைவிட 2 இடம் கீழே. ஆண்டுதோறும் அது இன்னும் இன்னும் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது. யோசித்துப்பாருங்கள். பி பி சி நிறுவனத்தின் ஆவணப்படம் போல ஒன்றை இந்தியாவில் ஒரு நிறுவனம் பண்ணியிருந்தால் அந்த நிறுவனத்தை அதில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை என்ன கதி ஆக்கி இருக்கும் இந்த ஒன்றிய அரசு. பொய் வழக்குகள் பாய்ந்திருக்கும், வருமான வரித்துறை ரெய்ட் அடித்திருக்கும். பலகோடி நஷ்ட ஈட்டு வழக்குகள் பாய்ந்து நிறுவனத்தையே உண்டு இல்லை என பண்ணியிருப்பார்கள். பி பி சியை அப்படி பண்ணமுடியாது. இந்த ஆவணப்படத்தில் காட்டப்படுவது பொய் என்று ஏன் பீஜேபீயோ அல்லது ஒன்றிய அரசோ ஒரு வழக்கு கூட தொடுக்கவில்லை. வெறும் தடை மட்டும் போடப்படுவது ஏன்?

உபியில் செய்தி சேகரிக்க சென்ற சித்திக் காப்பானை ஜெயிலில் போட்டு 28மாதம் கழித்து இப்போதுதான் விடுவித்திருக்கிறார்கள். இப்படி கடந்த எட்டு ஆண்டுகளில் ஜெயிலில் போடப்பட்ட பத்திரிகையாளர் எண்ணிக்கை 292 (2022 தகவல்). இப்போது அதிகரிதிருக்கலாம். இன்.பெர்க் மாதிரி ஒரு இந்திய நிறுவனம் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். எகானமிக் டைம்ஸ் மீது இதே அதாநீ பற்றி செய்தி வெளியிட்டது என வழக்கு தொடுத்தார்கள். ஆனால் ஏன் அதாநீ நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்தின் மீது வழக்குத்தொடுக்கவில்லை? விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒருவன் நம் மீது பொய்யாக குற்றஞ்சாட்டினால் நாம் என்ன செய்வோம் அவன் மீது புகார்தானே கொடுப்போம், ஏன் அதாநீயும் டிமோனும் வழக்கு தொடுக்காமல் பம்முகிறார்கள்?

பி பி சி ரிப்போர்ட்டும் இன்ட்.பெர்க் ரிப்போர்ட்டும் இந்தியர்களின் உதவி இல்லாமல் நடந்திருக்குமா.. இங்கே எல்லா தகவலும் இருக்கிறது. ஆனால் குரல் இல்லை. இப்போதும் கூட இந்த தகவல்களுக்கு எதிராகத்தான் ஊடகங்க்ள செய்தி பரப்புகின்றன. இருப்பினும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிற இந்த குரல் டிமோனின் பும்பாவை சாய்த்துவிட்டது. அனேகமாக அடுத்து அது டிமோனையும் சாய்க்கும்போல்தான் இருக்கிறது.

அதிஷா வினோத்

error: Content is protected !!