அடங்க மறு சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

அடங்க மறு சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டிகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம் என்றார் வசனகர்த்தா விஜி.

இந்த படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் மிக ஆழமானவை, மிக முக்கியமானவை. நாட்டில் இன்று பேச வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறது, அது மக்களை மிகச்சிறப்பாக சென்றடைந்திருக்கிறது என்றார் நடிகர் அழகம் பெருமாள்.

நான் எந்த படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்த படத்துக்கு இயக்குனரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன். மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

இந்த கதையை இயக்குனர் கார்த்திக் 7 வருஷம் முன்பே என்னிடம் சொன்னார். அப்போது சொன்ன கதையை இந்த காலத்துக்கும் ஏற்றவாறு கொடுப்பது ஒரு கலை. அதை சிறப்பாக செய்திருந்தார் கார்த்திக். ஒரு நல்ல படம் நல்ல நோக்கத்தோடு வந்தால் அதை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்றார் படத்தொகுப்பாளர் ரூபன்.

முதல் படத்திலேயே என்னை வெற்றிப்பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்த படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

இந்த படம் ஒரு குழு முயற்சி. இந்த கதை மீது என்னை விட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம் தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார். என்னை வழி நடத்துகிறார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம், அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குனர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள், இது தான் படத்தின் உண்மையான வெற்றி என்றார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம். நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில்  இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.

இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

error: Content is protected !!