March 21, 2023

டேனி படத்தை ZEE 5 மூலம் ஏன் ரிலீஸ் செய்கிறோம்? – வரலட்சுமி ஓப்பன் டாக்!

தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொலையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை.

இந்த வழக்கை விசாரிக்கும் போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும். இதில் வேல. ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:

மக்கள் செல்வி நடித்துள்ள படத்தில், நாயின் பெயர் தலைப்பாக இருக்கிறதே?

நாய் என்ன நம்மை விட குறைவா. அந்த டேனி என்கிற நாய் தான் படத்தின் ஹீரோ. இதில் இன்ஸ்பெக்டராக நான் நடித்துள்ளேன். நான் எந்தக் கதாபாத்திரத்துக்கும் யாரிடமும் கற்றுக் கொள்வதில்லை. இந்தப் படத்தில் காவல்துறை உடையணிந்தவுடன், இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளேன்

டேனி படத்தில் பிடித்த விஷயம்?

நாய்க்குட்டியுடன் நடித்தது தான் பிடித்த விஷயம். கதை ரொம்ப அழகாக இருந்தது. ஒரு கொலை நடக்கிறது, அதை எப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி கண்டுபிடிக்கிறார்கள் என்ற கதை. தேவையில்லாமல் எந்தவொரு காட்சியுமே இருக்காது.

ஓடிடியில் மற்ற மொழிகளில் பல்வேறு ஜானர்களில் படங்கள் வருகிறது. ஆனால், தமிழில் நாயகிகள் சார்ந்த படங்கள் மட்டுமே வருகிறதே?

தமிழ் சினிமா எப்போதுமே கொஞ்சம் பின்னோக்கித் தான் இருக்கிறோம். முதலில் நாயகியை மையப்படுத்திய படங்களே இல்லை. அப்படின்னா என்ன என்று கேட்டார்கள். இப்போது நாயகியை மையப்படுத்திய படங்கள் வந்திருக்கிறது. ஒரு மாற்றத்துக்கு மறுத்தால் நாம் இன்னும் பின்னோக்கி சென்றுவிடுவோம். மாற்றம் வரும் போது, நாமும் அதோடு மாற பழகிக் கொள்ள வேண்டும். நாயகர்கள் படங்களுக்கு ஓப்பனிங் மார்க்கெட் என்றெல்லாம் இருக்கும். நாயகிகள் படங்கள் இன்னும் அந்த மார்க்கெட் அளவுக்கு வரவில்லை. அது தவறு என்று சொல்ல முடியாது. ஹாலிவுட், பாலிவுட்டில் எல்லாம் நாயகியை மையப்படுத்திய படம் என்றெல்லாம் கிடையாது. அங்கு அனைத்துமே படம் தான். தென்னிந்திய திரையுலகும் விரைவில் அந்த நிலையை அடையும். நாயகர்களோ, நாயகிகளோ அதே உழைப்பு தான் கொடுக்கிறோம். அப்படி பிரிக்க வேண்டிய அவசியமில்லை.

தெனாவட்டான பெண், கோபமான பெண் என்ற இமேஜ் நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் உருவாகிறதே..

வெளிநாட்டில் டூயட், நாயகனுடன் காதல் என்றெல்லாம் நடிப்பதற்கு பல பேர் இருக்கிறார்களே. நானும் அதை பண்ண வேண்டுமா. என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைப்பதை விரும்புபவள் நான். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறிதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

திரையரங்கை மிஸ் பண்ணுகிறீர்களே…

கண்டிப்பாக ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நாங்கள் படம் பண்ணுவதே திரையில் காண்பதற்காக தான். கைதட்டல்கள், சிரிப்பு சத்தம், விசில் சத்தம் என அனைத்துமே திரையரங்கில் தான் காண முடியும். அந்த அனுபவமே அலாதியானது. ஆனால், மாற்றம் மட்டுமே உறுதி. மக்களுக்காகத் தானே படம் பண்ணுகிறோம். அந்த விதத்தில் மக்களிடம் ‘டேனி’ படத்தைக் கொண்டு சேர்க்க ZEE 5 மூலம் வெளியிடுகிறோம்.

சம்பளக் குறைப்பு பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறைப்பீர்களா?

இங்கு எனக்கு சம்பளமே குறைவாகத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியை டாப் ஹீரோயின்களிடம் தான் கேட்க வேண்டும்.

https://twitter.com/varusarath/status/1289134802004783105